Published:Updated:

கொரோனா: தரமற்ற உணவு; அசுத்தமான அறைகள்! - தஞ்சை முகாமின் அதிர்ச்சிக் காட்சிகள்

கொரோனா அறையில் குவிந்து கிடந்த குப்பை
கொரோனா அறையில் குவிந்து கிடந்த குப்பை

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் வல்லம் அருகே உள்ள இரண்டு பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் அதே பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு அரசு சார்பில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த இடங்களை முறையாகச் சுத்தம் செய்வது இல்லை, உணவு தரமானதாக இல்லை எனப் புகார் எழுந்துள்ளது.

உணவு
உணவு

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 424 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் 210 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் வல்லம் அருகே உள்ள இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அதே பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓர் இடத்தில் மட்டும் சுமார் 200 பேர் வரை உள்ளனர். இந்நிலையில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அறைக்கு வெளியே
அறைக்கு வெளியே

அதன் முடிவுகள் வருவதற்கு மூன்று நாள்கள் ஆகின்றன. அதுவரை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை, இடங்களை சுத்தப்படுத்துவதும் இல்லை எனத் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர், புகாராகக் கூறி வருகிறார். இவர் 3 நாள்கள் தனிமை முகாமில் இருந்தவர்.

ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ``நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் கடந்த 25-ம் தேதி இரவு தஞ்சை வந்தேன். ரயில் நிலையத்தில் எனக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக நான் உட்பட மொத்தம் 17 பேரை இதில் மூன்று குழந்தைகளும் இருந்தனர். முதலில் ஒரு கல்லூரிக்கு அழைத்துச் சென்று எல்லோருடைய முகவரி மற்றும் ஆவணங்களை வாங்கிக் கொண்டனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இருக்கும்கல்லூரி
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இருக்கும்கல்லூரி

பின்னர் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கல்லூரிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். அங்கு நான் பார்த்த அனைத்தும் கடும் வேதனையை ஏற்படுத்தியது. எங்களை கல்லூரிக்கு உள்ளே அனுப்பும்போது கையில் சானிடைசர் கொடுத்து சுத்தம் செய்ய வைக்கவில்லை.

Corona Live Updates: `3,943 பேருக்கு பாசிட்டிவ்!’ - தமிழகத்தில் 90,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை

ஒரு வாளி, ஒரு கப், பேஸ்ட் பிரஸ் உள்ளிட்டவற்றை எல்லோருக்குக் கொடுத்து அனுப்புகின்றனர். அதன்பிறகு நாங்கள் வெளியே வர முடியாது. கேட்டரிங் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் மூன்று வேளையும் தங்கியிருக்கும் அறை முன் சாப்பாடு வைத்துவிடுவார்கள். அந்த இட்லி, ரவா கிச்சடி, முட்டையுடன் கூடிய சாதம் போன்ற உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இவை தரமானதாக இல்லாததால் பலரும் குப்பைத்தொட்டியில் தூக்கி வீசி விடுகின்றனர்.

சுத்தம் செய்த பின்னர்
சுத்தம் செய்த பின்னர்

இதனால் ஹால் முழுவதும் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் குவிந்து கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. அத்துடன் மூன்று நாள்கள் முடிந்தவர்கள் வெளியே சென்ற பிறகு அந்த அறையைச் சுத்தப்படுத்தபடாமல் அப்படியே புதிதாக வருபவர்களைத் தங்க வைத்துவிடுகின்றனர். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அந்த அறையை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாமல் வேறு நபர்களை தங்க வைத்தனர். இதனால் அவர்களுக்கும் நிச்சயம் கொரோனா பரவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதுபோல் பல அறைகளில் நடந்தது. தரைத்தளத்தில் குடிதண்ணீர் பிடிப்பதற்கான ஒரு குழாய் உள்ளது. அதைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதனாலும் கொரோனா நிச்சயம் பரவும்.

ஜெயச்சந்திரன்
ஜெயச்சந்திரன்

இதையெல்லாம் நான் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன். அதன்பிறகு சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உணவின் தரம் அப்படியேதான் இருக்கிறது. அரசு அதிகாரிகள் காட்டும் இதுபோன்ற அலட்சியங்களால் கொரோனா பரவுதலைத் தடுக்க முடியாது என்றே தெரிகிறது. அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் மற்று கலெக்டர் உள்ளிட்டவர்கள் அடிக்கடி இந்த இடங்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சரிசெய்தால் சீக்கிரமே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்" என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் தாசில்தார் வெங்கடேஷ்வரனிடம் கேட்டோம். ``முதல்நாள் மட்டும் அந்தப் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பயத்தின் காரணமாகப் பணிக்கு வராததால் குப்பைகள் தேங்கிக் கிடந்தன. தற்போது வெளி ஊராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை நியமித்துள்ளோம். ஒரு நாளைக்கு 5 முறை சுத்தம் செய்யப்படுகிறது. உணவுகளும் தரமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகச் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு