Published:Updated:

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை: கனல் கண்ணன் சர்ச்சைப் பேச்சு... இரு தரப்பு விளக்கம்!

கனல் கண்ணன்

``திமுக-வினர் மேடையில் பேசும் எத்தனையோ வீடியோக்களைக் காட்டுகிறேன். கனல் கண்ணன் பேசியது பெரிய தப்பு என்றால், இவர்கள் பேசியதெல்லாம் பெரிய பாவம்.” - அண்ணாமலை

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை: கனல் கண்ணன் சர்ச்சைப் பேச்சு... இரு தரப்பு விளக்கம்!

``திமுக-வினர் மேடையில் பேசும் எத்தனையோ வீடியோக்களைக் காட்டுகிறேன். கனல் கண்ணன் பேசியது பெரிய தப்பு என்றால், இவர்கள் பேசியதெல்லாம் பெரிய பாவம்.” - அண்ணாமலை

Published:Updated:
கனல் கண்ணன்

இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாதமாக ‘இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்’ என்ற தொடர் பிரசாரத்தை நடத்திவருகிறது. இந்தப் பிரசார பயணம் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மதுரவாயலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரைப்படச் சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி கலை, இலக்கியப் பிரிவு மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் பேசும்போது, ``ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள், கடவுள் நம்பிக்கையோடு கடவுளை தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீரங்கம் கோயிலைவிட்டு வெளியே வருகின்றனர். ஆனால், வெளியே வந்ததும், கடவுள் மறுப்புக் கொள்கை பேசியவரின் சிலை இருக்கிறது. அந்தச் சிலையை என்றைக்கு உடைத்து அப்புறப்படுத்துகிறோமோ, அன்றைக்குத்தான் இந்துக்களுக்கான உண்மையான எழுச்சி நாள்” என்று பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதையடுத்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறுச் செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``யூடியூப் சேனல் ஒன்றில் ஒருவர் சிவபெருமானை அவமானப்படுத்துகிறார், அசிங்கப்படுத்துகிறார். தில்லை நடராஜருடைய நடனத்தை கேலி, கிண்டல் செய்கிறார். இது தொடர்பாக பாஜக-வினர் 42 இடங்களில் புகார் கொடுத்துள்ளனர். ஓர் இடத்திலும் புகாரை வாங்கவில்லை. உச்சபட்சமாக அதிக சைவ மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் சிவபெருமானை அவமதித்துவிட்டு பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கிறார்கள். முதல்வரும் அவர்களைச் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து அனுப்பிவைக்கிறார். அதைக் கருத்துச் சுதந்திரமென்று சொல்கிறீர்கள்.

ஆனால் கனல் கண்ணன் ஒரு வார்த்தையைச் சொல்கிறார். உடனே 10 போலீஸார் அவரது வீட்டில். கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும்போது திமுக-வினர் மேடையில் பேசும் எத்தனையோ வீடியோக்களைக் காட்டுகிறேன். கனல் கண்ணன் பேசியது பெரிய தப்பு என்றால், இவர்கள் பேசியதெல்லாம் பெரிய பாவம். மாநில அரசின் செயல்பாடு இதில் சரியாக இருக்க வேண்டும். `ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே அந்தச் சிலை இருக்க வேண்டுமா?’ என 1,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் 1,000 பேரும் `இருக்கக் கூடாது’ என்றுதான் சொல்வார்கள். பொது இடங்களில் இந்தச் சிலையை வைத்திருக்கலாம். மக்கள் கடவுளை நம்பி வரும் இடத்தில் அந்தச் சிலை தேவையா... இதைத்தான் கனல் கண்ணன் பேசிய பேச்சாகப் பார்க்கிறேன்” என்றார்.

இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான கு.ராமகிருட்டிணன், “1973-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் நகராட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வெங்கடேஷ் தீட்சிதர், ‘பெரியாருக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டு சிலைவைக்க இடம் ஒதுக்கினார். அந்த வார்டு கவுன்சிலராக இருந்தவர் ராஜகோபால். இருவருமே தீவிர பக்தர்கள், ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் பெரியாருக்குச் சிலைவைக்க இடமும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் சிலையை உடனடியாக வைக்க முடியாமல், 1996-ம் ஆண்டுதான் சிமென்ட் சிலை வைக்க முடிகிறது. அதையும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் உடைத்துவிடுகின்றன. அதன் பிறகு மீண்டும் இன்றைக்கு இருக்கிற வெண்கலச் சிலை 2006-ம் ஆண்டு வைக்கப்படுகிறது. எனவே பாஜக, இந்து முன்னணி போன்றோர் கலவரத்துக்கும், தங்கள் அரசியல் பயன்பாட்டுக்கும் இதுபோல் பேசுவது வழக்கம். ஆனால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் சாதாரண மக்களோ, கோயிலுக்குச் செல்லும் மக்களோ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கு.ராமகிருட்டிணன்
கு.ராமகிருட்டிணன்

அப்படிப்பட்ட சூழலில் இவர்கள் மட்டும்தான் தொடர்ச்சியாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது கனல் கண்ணன் எனும் நபர் ஒரு பரபரப்பு அரசியலுக்காகப் பேசியிருக்கிறார். பேசியவரும் ‘ஆம் நான் பேசினேன்’ என்று தைரியமாக நிற்க முடியாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். அவர் யாரைப் பற்றிப் பேசினாரோ, அங்கு சிலையாக இருக்கும் பெரியாரோ 19 முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். ஒரு முறைகூட ஜாமீன் கேட்டதில்லை. குற்றம் செய்யவில்லை என்றும் சொன்னது கிடையாது. செய்த செயல், பேசிய பேச்சு நியாயமானது. மக்களுக்கானது என்று சொன்னதை ஒட்டியே சிறைக்குச் சென்றிருக்கிறாரே தவிர ஓடி ஒளிந்தது இல்லை. அதேபோல், ‘குறைந்த தண்டனை கொடுங்கள் என்று கெஞ்ச மாட்டேன். உங்களுக்கு என்னை தண்டித்தால் எவ்வளவு திருப்தியாக, சந்தோஷமாக இருக்குமோ அந்த தண்டனையைக் கொடுங்கள்’ என்று விரும்பிக் கேட்டு வாங்கிச் சென்றவர் பெரியார். அப்படிப்பட்டவர் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கோழைத்தனமாக, அவர்கள் தலைவர் சாவர்க்கர்போலவே ஓடி ஒளிந்து மன்னிப்புக் கேட்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்” என்றார்.