Published:Updated:

`பக்தர்கள் கூட்டம்; பெயரளவில் முகாம்!'- அலட்சியம் காட்டுகிறதா தஞ்சைப் பெரியகோயில் நிர்வாகம்? #Corona

தஞ்சைப் பெரியகோயிலில் மக்கள் கூட்டம்
தஞ்சைப் பெரியகோயிலில் மக்கள் கூட்டம்

`ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம், கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு, மார்ச் 31-ம் தேதி வரை பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. ஆனால், தஞ்சைப் பெரியகோயில் நிர்வாகம் கொரோனோவைக் கண்டுகொள்ளவில்லை'

கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் ஒன்றாகக் கூடுவதை இயன்றவரை தவிர்க்க வேண்டுமென அந்தந்த மாநிலங்களின் அரசு நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்

தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கக்கூடிய தஞ்சைப் பெரியகோயிலில் இது தொடர்பாக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தஞ்சைப் பெரியகோயிலில் எப்பொழுதுமே மக்கள் வருகை அதிகமாக இருக்கும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, பெரியகோயிலை தரிசிக்க வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சம் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், பெரியகோயில் நிர்வாகமும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதாக தஞ்சை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயில்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``பொதுமக்கள் ஒன்றாகக் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பொதுமக்கள் அதிகமாகக் கூடும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தினர், பொதுமக்கள் வருகைக்கு மார்ச் 31-ம் தேதிவரை தடை விதித்துள்ளனர். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு, மார்ச் 31-ம் தேதி பொதுப்பணித்துறை தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி, சபரிமலை, ஷீர்டி கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கைகளும்!

இந்த விவகாரத்தில் திருப்பதி கோயில் நிர்வாகமும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதுடன் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது. ஆனால், தஞ்சைப் பெரியகோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தவிர்க்கும் விதமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கோயில் வளாகத்தில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு முகாம் என்ற பெயரில் பேனர் அமைக்கப்பட்டு மருத்துவத்துறை அலுவலர்கள் சிலர் அமர்ந்துள்ளார்கள். இதுபோதாது. மக்கள் அதிகளவில் வருவதைத் தவிர்க்க அல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'' என ஆதங்கப்பட்டனர். `இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்' எனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு