Published:Updated:

`முன்பதிவு படிவத்தில் மலையாளம்'!- `தமிழ்மொழி' புறக்கணிப்பு சர்ச்சையில் திருச்சி ரயில்வே

திருச்சி ரயில்வே சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இம்முறை ரயில் பயணிகளுக்கான முன்பதிவு படிவத்தில், `தமிழ்' புறக்கணிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது.

திருச்சி ரயில்வே
திருச்சி ரயில்வே

மத்திய அரசு இந்தியைச் சிறப்பாக அமல்படுத்தியதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு சமீபத்தில் விருது வழங்கியது. மேலும், தமிழக இளைஞர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவரை அதிகளவு தேர்வு செய்த விவகாரம் என இவை இரண்டு சர்ச்சைகளில் திருச்சி ரயில்வே கோட்டம் சிக்கியது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகளுக்கான முன்பதிவு படிவத்தில் தமிழ்மொழி புறக்கணித்த சர்ச்சை எழுந்துள்ளது.

திருச்சி ரயில்வே சந்திப்பு
திருச்சி ரயில்வே சந்திப்பு

ரயில்வே துறையில், வழக்கமாக இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் அலுவலக மொழியாக இருந்தாலும்கூட, பயணிகளின் வசதிக்காக பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குவது வழக்கம்.

மேலும், தென்னக ரயில்வே துறையிலுள்ள அறிவிப்புப் பலகை, ஊர் பெயர் மற்றும் ரயில் அறிவிப்புகள் பயணிகளுக்கான முன்பதிவு படிவம் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாமல் தமிழிலும் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வழங்கப்படும் ரயில் முன்பதிவு விண்ணப்பங்களில் தமிழ்மொழி இல்லை. மாறாக அந்தப் படிவங்களில் தமிழுக்குப் பதிலாக மலையாளம் இடம்பெற்றுள்ளது.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள், ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும், ஆனால் அதே படிவத்தை பூர்த்தி செய்து தரும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரயில் பயணிகள் பலத்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர். பலருக்குப் படிவத்தில் உள்ள இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் மொழிகள் தெரியாததால், தெரிந்தவர்களைத் தேடி அலையும் சூழல் நிலவுகிறது.

மளையாள ரயில் முன்பதிவு படிவம்
மளையாள ரயில் முன்பதிவு படிவம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பயணிகள் சிலர், ``கடந்த சில வருடங்களாகவே ரயில்வே துறை, தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்வில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனாலும், பெரும்பான்மையாக வடமாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில், முன்பதிவு படிவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த தமிழ் மொழி படிவத்தைத் தவிர்த்துவிட்டு, தமிழ்மொழி அல்லாத மொழிகள் இடம் பெற்றுள்ள படிவங்களை வழங்குவது எவ்விதத்தில் சரி? இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பழைய முறைப்படி முன்பதிவுப் படிவத்தில் தமிழ் மொழி இடம்பெற வழி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

திருச்சி ரயில்வே துறை அதிகாரிகளோ, ``ரயில் முன்பதிவுப் படிவம் சென்னையிலிருந்து திருச்சி ரயில்வே கேட்டதற்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட படிவங்கள் தவறுதலாகக் கேரளாவுக்கான படிவங்கள் மாறிவந்து இருக்கலாம். திட்டமிட்ட செயல் இல்லை" என்றனர்.

மாற்றப்பட்ட  ரயில் முன்பதிவுப் படிவம்
மாற்றப்பட்ட ரயில் முன்பதிவுப் படிவம்

இந்நிலையில், தொடர் எதிர்ப்புகளையடுத்து, திருச்சி ரயில்வே நிலைய அதிகாரிகள், தற்போது தமிழ் இடம்பெற்றிருக்கும் படிவங்களைப் பயணிகளுக்கு வழங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் மொழிப்போர் தியாகி விராலிமலை சின்னச்சாமி உள்ளிட்ட தியாகிகள் எதிர்ப்பைப் பதிவு செய்ய தீக்குளித்த திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்வதுதான் வேதனை.