Published:Updated:

கச்சைகட்டும் சர்ச்சைக் கருத்துகள்... அரசியலாகும் பாடத்திட்டம்... வெளியானது யார் ஆட்சியில்?

பொன்முடி
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்முடி

இப்படியொரு பாடத்திட்டம் படிக்காமலேயே அப்ரூவல் செய்யப்பட்டதா இல்லை திட்டமிட்டே இப்படி எழுதப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பாடங்களில், தி.மு.க மற்றும் பொதுவுடமை கட்சிகளைப் பற்றித் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால், `அந்தப் புத்தகம் வெளியானதே கடந்த தி.மு.க ஆட்சியில்தான்’ என்று பகீர் கிளப்புகிறார் அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்!

கச்சைகட்டும் சர்ச்சைக் கருத்துகள்... அரசியலாகும் பாடத்திட்டம்... வெளியானது யார் ஆட்சியில்?

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களின் தொலைதூரப் படிப்புக்கான பாடப்புத்தகங்களில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.ஏ சமூக அறிவியல் பாடத்தில், ‘இந்தியக் கட்சிகள், குறிப்பாக மதங்களுக்கு எதிரான தி.மு.க மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் பொதுமக்களை வாக்குவங்கிகளாக மாற்றிவருகின்றன. அவை, மக்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. மேலும், சிறுபான்மையினரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரத்தை உருவாக்கி, வன்முறை வெடிக்கும்போதும், அதைக்கூடக் கண்டிக்காமல் இருக்கின்றன’ என்று எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் விசாரித்தோம். ஆனால், முறையான பதில் இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள்மீது விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் காட்டமாக. அப்போது செய்தியாளர் ஒருவர், புத்தகம் வெளியான ஆண்டு குறித்து கேட்க, “கடந்த 2005-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது” என்றார் பொன்முடி.

கச்சைகட்டும் சர்ச்சைக் கருத்துகள்... அரசியலாகும் பாடத்திட்டம்... வெளியானது யார் ஆட்சியில்?

பொதுவுடமைக் கட்சிகள் பற்றியும் பாடப்புத்தகத்தில் தகவல் இடம்பெற்றிருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணனிடம் பேசினோம். “தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி மட்டுமல்ல... இஸ்லாமியர்கள் குறித்தும் மோசமான கருத்துகள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியர்களின் தேசபக்தியை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். தி.மு.க மற்றும் பொதுவுடைமைக் கட்சிகள் தேசவிரோதிகள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் விஷமத்தனத்தோடு பாடத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படியொரு பாடத்திட்டம் படிக்காமலேயே அப்ரூவல் செய்யப்பட்டதா இல்லை திட்டமிட்டே இப்படி எழுதப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது. இந்தச் செயலைச் செய்தவர்கள், அதை அங்கீகரித்தவர்கள் தற்போது பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடம் வெளியானபோது ஆட்சியில் இருந்தவர்களும் இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்றார்.

அருணன் - வைகைச் செல்வன்
அருணன் - வைகைச் செல்வன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நம்மிடம், “பாடப்புத்தகத்தில் இப்படியான கருத்துகள் இருந்தால் கண்டிப்பாக அது நீக்கப்பட வேண்டும். ஆனால், பாடத்திட்டங்கள் வரிக்கு வரி அமைச்சர்களின் ஒப்புதலுக்கு வருவதில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மட்டத்திலேயே அது முடிவு செய்யப்படும். அதனால், பாடத்திட்டக்குழுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், “புத்தகம் வெளியானது தி.மு.க ஆட்சியில்தான்” என்று பகீர் கிளப்புகிறார் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஷானவாஸ் கான். அவர் நம்மிடம், “சர்ச்சைக்குரிய அந்தப் பாடப்புத்தகத்தை எழுதியதே அமைச்சர் பொன்முடியின் மாணவர்தான். பொன்முடி பிஹெச்.டி படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் ஸ்காலராகப் பணியாற்றினார். அப்போது அவரிடம் மாணவராக இருந்த தங்கராஜ் என்பவர்தான் அந்தப் புத்தகத்தையே எழுதினார். பிறகு 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் அந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டது. இதே பொன்முடிதான் அப்போதும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். ஒரு தவற்றைச் சரிசெய்கிறேன் என்று பொன்முடி அடித்த ஸ்டன்ட் அவருக்கே பூமராங் ஆகிவிட்டது” என்றார்.

இந்த விவரங்களையெல்லாம் பொன்முடியும் சொல்லி விளக்கம் கேட்டோம். “கண்டிப்பாக அந்தப் புத்தகம் தி.மு.க ஆட்சிக் காலத்தில் வெளியாகவில்லை. 2005-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் எழுதப்பட்டு, அப்போதே வெளியானது. சரி, யார் ஆட்சியில் வெளியானால் என்ன? எங்கள் கவனத்துக்கு இந்த விஷயம் வரும்போது நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த ஆட்சியில் எங்கள் கவனத்துக்கு வந்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருப்போம். நாங்கள் அப்போதைய அ.தி.மு.க அரசைக் குறை சொல்லவில்லை. பாடத்தை எழுதியவர்களைத்தான் குற்றம்சாட்டுகிறோம். விரிவாக விசாரணை நடத்தி, அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

பாடத்திட்டத்தைத் தயாரிப்பவர்களுக்குப் பாடமெடுக்க வேண்டிய நேரம் இது!