Published:Updated:

`எதார்த்தத்தை அரசு புரிந்து கொள்ளவில்லை!' - நெருங்கும் `நீட்' தேர்வால் கலங்கும் மாணவர்கள்

நீட் தேர்வு
நீட் தேர்வு ( மாதிரிப் படம் )

`கடந்த காலங்களில் நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு நடந்த கெடுபிடிகளைப்போல, கொரோனா காலத்தில் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள நேரிடுமோ?’ என்ற அச்சமும் பெற்றோர் மத்தியில் உள்ளது.

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், அதிகப்படியான பதற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள் மாணவர்கள். `ஏழு மாநில அரசுகளைப்போல தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும்' என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஏழு மாநில அரசுகள்!

ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகள், செப்டம்பர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான `நீட்’ தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. `கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவதில் நியாயம் இல்லை. எனவே, தேர்வுகளை ரத்து செய்யுங்கள்' என பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

 விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, ஜூலை மாதம் நடத்தப்படுவதாக இருந்த நீட், ஜே.இ.இ தேர்வுகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார். அப்போதே, `செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்' எனவும் கூறியிருந்தார். `இந்த இடைப்பட்ட மாதங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவருவதால் தேர்வுகளை நடத்த வேண்டுமா?' என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.

`கடந்த காலங்களில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு நடந்த கெடுபிடிகளைப்போல, கொரோனா காலத்தில் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள நேரிடுமோ?' என்ற அச்சமும் பெற்றோர் மத்தியில் உள்ளது.

பதற்றத்தில் மாணவர்கள்!

பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் பேசினோம். இவர் மகள் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுதவிருக்கிறார். ``மார்ச் 24 அன்று ப்ளஸ் டூ இறுதித் தேர்வு நடந்தது. அன்றைய தினமே கொரோனா பாதிப்பு தொடங்கிவிட்டது. ப்ளஸ் டூ தேர்வு முடிந்த பிறகு நீட் தேர்வுக்காக வீட்டிலேயே தயாராகிவருகிறார் என் மகள். இப்போது தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் வேறு. வீட்டைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமல் தொடர்ந்து தேர்வுக்கு படித்தபடியே இருக்கிறார். யாருடனும் என் மகளால் இயல்பாகப் பேச முடியவில்லை.

நீட்
நீட்
மாதிரிப் படம்

தவிர, பாண்டிச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தொடக்க காலங்களில் பயமில்லாமல் இருந்தோம். இப்போது அருகில் உள்ளவர்களுடன்கூட பேச முடியவில்லை. வில்லியனூரில் நீட் மையம் அமைந்தாலும் அங்கு செல்வதில் சிரமம் இல்லை. ஆனால், தேர்வு மையத்துக்கு வெளியே மூன்று மணி நேரம் பெற்றோர் காத்திருக்க வேண்டும். மேலும், என் மகளால் மூன்று மணி நேரம் இயல்பாகத் தேர்வு எழுத முடியுமா எனவும் தெரியவில்லை.

நீட் தேர்வைத் தள்ளிப்போடுவதைவிட ரத்து செய்வதே நல்லது. காரணம், தேர்வு தள்ளிப் போனால், அடுத்த சில மாதங்களுக்குப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது இன்னும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். மாணவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்’’ என்றார் வேதனையுடன்.

நெறிமுறைகளில் குழப்பம்!

நீட், ஜே.இ.இ தேர்வுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளிலும் மாணவர்கள் அதிகப்படியான குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். ``கொரோனா தொற்றின் காரணமாக, தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுவிட்டன. கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குத் தேர்வு எழுத வரக்கூடிய மாணவர்கள் எங்கு தங்குவார்கள் என்பதற்கு அரசிடம் எந்த பதிலும் இல்லை. `தங்கும் விடுதிகளில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது’ என விடுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா: மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ, நீட் தேர்வுகள்! - தேதியை அறிவித்த அமைச்சர்

காய்ச்சலைக் கண்டறியும் தெர்மல் ஸ்கேனரை வைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், தேர்வு மையத்தில் எதாவது ஒரு மாணவருக்குக் காய்ச்சல் கண்டறியப்பட்டால், அந்த மாணவருக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்தும் தகவல் இல்லை. பொதுப் போக்குவரத்து இல்லாததால், பல மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும். அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தவில்லை. தனிமனித இடைவெளி, முகக்கவசம், சானிடைஸர் எனப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒரே இடத்தில் கூடி தேர்வு எழுதும்போது தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?" என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்புகின்றனர் பெற்றோர்கள்.

12 சதவிகித அதிர்ச்சி!

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் ரவீந்திரநாத், ``இன்றைக்குள்ள யதார்த்த சூழலை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. நீட் தேர்வை நடத்துவதில் உறுதியாக உள்ளனர். அதேநேரம், இப்போதுள்ள பெருந்தொற்று காலத்தில், தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று சொல்வது சரியானதல்ல. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 12 முதல் 13 சதவிகிதம் குறைந்துவிட்டது.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

கிராமப்புற மாணவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல், தேர்வுக்குத் தயாராவதிலும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அரசு கோச்சிங் சென்டர்களும் முறையாக நடக்கவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கை பெருகிவிட்டது. தேர்வு எழுத வருபவர்கள் மூலமாக மற்றவர்களுக்குக் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அவர்கள் மூலமாக வயதானவர்களுக்குப் பரவினால், இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஓர் ஆண்டாவது மத்திய அரசு, ப்ளஸ் டூ அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

இந்தசூழலில், நீட் தேர்வைத் தள்ளிவைக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநில அமைச்சர்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைக்க முடியாது!- உச்சநீதிமன்றம்... மக்கள் கருத்து? #VikatanPollResults

இதேபோல், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூலை மாதமே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பதாகப் பதிலளித்தார்.

`மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும்' என உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு