Published:Updated:

12,000 வருட இந்திய வரலாற்றை ஆராய குழு: தமிழர் ஒருவர் கூட இல்லை! - கொதிக்கும் அரசியல் கட்சிகள்

இந்திய பண்பாடு - வரலாறு, 'இந்துத்துவ வரலாறு' என்று நிரூபிக்கவே மத்திய அரசு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ''இந்திய வரலாறு என்றாலே, அது இந்துத்துவ வரலாறுதான்'' என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியப் பண்பாட்டை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்திருக்கும் குழு, இந்திய அரசியல் களத்தை மீண்டும் பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியப் பண்பாடு-வரலாற்றை ஆய்வு செய்யப்போகும் இந்தக் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒரு நபர்கூட இடம்பெறவில்லை என்றும், குழுவில் பெரும்பான்மையாக ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது திராவிடர் கழகம்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, '12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களோ மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளோ இல்லை. இப்படிப்பட்ட ஒரு குழு எப்படி சரியான ஆய்வை மேற்கொள்ளும்?' என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகோ
வைகோ

இதற்கிடையே, 'இந்திய வரலாற்றை மத ரீதியான வரலாறாக மாற்றியமைக்கப்போகும் திட்டத்தோடு இப்படியொரு குழுவை அமைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு' என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முற்போக்காளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய வரலாற்றுப் பேராசிரியர் கருணானந்தன்,

''இந்தியப் பண்பாட்டையே 'இந்துப் பண்பாடு-வைதீகப் பண்பாடு' என்று சொல்வதுதான் இந்துத்துவவாதிகளின் கோட்பாடு. அதற்கான அடிப்படையாக சமஸ்கிருதத்தை முன்வைப்பதோடு, மற்றப் பண்பாடுகளெல்லாம் இதனுடைய கிளைகள்தான் என்றும் சொல்வார்கள். திலகர் காலத்திலிருந்தே இந்த கருத்தியலைத்தான் வலியுறுத்தியும் வருகிறார்கள். மற்றபடி மொழிவழி தேசியத்தையோ பண்பாட்டையோ அவர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பௌத்தம், சமணம் போன்றவற்றையும்கூட, இந்து தத்துவத்தினுடைய மாறுபட்ட பிரிவுகள் என்று அவர்கள் வசதிக்கேற்றபடி மாற்றிச் சொல்வார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமான வரலாறு என்பதே ஆங்கிலேயர் காலத்தில்தான் ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள், மதத்தின் அடிப்படையில் வரலாற்றைத் தொகுக்கவில்லை. ஏனெனில், மதம் என்பது பண்பாட்டின் ஒரு தொகுதிதானே தவிர, மதமே முழுமையான பண்பாடாக இருக்கமுடியாது.

பண்பாடு என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே வருவது. வரலாறு, இயற்கை சூழல், மொழி என மனித சமுதாயம் நாகரிக வளர்ச்சி அடைய அடைய, பண்பாடும் சேர்ந்தே மாறிக்கொண்டு வரும். எனவே உலக அளவில், நிலையான பண்பாடு என்ற ஒன்றே கிடையாது. உதாரணமாக ஐரோப்பிய பண்பாட்டை 'கிறிஸ்தவ பண்பாடு' என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், பாலஸ்தீனம், ஜெருசலேமில் இருக்கிற பண்பாடு லண்டனில் கிடையாது. எனவே, மதம் என்பது பண்பாட்டின் ஒரு கூறு மட்டுமே.

கருணானந்தன்
கருணானந்தன்

ஆனால், 'மதம் மட்டுமே பண்பாடு' என்ற ஒரே பார்வையில் அணுகுவது மதத் தீவிரவாதிகளின் வேலை. அந்தவகையில், வேதம் என்ற ஒற்றை மூலத்திலிருந்துதான் இந்தியப் பண்பாடு உருவாவதாக இந்துத்துவா வாதிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதை நிறுவுவதற்கான எந்த ஆதாரமுமோ விளக்கமோ அவர்களிடம் கிடையாது. அதிகபட்சமாக, 'காசி, ராமேஸ்வரம், கைலாயம் போன்ற புண்ணிய ஸ்தலங்கள் இந்தியா முழுக்க இருக்கின்றன' என்று மதம் - நம்பிக்கை சார்ந்த விஷயங்களை முன்வைக்கிறார்கள்.

இந்தப் புண்ணிய ஸ்தலங்கள் சில நூறு வருடங்களுக்கு முன்புவரை கிடையாது. அவர்கள் சொல்கிற வேதத்திலேயே கைலாயம், ராமேஸ்வரம் கிடையாது. ரிக் வேதத்தில் காசியும் கிடையாது. ஆக, வைதீகமே அனைத்துக்கும் மூலம் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. எனவே, பின்னாளில் வந்து சேர்ந்த இந்த புண்ணிய ஸ்தலங்கள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது. அதனால்தான் சிந்து வெளி நாகரிக ஆய்வுகளின்படி ஆரியருக்கு முற்பட்ட பண்பாடு ஒன்று இங்கே இருந்திருக்கிறது என்றும் அது வேத பண்பாடு கிடையாது என்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அறிஞர்களும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரியப் பண்பாட்டின் தொடக்கத்தில் அவர்களுக்குச் சிலையை வழிபடும் பழக்கம் கிடையாது. கோயில் கிடையாது. இயற்கை சக்திகளை மட்டுமே பல தெய்வங்களாகப் பார்த்தனர். அந்த தெய்வங்களை பிராமணர்கள் உச்சரிக்கும் மந்திரங்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் ஆரியர்களது மத நம்பிக்கைக்கான அடிப்படை. ஆனால், சிந்துவெளியில் உருவக் கடவுளர்களைப் பார்க்கமுடியும். அந்தவகையில், இன்றைக்கு நாம் வழிபட்டு வரக்கூடிய சிவன் - லிங்கம், காளை, திரிசூலம் போன்ற சின்னங்கள் சிந்துவெளியில் கிடைத்திருக்கின்றன. இந்த சின்னங்கள் எல்லாம் ஆரியர்களால் இழிவு செய்யப்பட்ட சின்னங்கள். ரிக் வேதத்திலும் அதனை மிகக் கடுமையாக இழிவு செய்யக்கூடிய வாசகங்கள் உள்ளன.

சிந்து சமவெளி
சிந்து சமவெளி

அடுத்து ஸ்தூபி, விகாரம் என்பனபோன்ற பிரமாண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆரியர்களுக்கு முன்பே சமண, பௌத்த சமயங்கள் உருவாக்கியவை. இவற்றுக்கு இணையான கோயில்கள் என்று அந்தக் காலத்தில் எதுவும் கிடையாது. ஏனெனில், யக்ஞம் எனப்படும் தீயை வளர்த்து அதில் உயிர்களைப் பலியிட்டு மந்திரம் சொல்வதுதான் ஆரியர்களின் பண்பாடு. இதை போகிற இடங்களில் எல்லாம் ஆரியர்கள் செய்துவந்தார்கள். எனவே, அவர்களுக்கென்று நிலைத்த இடமோ கோயிலோ எதுவும் கிடையாது. ஆனால், நிலைத்த வாழ்க்கையிலிருந்த திராவிடர்களின் கோயில்களை, பிற்காலத்தில் ஆரியர்கள் தங்கள் கைகளுக்குள் எடுத்துக்கொண்டனர். இந்த மாற்றங்கள் எல்லாம் 8-ம் நூற்றாண்டில்தான் ஏறக்குறைய முழுமையடைகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட கதைகள்தான் புராணங்களாகின்றன. இந்த புராணக் கடவுளர்களை 6 வகை சமயங்களாக சங்கராச்சாரியார் பிரித்தார். இப்படி இந்திய வரலாற்றில் மதம் என்ற கூறை மட்டும் தனியே பிரித்துப் பார்த்தால், ஆரியர்கள் நமது திராவிடப் பண்பாட்டை எப்படியெல்லாம் சிதைத்து, 'இந்து மதம்' என்ற சாதியக் கட்டமைப்புகளால் தங்களை மேலோங்கியவர்களாக முன்னிறுத்திக் கொண்டார்கள் என்ற உண்மைகள் தெளிவாக விளங்கும்.

இந்தப் பொய்யுரைகளையெல்லாம் இந்தியப் பண்பாடு - வரலாறு என்று ஆய்வுபூர்வமாக நிறுவுவதாகச் சொல்லி, புராணக் கதைகளை ஆதாரங்களாகக் காட்டுவார்கள். 'சனாதனம் வாழ்வியல் முறை' என்று சொன்னால், அதன் மூலம் மக்களின் வெறியுணர்வை ஊட்டமுடியாது. எனவே, மத ரீதியாகத்தான் மக்களை வெறியூட்ட முடியும். அதற்காக பண்பாட்டு ஆய்வு என்ற பெயரில் இந்துத்துவப் பண்பாட்டை முன்னிறுத்த திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். இதன் நோக்கம், ஒரே தேசம், ஒரே மதம் என்ற வெறியுணர்வை மக்களிடையே ஊட்டி, அதன் பலனாக அரசியல் அதிகாரத்தை அடைவதுதான்.

வரலாற்று ஆவணங்களின்படி, ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தது கி.மு 1500-க்குப் பிறகுதான். ஆனால், இப்போது அதற்கும் முந்தைய 10 ஆயிரம் வருடங்களிலிருந்து பண்பாட்டை ஆராயப்போவதாக அவர்கள் அறிவித்திருப்பதே, நமது சிந்துவெளி நாகரிகத்தையும்கூட அவர்களது கணக்கில் சேர்த்துக்கொள்ளும் மறைமுக சூழ்ச்சிதான். ஆக, எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாக வேதம்தான் இருந்தது... 'வேதமுதற்றே உலகு!' என்று நிறுவப் பார்க்கிறார்கள்.

கீழடி அகழ்வாராய்ச்சி
கீழடி அகழ்வாராய்ச்சி

இதற்காக பல கடவுளர்களையும் ஒரே பொதுக் கடவுளாக, அனைவருக்கும் பொதுவான ஒரு மதமாக மாற்றி நிறுவப் பார்க்கிறார்கள். இந்தப் பொது மதம் - பொதுப் பண்பாடு என்பதே ஒற்றைத் தேசியம் என்பதை வலியுறுத்துவதற்கான அடிப்படையாக திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இந்தக் கருத்து திரிபுக்காகவே இப்போது பண்பாட்டு ஆய்வு என்ற பெயரில், குறிப்பிட்ட ஒரு சார்பான நபர்களை, அதிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மட்டுமே உறுப்பினர்களாக நியமித்திருக்கிறார்கள். இவர்கள், 'ஒற்றைதேசம்; ஒற்றைப் பண்பாடு' என்ற கோட்பாட்டை பண்பாடாக மாற்றும் முயற்சியைத் தொடர்வார்கள். உண்மையில் அப்படியான எந்த முகாந்திரமும் இங்கே இல்லை என்பதால், பொய்யாக ஆவணங்களையும் பொய்யுரைகளையும் இந்தக் குழுவினர் உருவாக்குவார்கள்.

அதாவது, சமஸ்கிருத புராண இதிகாசங்களிலிருந்து இந்தப் பண்பாடு படைக்கப்படும். தமிழ்க் கடவுளர்களுக்கு அங்கே இடம் இருக்காது. இந்த ஒற்றைப் பண்பாட்டில், பழங்குடியினப் பண்பாடு, பல்வேறு மொழிகள் என பன்முகத் தன்மைகளை ஒழித்து, அனைத்தும் இதனுடைய கிளைகளே என்று நிறுவுவார்கள். இதன்மூலம், 'இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியர்கள் அல்லர்' என்ற இவர்களது முழக்கத்தை அதிகாரபூர்வமாக நிறுவுவதற்கு சாதகமான சூழலை இந்த ஒற்றைப் பண்பாடு ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதற்காகத்தான் இந்திய புண்ணியத் தல வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தப் புண்ணிய தலங்களை வழிபடாதவர்களை அந்நியர்கள் என்று முத்திரை குத்துவார்கள். ஆக, மக்களிடையே ஒற்றை மதம் சார்ந்த பண்பாட்டை வலியுறுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் பன்னெடுங்காலமாக தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இப்போது நவீன காலத்துக்கு ஏற்ப நவீன திரிபுகளை செய்வதற்கு இந்தப் பண்பாட்டு ஆய்வை மேற்கொள்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக அமெரிக்காவிலுள்ள ஃபோர்டு ஃபவுண்டேசனுடைய நிதியையும் பயன்படுத்துகிறார்கள். மற்ற மத பணத்தை அந்நியப் பணம் என்று குறை சொல்பவர்கள் இப்போது அதே அமெரிக்க அந்நிய நிறுவனமான ஃபோர்டு ஃபவுண்டேசன் பணத்தில்தான் இந்த ஆய்வையே மேற்கொள்கிறார்கள்.

கருணானந்தன்
கருணானந்தன்

தமிழ்ப் பண்பாடு - வரலாற்றில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. தொல்பொருள் ஆய்வு மாநிலக் கட்டுப்பாட்டில் வரவேண்டும். மத்தியக் கட்டுப்பாட்டில் இருந்தால், மாநிலங்களின் தனித்தன்மையை வெளியே வரவிடாமல், சதி செய்துவிடுவார்கள். அதனால்தான் கீழடி போன்ற நமது தொன்மையான வரலாற்றை நிரூபிக்கவும்கூட நாம் போராட வேண்டியுள்ளது'' என்றார் விளக்கமாக.

`கத்திக்கொண்டேயிருந்தால், சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது!' - கங்கனாவை விமர்சித்த ஊர்மிளா

இதற்கிடையே, மத்திய பா.ஜ.க அரசு, குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்த ஆராய்ச்சிக் குழுவை அமைத்திருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசனிடம் பேசினோம்,

''இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதாக இருந்தால், 'இந்திய வரலாறு என்று சொன்னாலே அது இந்துத்துவ வரலாறுதான்!' ஏனெனில், இந்துத்துவ வரலாறு என்றால் என்ன என்பதிலேயே இங்கே நிறைய பேருக்கு குழப்பம் இருக்கிறது. அவர்கள் நினைப்பதுபோல், இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, அது பண்பாடு சார்ந்த கருத்து.

இல.கணேசன்
இல.கணேசன்

இந்தக் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர்கூட நியமிக்கப்படவில்லையே என்று நீங்கள் கேட்டிருப்பது நியாயமான கேள்வி. தமிழ்நாட்டிலும்கூட வரலாற்று அறிஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரது பெயரை நானே முன்மொழியக் காத்திருக்கிறேன். எனவே, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைக்கும் நானும் ஆதரவு தெரிவிக்கிறேன். மற்றபடி மதம் சார்ந்த வரலாறு-பண்பாட்டை திரிக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்த செய்திகளை முழுமையாகப் படித்தறிந்துவிட்டு உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதிலை கட்டாயம் சொல்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம்... ''இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டை மாற்றி எழுதுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து குழு அமைத்திருப்பதான செய்திகள் எதையும் நான் இதுவரை படித்தறியவில்லை. அப்படி உங்களுக்கு ஏதேனும் தகவல்கள் வந்திருந்தால், எனக்கும் அந்தத் தகவலை அனுப்பிவையுங்கள். நான் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுகிறேன்'' என்றார். அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நமக்கு கிடைத்த செய்தி விவரங்களை அவரது செல்பேசி எண்ணுக்கு அனுப்பிவைத்துள்ளோம். அமைச்சர் தரப்பிலிருந்து விவரங்கள் அளிக்கப்பட்டால், அதையும் இந்தக் கட்டுரையுடன் இணைத்துக் கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு