ஆம்புலன்ஸ் ஊழியர் அதிகப் பணத்தைக் கேட்டதால், தாயின் சடலத்தை மகன் தனது தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஜால்பாய்குரி கிராந்தி பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர், தன்னுடைய 72 வயது தாய் லக்ஷ்மிராணி திவானிற்கு ஏற்பட்ட மூச்சுப் பிரச்னையால் புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாய் உயிர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்களை ராம்பிரசாத் அணுகியபோது, அவர்கள் 3,000 ரூபாய் கேட்டுள்ளனர். கையில் பணம் இல்லாத நிலையில் தாயின் சடலத்தைத் துணியால் போர்த்திக் கொண்டு, தானே தனது தோளில் சுமந்து செல்ல ஆரம்பித்து விட்டார். கூடவே அவரின் வயதான தந்தையும் நடந்து சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கும் இவரின் வீட்டிற்கும் 50 கிலோமீட்டர் தொலைவு இருந்த நிலையில், சில கிலோ மீட்டர்கள் வரை கடந்து சென்றுவிட்டார். விஷயம் அறிந்து சேவை நிறுவனம் ஒன்று வாகனத்தை அனுப்பி உதவி உள்ளது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் மேலதிகாரி கல்யாண் கான் கூறுகையில், ``இது எதிர்பாராத ஒரு நிகழ்வு. அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் உண்டு. இறந்தவரின் குடும்பத்தினருக்கு இது தெரியாமல் இருக்கலாம். நோயாளி, உதவி மையத்தைத் தொடர்பு கொண்டிருந்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் இச்சம்பவம் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இலவச சேவைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான செயல்முறை குறித்து மக்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
உடல்களைக் கொண்டு செல்ல அவசர நேரத்தில், ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகப் பணம் கேட்பது அநியாயமானது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. எனவே, மக்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவது குறித்து விழிப்போடு இருப்பது அவசியம்!