Published:Updated:

`பினராயி விஜயனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிர்பந்திக்கிறார்கள்’ - ஸ்வப்னா ஆடியோ பரபரப்பு

 ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

`நான் சிவசங்கரனுடன் யு.ஏ.இ சென்று சி.எம்-முக்காக பணம் சம்பந்தமாகப் பேரம் பேசியதாகக் கூறும்படியும், அப்படி முதல்வருக்கு எதிராகச் சாட்சி சொன்னால் என்னை அப்ரூவராக மாற்றுவதாகவும் கூறி விசாரணை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள்’ என அந்த ஆடியோவில் ஸ்வப்னா கூறியிருக்கிறார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்திவருகின்றன. இந்த வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கேரள சி.பி.எம் அரசுக்கு ஸ்வப்னா சுரேஷ் வழக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துவருகிறது. கேரள எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும் பினராயி விஜயன் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இந்தநிலையில் திருவனந்தபுரம் அட்டகுளங்கரச் சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

அந்த ஆடியோவில் ஸ்வப்னா, ``நான் சிவசங்கரனுடன் யு.ஏ.இ சென்று சி.எம்-முக்காக பணம் சம்பந்தமாகப் பேரம் பேசியதாகக் கூறும்படியும், அப்படி முதல்வருக்கு எதிராகச் சாட்சி சொன்னால், என்னை அப்ரூவராக மாற்றுவதாகவும் கூறி விசாரணை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள். நான் அப்படிச் சொல்ல மாட்டேன் எனக் கூறினேன், இருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நான் அளித்த வாக்குமூலத்தை என்னைப் படிக்க விடாமல் கையெழுத்து வாங்குகிறார்கள்" என அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார்.

இது குறித்து சி.பி.எம் கேரள மாநிலத் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``மத்திய அரசு ஏஜென்சிகள் முதலமைச்சரைக் குறிவைப்பது ஸ்வப்னா சுரேஷின் ஆடியோ மூலம் தெரியவருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அப்ரூவராக மாற்றி முதல்வருக்கு எதிராகச் சாட்சி கூற மத்திய ஏஜென்சிகள் முயல்கின்றன" எனக் கூறப்பட்டிருக்கிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இது ஒருபுறம் இருக்க, `ஜெயிலில் இருப்பவரின் ஆடியோ வெளியே வந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியிருக்கிறார். `ஸ்வப்னா சுரேஷ், தனது வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதி இருக்கிறது. அதேபோல சிறையிலுள்ள போனிலிருந்து வெளியில் பேசவும் அனுமதி உண்டு. அப்படிப் பேசியதைப் பதிவுசெய்து வெளியிட்டிருக்கலாம்’ என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவரும் நிலையில், ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு