Published:Updated:

குடியிருப்புகளுக்கு நடுவே எலைட் மதுபானக் கடை! -கல்லணைக் கால்வாய்ப் பகுதி அதிர்ச்சி

டாஸ்மாக் மதுபானக் கடைக்கான பணிகள்
டாஸ்மாக் மதுபானக் கடைக்கான பணிகள்

கல்லணைக் கால்வாயின் ஓரத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு நெருக்கமான சிலர்தான் இதனைக் கொண்டுவருவதாகத் தெரிகிறது.

தஞ்சாவூரில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றுக்கரையில் டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராடி வரும் நிலையில், டாஸ்மாக் கடை குறித்து பெண் ஒருவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

வீடுகளுக்கு நடுவே டாஸ்மாக் மதுபானக் கடை
வீடுகளுக்கு நடுவே டாஸ்மாக் மதுபானக் கடை

தஞ்சாவூரில் சாந்தபிள்ளை கேட் பகுதியைக் கடந்து செல்லும் கல்லணைக் கால்வாயின் மேலக்கரையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அத்துடன் தனியாருக்குச் சொந்தமான புகழ்பெற்ற கோயில் ஒன்று மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன. இந்தநிலையில் குடியிருப்புகளுக்கு நடுவே எலைட் பார் எனப்படும் உயர் ரக மதுபானக் கடை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதுடன், அதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கிறன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. அதில் அந்தப் பெண், `இங்கு வரவிருக்கும் எலைட் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனைத் தடுக்க வேண்டும் என எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்து விட்டோம். ஆனால் எந்தத் தடையும் இல்லாமல் டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆரம்பிப்பதற்கான 70 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன.

கல்லணைக் கால்வாய்
கல்லணைக் கால்வாய்

சோஷியல் மீடியா என்பது ஒரு பவர்ஃபுல் வெப்பன். இதனைத் தடுக்க வேண்டும் என்பதற்கு வேறு வழியில்லாததால் அதன்மூலம் இதனை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மாக் கடையைக் கொண்டு வருகிறார்கள் புகழ்மிக்க கோயில், 100 மீட்டரில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், திருமண மண்டபங்கள், மனவளக்கலை மன்றம், யோகா சென்டர் என அனைத்தும் இந்தப் பகுதியில் உள்ளது. பிள்ளைகள் சீரழிவதற்கு வீட்டுக்கு அருகிலேயே அரசு டாஸ்மாக் கடையைக் கொண்டு வருவது வேதனையைத் தருவதாக உள்ளது. இதனைத் தடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

`எலைட் ஒயின் ஷாப், அண்ணாநகர், சாந்தி காலனி' - மதுப் பிரியர்களைக் குறிவைத்து ஒரு மெகா மோசடி

இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம். ``வீடுகளுக்கு நடுவே டாஸ்மாக் வந்தால் அந்தப் பகுதியின் நிலை என்னவாகும் என்பதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் இருக்கின்றன. கல்லணைக் கால்வாயின் ஓரத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு நெருக்கமான சிலர்தான் இதனைக் கொண்டு வருவதாகத் தெரிகிறது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அரசு அதிகாரிகள் தரப்பிலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திடம் இங்கு டாஸ்மாக் கடையைக் கொண்டு வர வேண்டாம் என மனு கொடுத்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். அவர் மனது வைத்தால் டாஸ்மாக் கடை இங்கு வருவது நிச்சயம் தடுக்கப்படும்" என்றனர்.

டாஸ்மாக்கின் தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் அழகர்சாமி என்பவரிடம் பேசினோம்.``டாஸ்மாக் மாறும் உயர்ரக மதுபான கடை திறக்க நாங்க அனுமதி கொடுக்கவில்லை. நாங்க விசாரித்த வகையில் அந்த இடத்தில் கிளப் ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக அறிந்தோம்'' என்று முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு