Published:Updated:

மீனவர்கள் உயிர் குடித்த இலங்கைக் கடற்படை - இந்தியாவில் பிறந்தும் அநாதையான அகதியின் குழந்தை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீனவர்  சாம்சன் டார்வினின் மனைவி - குழந்தை.
மீனவர் சாம்சன் டார்வினின் மனைவி - குழந்தை. ( உ.பாண்டி )

`இலங்கை கடற்படையினர்தான் எங்கள் மீனவர்களைத் தாக்கியும் தீயிட்டும் கொலை செய்திருக்க வேண்டும். எனவேதான் மீனவர்கள் உடல்களை இந்தியா கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்யவும், இதற்குக் காரணமான இலங்கை கடற்படையினர்மீது கொலை வழக்கு பதியவும் வலியுறுத்தினோம்’ - மீனவர்கள்.

இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்த பின்னரும்கூட இலங்கைப் படையினரின் ரத்தப் பசி இன்னும் அடங்கவில்லைபோலும். அதனால்தான், அவ்வப்போது தமிழக மீனவர்களின் உயிரையும் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இம்முறை சிக்கிய மீனவர்கள் நான்கு பேரின் முகத்தை முழுமையாகக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த மீனவர்கள்

கடந்த 18-ம் தேதி காலை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கோவா என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியாஸ், மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டனத்திலிருந்து சென்ற இவர்கள், அன்று இரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் வலைகளைப் பாய்ச்சியபடி மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகைத் துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்துள்ளனர். பயந்துபோன மீனவர்கள் படகைக் கப்பல் அருகில் நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு படகிலிருந்த மீனவர்களை விசாரணை என்ற பெயரில் நீண்டநேரமாகத் தாக்கியுள்ளனர். இதற்கிடையே கப்பலின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகின் பின்பகுதி கடல் கொந்தளிப்பின் காரணமாக கப்பலில் மோதி சிறு சேதம் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு கடற்படையின் மற்றொரு கப்பலை வரச் செய்து மீனவர்களின் படகை முட்டி கடலில் மூழ்கடித்துள்ளனர். படகிலிருந்த மீனவர்கள், தாங்கள் கொண்டு சென்றிருந்த தொலைத் தொடர்பு கருவி மூலம் `படகு கடலில் மூழ்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள்' என இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், மூழ்கும் படகின் அருகிலேயே இலங்கை கடற்படையினர் நின்றுகொண்டிருந்ததால் அவர்களைக் காப்பாற்றச் செல்ல முடியாமல் கரைக்குத் திரும்பிய சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து மறுநாள் காலை மூழ்கிய படகிலிருந்த மீனவர்களைத் தேடி மாற்றுப் படகுகளில் கடலுக்குச் சென்றனர். அன்று மாலை வரை தேடியும் மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் 20-ம் தேதி காலை மீனவர்களைத் தேடிச் சென்றவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி, மீனவர்கள் பத்திரமாக இருப்பதாகக் கூறி தேடுதல் பணியில் ஈடுபடவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், மீட்புக்குழு மீனவர்கள் அன்று இரவு கரை திரும்பிய நிலையில், கடலில் மூழ்கிய மீனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், அந்த உடல்களை எடுத்துச் செல்லும்படியும் இந்திய கடலோரக் காவல்படையினருக்கு இலங்கைக் கடற்படையினர் தகவல் கொடுத்துள்ளனர்.

கதறும் மீனவர் குடும்பங்கள்.
கதறும் மீனவர் குடும்பங்கள்.
உ.பாண்டி

ஆனால், இந்திய அரசு உத்தரவில்லாமல் மீனவர்கள் உடலைத் தாங்கள் பெற முடியாது என இந்திய கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே மீனவர்களின் உடல் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தகவல் மீனவர்கள் மத்தியில் பரவ அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தநிலையில், மேலும் இரு மீனவர்களின் உடலை மீட்டிருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடலிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் இரு மீனவர்களின் உடலும் தீக் காயங்களுடன் காணப்படவே, இலங்கை கடற்படையினர்தான் மீனவர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து கடலில் வீசியதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

படகில் எடுத்து வரப்பட்ட மீனவர் உடல்கள்
படகில் எடுத்து வரப்பட்ட மீனவர் உடல்கள்
உ.பாண்டி

இது குறித்து விவரித்த விசைப்படகுகள் மீனவர் சங்க மாவட்டத் தலைவர் சேசுராஜ்,``கடந்த 2011-ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை இந்தியா வென்றதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை கொடூரமாகக் கொலைசெய்து கடலில் வீசினர். அதன் பின்னர் பிரிட்ஜோ என்ற மீனவ இளைஞரைச் சுட்டுக் கொன்றனர். இப்போது, தங்கள் கப்பலில் மோதியதாகக் கூறி படகைக் கடலில் மூழ்கடித்தது மட்டுமன்றி, அதில் சென்ற நான்கு மீனவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு கடலில் மிதந்த மீனவர் உடல்களை மீட்டதாக நாடகம் ஆடுகின்றனர்.

சேசுராஜ்
சேசுராஜ்
உ.பாண்டி

ஒருவர் கடலில் மூழ்கினால் அவரது உடல் மூன்று நாளைக்குப் பிறகுதான் கடலின் மேற்பகுதிக்கு வரும். அதுவும் மூழ்கிய இடத்திலேயே இல்லாமல் வேறு பகுதியில்தான் மிதக்கும். அவ்வாறு மிதந்து வரும் உடலில் தோல் பகுதி மட்டுமே சேதமாகியிருக்கும். ஆனால், இலங்கைக் கடற்படையினர் மீட்டதாகச் சொல்லப்படும் நான்கு மீனவர்களின் உடல்களிலும் ரத்தக்காயம் மட்டுமல்ல; பலத்த தீக் காயங்களும் காணப்படுகின்றன.

மீனவர்கள் குடும்பத்தினர் மறியல்.
மீனவர்கள் குடும்பத்தினர் மறியல்.
உ.பாண்டி

எனவே, இலங்கை கடற்படையினர்தான் எங்கள் மீனவர்களைத் தாக்கியும் தீயிட்டும் கொலை செய்திருக்க வேண்டும். எனவேதான், மீனவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்யவும், இதற்குக் காரணமான இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதியவும் வலியுறுத்தினோம்'' என்கிறார்.

ஆனால், மீனவர்களின் கோரிக்கையான மறு உடற்கூறு ஆய்வு செய்யப்படாமலேயே நான்கு மீனவர்களின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், மெசியாஸ் உடலைப் பெறுவதற்காக தங்கச்சிமடத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள், பெண்கள் காத்திருந்தனர். ஆனால், உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் அங்கே நிறுத்தப்படாமல் நேராக கல்லறைத் தோட்டத்துக்குச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மறியலில் மீனவர்கள் - குடும்பத்தினர்.
மறியலில் மீனவர்கள் - குடும்பத்தினர்.
உ.பாண்டி

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. நிலைமை விபரீதமடைவதை அறிந்த போலீஸார், மெசியாஸ் உடலை மீனவர்கள் திரண்டிருந்த பகுதிக்கு எடுத்து வந்தனர். அங்கு அவரது முகத்தைக்கூடப் பார்க்கவிடாதபடி வாகனத்தில் வைத்தபடியே மீண்டும் கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதால் அங்கு அமைதி திரும்பியது.

இலங்கைக் கடற்படையால் 4 மீனவர்கள் உயிரிழப்பு; இரு உடல்கள் மீட்பு! - கொதிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

உயிரிழந்த நால்வரில் ஒருவரான சாம்சன் டார்வின், இலங்கைத் தமிழர். 2009-ல் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவத் தாக்குதலிலிருந்து உயிர் பிழைக்க அகதியாக தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்தவர். அகதி முகாமில் தங்கியிருக்கும் விஜயலட்சுமியைக் கடந்த ஆண்டு காதலித்து மணமுடித்தார். 20 நாள்களுக்கு முன்னர்தான் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

மீனவர்  சாம்சன் டார்வினின் மனைவி - குழந்தை.
மீனவர் சாம்சன் டார்வினின் மனைவி - குழந்தை.
உ.பாண்டி

அந்தக் குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்சக்கூட முடியாத நிலையில் சாம்சனின் உயிரை இலங்கை கடற்படையினர் பறித்துவிட்டதாகக் கூறி கதறித் துடிக்கிறார் விஜயலட்சுமி. இலங்கையில்தான் பல நூறு குழந்தைகள் பெற்றோரை இழந்து பரிதவிக்கின்றன. சாம்சனின் உயிர் பறிப்பால் தமிழக அகதி முகாமில் பிறந்த குழந்தைக்கும் தொடர்கிறது இந்த சோகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு