Published:Updated:

`ஆதார் எடுப்பதுதான் எங்கள் வேலையா?!'- செவிலியர்களைக் கொந்தளிக்க வைத்த அரசின் 2.0 இணைய வசதி

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.

இன்று காலை, சென்னை மாநிலத் தலைமை சுகாதாரப் பணிகள் இயக்குநர் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் எங்கு பார்த்தாலும் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புடவை அணிந்த நூற்றுக்கணக்கான செவிலியர்கள் கூட்டம் சாலையில் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து தொடர்ந்து சிரிப்பு சத்தமும் கைதட்டல் சத்தமும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கூட்டத்தின் நடுவே மாநில சுகாதார செவிலியர்கள் அமைப்பைச் சேர்ந்த தலைவர் கோமதி, தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் சினிமா பாணியில் பஞ்ச் வசனங்களாகவும் கிண்டல் செய்தும் பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சைக்கேட்ட மற்ற செவிலியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

`நாங்கள் ஊதிய உயர்வா கேட்டோம். இல்லை தினமும் வேலைக்குச் செல்ல இருசக்கர வாகனம் கேட்டோமா.. எங்கள் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும், இணைய வசதியைச் சரி செய்ய வேண்டும் என்றுதானே கேட்கிறோம். எந்த வசதியும் இல்லாமல் தினமும் 3 ரிப்போர்ட், 4 ரிப்போர்ட் கேட்டால் நாங்கள் எங்கே போவது?’ என தன் கம்பீரக் குரலில் மிகவும் அழுத்தமாகப் பேசினார்.

வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும், செய்யாத குற்றத்துக்கு செவிலியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், பிறர் பணியை தங்கள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள நிதியை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநிலத் தலைமை சுகாதாரப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் (DMS) தமிழ்நாடு முழுவதும் உள்ள 800-க்கும் அதிகமான கிராமப்புற சுகாதார செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அங்குதான் தங்கள் குறைகளைப் பிற செவிலியர்களிடம் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார் தலைவர் கோமதி.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

கூட்டத்தில் இருந்த செவிலியர்களிடம் பேசினோம். ``ஒரு பகுதியில் இருக்கும் 5,000 மக்களைக் கண்காணித்து அவர்களின் பிரச்னையைத் தீர்ப்பது, கர்ப்பிணிப் பெண்களைக் கணக்கிடுவது, அவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது, பேறுகாலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, குழந்தைக்குத் தடுப்பூசி, பேறுகால நிதியுதவி பெற்றுத் தருவது, குழந்தைக்கு பிரச்னை ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து மருத்துவமனையில் சேர்ப்பது போன்றவைதான் எங்களின் பிரதான வேலை. ஆனால், 5,000 மக்கள் தொகைக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர்கள் இருப்பதற்குப் பதிலாக 15,000 முதல் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு செவிலியர்கள் என தற்போது வேலை செய்து வருகிறோம்.

ஒரு சுகாதார செவிலியர் நேரடியாக மக்களிடம் சென்று பேசி அவர்களின் குறைகளை அறிய வேண்டும். ஆனால், தற்போது நாங்கள் சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் போல எப்போதும் கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து தரவுகளையும் கணினியில் பதியச் சொல்கிறார்கள். நாங்கள் அனைவரும் 10-12ம் வகுப்பு படித்தவர்கள். எங்களிடம் கம்ப்யூட்டரை கொடுத்து 24 மணி நேரமும் அதிலேயே வேலை செய்யச் சொன்னால் எப்படி முடியும். குறிப்பாக முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்.

முத்து லெட்சுமி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2 முறை பொருள்களாகவும் 4 முறை பணமாகவும் என பேறுகாலத்துக்குள் தவணை முறையில் இந்தப் பணம் வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான கர்ப்பிணிப் பெண்கள் யார் என்பதைக் கண்டறிந்து அரசுக்குத் தகவல் கொடுப்பதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது. ஆனால், தற்போது இதை நாங்களே இணையத்தில் பதிவு செய்து பணம் சென்று சேரும் வரையில் கண்காணிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

ஒரு கர்ப்பிணிக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றால் அதை நாங்களே புதிதாக தொடங்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். அதையும் ஏற்றுக்கொண்டு வங்கிக்குச் சென்றால் அங்குள்ளவர்கள் ஆதார் போன்ற பல ஆவணங்களைக் கேட்கிறார்கள். சிலரிடம் அதுவும் முறையாக இருப்பதில்லை. அப்படியானவர்களுக்கு ஆதாரும் நாங்களே எடுத்துக்கொடுக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஆதார் எடுப்பதும், வங்கிக் கணக்கு தொடங்குவதும்தான் எங்கள் வேலையா?

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

இது ஒருபுறம் என்றால் இந்தத் தகவல்களைப் பதிவு செய்யும் இணையம் பெரும் தலைவலி. முன்பு இருந்த இணையப் பக்கத்தில் அனைத்தும் எளிமையாகத் தெளிவாக இருந்தது, ஆனால், தற்போது 2.0 என்ற புதிய இணைய பக்கத்தைக் கொண்டுவந்துள்ளனர். அதில் இருக்கும் பாதி விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பதிவேற்றம் செய்ய முடியும். இந்த இணைய முறை வந்த பிறகு முழு நேரமும் கம்ப்யூட்டரில்தான் நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அதனால் எங்களால் மக்களை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை. அப்படி யாரேனும் விடுபட்டால் அதற்கும் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

2 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற கர்ப்பிணிகளை கருத்தடை சிகிச்சை செய்யச் சொல்ல வேண்டும். அதுவும் எங்கள் பணிகளில் ஒன்று, ஆனால் நாங்கள் கூறுவதை சில பெற்றோர் கேட்பதே இல்லை. இரண்டுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் உங்களுக்கு என்ன என்று கேள்வி கேட்கிறார்கள். சில பெண்களின் கணவர்கள் இரவு நேரத்தில் போன் செய்து எங்களிடம் தவறாகப் பேசிய சம்பவங்களும் நடந்துள்ளது. மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அதற்கும் நாங்கள்தான் பொறுப்பு. அதற்காக பணியிடை நீக்கமும் செய்கிறார்கள்" எனக் கொந்தளித்தவர்கள், தொடர்ந்து பேசுகையில்,

`` பொதுமக்களின் முடிவுகளில் நாங்கள் எப்படித் தலையிட முடியும், அதைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள் தண்டனையை மட்டும் எங்களுக்கு வழங்குகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் பேறுகாலத்தில் தாய் இறக்கக் கூடாது என்பது, ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் பிரசவம் பார்த்த மருத்துவர்களை விடுத்து, நேராக எங்களை நோக்கித்தான் தண்டனை வரும்.

கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிப்பதுதான் எங்கள் வேலை. அதன்பிறகு நடக்கும் அனைத்துக்கும் மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அப்படி ஒருபோதும் நடப்பதே கிடையாது. சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் அவசர சிகிச்சை என போன் வரும். அப்போதும் எதையும் பார்க்காமல் நாங்கள் ஓட வேண்டும். கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பு. அவருக்குப் பிறந்த குழந்தைக்கு ஏதேனும் உடல் பிரச்னைகள் வந்தால் அதற்கும் நாங்கள்தான் பொறுப்பு என்று எங்களுக்குத் தொடர்பு இல்லாத பல விஷயங்களில் எங்களைத் தண்டிக்கிறார்கள். இந்தப் பணியிடை நீக்கத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

இப்படி தினம்தினம் வேலை செய்வதினால் எங்களின் குடும்பத்தைச் சரிவரக் கவனிக்க முடியவில்லை. பல கிராம செவிலியர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்” என்று கூறும்போதே சிலரது கண்களில் கண்ணீர் வடிந்தது.

அதைப் பொருட்படுத்தாமல், ``எங்களுக்கும் குடும்பம் இருப்பதை அரசு உணர வேண்டும். எங்களின் வேலைப்பளுவைக் குறைத்து இன்னும் நிறைய செவிலியர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். தற்போது கொண்டுவந்துள்ள 2.0 இணைய முறையை மாற்ற வேண்டும் அல்லது பணம் கொடுக்கும் விஷயத்தை வேறு துறைக்கு மாற்ற வேண்டும். எங்களுக்குத் தேவையான வசதிகளை மட்டும் செய்துகொடுத்தால் அதிகாரிகள் என்ன வேலை சொன்னாலும் அதை செய்யத் தயாராகவே இருக்கிறோம். வாரம் ஒருமுறை கான்ஃபரன்ஸ் மீட்டிங் வைக்கிறார்கள். அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்கையில் நாங்கள் எதற்காக அதில் கலந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை எங்கள் வேலையை எளிமைப்படுத்தித் தரச் சொல்லி மட்டுமே கேட்கிறோம்” என்று ஆதங்கத்துடன் பேசி முடித்தனர்.

பின் செல்ல