Published:Updated:

``ரயில் நிலைய முகப்பை மாற்றக்கோரினேனா..''- அவதூறு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி விளக்கம்!

Su venkatesan M.P
Su venkatesan M.P

சமூக வலைதளங்களில் மதுரை ரயில் நிலையம் குறித்து வெளியான போலிச் செய்திகள் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

`மதுரை ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ள கோபுரம் ஒரு குறிப்பிட்ட மத அடையாளமாக இருப்பதால், அதை அகற்றத் தென்னக ரயில்வே மேலாளரிடம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை’ - இப்படியொரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Su venkatesan M.P
Su venkatesan M.P

ஆனால், இந்தச் செய்தியை மறுக்கும் விதமாக, அவருடைய ட்விட்டர் பக்கத்தில், `அவதூறுகளுக்கு எதிராக உண்மையை உயர்த்திப் பிடிப்போம். தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் உறுதியுடன் குரல்கொடுப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சு.வெங்கடேசனைத் தொடர்புகொண்டோம். ``மதுரை, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதில், சில கோரிக்கைகளை முன்வைத்தோம். `தேஜஸ் ரயிலுக்கு `தமிழ்ச்சங்க ரயில்’ எனப் பெயரிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், 16 எம்.பி-க்களின் கையெழுத்துகளைக் கொண்ட கோரிக்கை மனுவாகக் கொடுக்கப்பட்டது.

Su venkatesan facebook post
Su venkatesan facebook post

தேஜஸ் ரயிலுக்குப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கோரியதை பலதரப்பினரும் ஆதரித்தனர். மதுரை மக்களும் வெகுவாக வரவேற்றனர். ஆனால், அவதூறு உண்டாக்கும் வகையில் இதுபோன்ற போலிச் செய்திகளைப் பலரும் பரப்பி வருகின்றனர்.

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கையிலெடுத்து நாங்கள் போராடும்போது அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் இப்படிப் புரளியைப் பரப்புகின்றனர். இது வதந்திகளின், அவதூறுகளின்மீதான ஆட்சி. ஆனாலும், இவற்றையெல்லாம் உண்மைகளால் எதிர்கொள்வோம்” என்றார்.

அவதூறுகளுக்கு எதிராக உண்மையை உயர்த்திப் பிடிப்போம்.
சு.வெங்கடேசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சித்திரைத் திருவிழா குறித்து விமர்சித்துப் பேசியதாகவும் சு.வெங்கடேசன் மீது அவதூறாகச் செய்தி பரவியதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒருமுறை இவர் சொன்னதாகப் போலிச் செய்தி இணையத்தில் உலவிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு