Published:Updated:

மன்னார்குடி: `கொரோனாதான் இல்லையே... வீட்டுக்குப் போறேன்!' - கர்ப்பிணிக்கு நேர்ந்த அதிர்ச்சி

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

தஞ்சாவூரில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் என அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரிசல்ட் வந்துள்ளது. இது அந்தப் பெண் மற்றும் அவரின் கணவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்ததையடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என ரிசல்ட் வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதி
கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதி

மன்னார்குடி தெற்கு வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு வரும் வாரத்தில் பிரசவத்துக்கான தேதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை மன்னார்குடியில் உள்ள மகப்பேறு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்திருக்கிறார். இதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரிசல்ட் வந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த நாள் கர்ப்பிணிப் பென்ணை அவரின் கணவர் காரில் அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்தார். பின்னர், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற அவரை கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா நெகட்டிவ்
கொரோனா நெகட்டிவ்

இதற்கிடையில் தஞ்சாவூரில் எடுக்கப்பட்ட டெஸ்டில் நெகட்டிவ் என அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரிசல்ட் வந்துள்ளது. இது கர்ப்பிணிப் பெண்ணின் கணவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவாரூரில் எடுக்கப்பட்ட டெஸ்டிலும் நெகட்டிவ் என வந்ததையறிந்து கர்ப்பிணிப் பெண் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதுடன் அவரின் கணவர் மற்றும் உறவினர்களைத் தொடர்புகொண்டு அழுதிருக்கிறார்.

`சரி கொரோனாதான் இல்லையே என்னை வீட்டுக்கு அனுப்புங்கள்' எனக் கேட்டதற்கு பல்வேறு காரனங்களைக் கூறி மறுத்துள்ளனர். பின்னர் கர்ப்பிணிப் பெண்ணின் கணவரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2-ம் தேதி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தனர்.

கொரோனா: `குடிக்க தண்ணி கேட்பது பெரும் கொடுமை' -கொதித்த வேலூர் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்

இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``அரசு மருத்துவமனையின் அலட்சியமான செயலால் கொரோனா பாதிக்கப்படாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் தந்துள்ளனர். அத்துடன் வரும் வாரத்தில் குழந்தை பிரசவிக்க இருக்கிற கர்ப்பிணிப் பெண்ணைத் தனிப்பட்ட வகையில் தங்க வைக்காமல் எல்லோருடனும் ஒன்றாகவே தங்க வைத்துள்ளனர். அதன் பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என ரிசல்ட் வருகிறது.

இதற்கிடையே கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் வசிக்கும் வீடு மற்றும் ஜைன தெருவில் வசிக்கும் அவருடைய அண்ணன் வீடு உள்ளிட்ட தெருக்களை நகராட்சி ஊழியர்கள் அடைத்துவிட்டனர். பால்காரரை பால் கொடுக்க வேண்டாம் எனத் தடுக்கின்றனர். பொதுக் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவும் தடை போடுகின்றனர். இது போன்ற செயல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

மன்னார்குடி
மன்னார்குடி

அத்துடன் எங்கள் பகுதியில் கொரோனா இருக்கிறது எனச் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனால் நாங்கள் மட்டுமல்ல... அருகில் வசிக்கின்ற பலரும் பல வகையில் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கான எந்தச் சிகிச்சையும் எடுக்காதபோது கொரோனா இல்லை என வந்துள்ளது. அரசு மருத்துவமனையின் அலட்சியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கெடுபிடியால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. வரும் நாள்களில் கர்ப்பிணிப் பெண் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?" என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலரான ஆனந்தராஜிடம் பேசினோம், ``மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் தம்பி சென்னையிலிருந்து வந்தார். அவரை அந்தப் பெண் ஊழியரே வடுவூர் பகுதிக்குச் சென்று அழைத்து வருகிறார். அவரின் தம்பிக்கு எடுக்கப்பட்ட டெஸ்டில் கொரோனா பாசிடிவ் என வருகிறது. ஆனால், அந்தப் பெண் ஊழியரை நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர் நோட்டீஸ் எதுவும் ஒட்டவில்லை அருகில் இருக்கும் யாருக்கும் தகவலும் சொல்லவில்லை.

கொரோனா: தரமற்ற உணவு; அசுத்தமான அறைகள்! - தஞ்சை முகாமின் அதிர்ச்சிக் காட்சிகள்

கொரோனாவால் அவர் பாதிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிப் பெண்ணிக்கு கொரோனா இருக்கிறது என்பதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக அவர்கள் உறவினர்கள் வசித்த பகுதியையும் சேர்த்து அடைத்து தனிமைப்படுத்தினர். ஆனால், அந்தப் பெண் ஊழியரிடம் அதுபோல் நடந்துகொள்ளவில்லை. பொதுமக்களுக்கு ஒரு விதி, நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு விதி என நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் மகப்பேறு மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இனி இதுபோன்ற தவறு எதுவும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மன்னார்குடி சுகாதார ஆய்வாளர் பிரபாகரனிடம் பேசினோம். ``கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு 3 நாள்களுக்குப் பிறகு, கர்ப்பிணிப் பெண் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த 4 நாள்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட டெஸ்டில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதற்கிடையே அதன் தன்மை குறைந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் அலட்சியம் எதுவும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு