Published:Updated:

`யூனிட்டைக் கழிக்காமல் தொகையைக் கழிக்கிறார்கள்?!’- மின்கட்டணக் குழப்பம்..என்ன காரணம்?

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

``இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.”

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலைகள் இருப்பதாலும் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவதாலும் மின்பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

இந்தநிலையில், மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மின் கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மின்வாரியத்தைக் குறிப்பிட்டு மக்கள் சமூக வலைதளங்களின் வழியாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

மக்களிடம் நிலவும் குழப்பம் குறித்தும் மின் கட்டணம் உயர்வது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தலைவர் எஸ்.எஸ் சுப்பிரமணியன் நம்மிடம் பேசுகையில், ``கொரோனா தொடர்பான பிரச்னையால் பிப்ரவரி மாதம் கடைசியாக ரீடிங் எடுக்கப்பட்டது என வைத்துக்கொள்வோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து கடந்த ஏப்ரல் மாதம் ரீடிங் எடுக்கப்படும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் ரீடிங் எடுக்க முடியவில்லை. எனவே, அதற்கு முந்தைய மாதத்திற்கான மின்கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது. மக்களும் அந்த மின்கட்டணத்தைச் செலுத்தியிருப்பார்கள். தற்போது ரீடிங் எடுக்கப்படும் போது நான்கு மாதங்களுக்கான ரீடிங் எடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக 900 யூனிட் நான்கு மாதங்களுக்கு வருகிறது என்றால் மாதம் எவ்வளவு வரும் என்பதை அரசு கணக்கிட வேண்டும். அதில் கடந்த முறைக்கான யூனிட்டைக் கழிக்க வேண்டும். அப்படி கழிக்காமல் கட்டிய தொகையை மட்டும் கழித்து ரீடிங் எடுத்து, கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், கட்டணம் கூடுதலாக வரும். தொகைக்குரிய யூனிட்டைக் கழித்து மீதமுள்ள யூனிட்டைக் கணக்கிட்டுக் கட்டணத்தைக் குறிப்பிட்டால் அது சரியாக இருக்கும். அப்படியில்லாமல், தொகையை மட்டும் தற்போது கட்ட வேண்டிய தொகையில் கழித்துவிடுகிறார்கள். யூனிட்டைக் குறைக்காமல் கட்டணத்தை மட்டும் குறைக்கிறார்கள் என்பதுதான் விஷயம்” என்று கூறினார்.

Vikatan

யூனிட் தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மின்சாரவாரியம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியவில்லை. இந்தநிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாதக் கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார வாரியம்
மின்சார வாரியம்

ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாதக் கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டைக் கழிப்பதில்லை என்ற தகவல் தவறானதாகும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறைக் கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் (Bi-monthly Slab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாதக் கட்டணம் கழிக்கப்பட்டபின், மின் கட்டணத் தொகை கணக்கிடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

`50,000 விவசாய மின் இணைப்புகள்; அரசாணை வெளியிடாதது ஏன்?’ - ஆதங்கப்படும் விவசாயிகள்
அடுத்த கட்டுரைக்கு