Published:Updated:

தஞ்சை: `அரசு நிதியில்லை; ஜே.சி.பி செலவுக்கு மண் விற்பனை!' - சர்ச்சையில் தாசில்தார்

தூர்வாரப்படும் ஏரி
தூர்வாரப்படும் ஏரி

`ஏரியை பலர் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு விவசாயம் செய்து வந்தனர். அதை அகற்றி ஏரியைத் தூர்வாருவதற்கு உத்தரவிட்டேன். அந்தக் கோபத்தில் புகார் செய்கின்றனர்' என்கிறார் தாசில்தார்.

பேராவூரணி அருகே உள்ள கிராமத்தின் ஏரி ஒன்று தூர்வாரப்படும் நிலையில் தாசில்தார் உதவியுடன் மண் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாசில்தார் ஜெயலட்சுமி
தாசில்தார் ஜெயலட்சுமி

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் கள்ளங்காடு. இங்கு 78 ஏக்கர் அளவில் பரம்பாடி என்ற ஏரி அமைந்துள்ளது. தற்போது அந்த ஏரி தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரப்படும் மண்ணைக் கொண்டு ஏரியின் கரையைப் பலப்படுத்தபட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ள நிலையில் ஏரியின் மண்ணை விற்பனை செய்வதாகவும் அதற்கு தாசில்தார் ஜெயலட்சுமி துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த முத்துக்குமாரிடம் பேசினோம். ``எங்க ஊருக்கு பரம்பாடி ஏரிதான் மிகப்பெரிய நீர் ஆதாரம். இந்த ஏரியின் பகுதிகள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஆக்ரமிப்பை அகற்றி ஏரியைத் தூர்வார வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டிராக்டரில் ஏற்றி செல்லப்படும் மண்
டிராக்டரில் ஏற்றி செல்லப்படும் மண்

இதையடுத்து, 2015-ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்றவதுடன், ஏரியைத் தூர்வாரி அதில் கிடைக்கும் மண்ணை வைத்து கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தற்போது தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் 7 ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு ஏரி தூர்வாரப்படுவதுடன் 30 டிராக்டர்கள் மூலம் மண்ணை ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

Kame Gowda: 16 ஏரி, குளங்களை வெட்டிய ஆடு மேய்க்கும் தொழிலாளி... வியக்கவைத்த `லேக்மேன்’!

அத்துடன், ஏரியின் ஒரு பகுதியை அடுத்த பஞ்சாயத்தில் சேர்த்து அதன் ஓரத்தில் குறிபிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காக புதிய மயானம் அமைத்து வருகின்றனர். இதேபோல் 2013-ல் ஏரிப்பகுதியில் மயானம் அமைக்க அப்போது முயற்சி நடந்தது. அதை நாங்கள் தடுத்துவிட்டோம். இந்நிலையில் நீர் நிலைகளில் மயானம் அமைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிருந்தும் அதை மீறி மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு தாசில்தார் ஜெயலட்சுமிதான் காரணம்" என்றார் கொதிப்புடன்.

ஏரி பகுதியில் அமைக்கப்படும் மயானம்
ஏரி பகுதியில் அமைக்கப்படும் மயானம்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தாசில்தார் ஜெயலட்சுமியிடம் பேசினோம். `` பரம்பாடி ஏரி பார்ப்பதற்கு ஏரி போலவே இருக்காது, விவசாய நிலம் போலவே காட்சியளிக்கும். ஏரியின் பகுதியை பலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வந்தனர். அதை அகற்றி ஏரியைத் தூர்வாருவதற்கு உத்தரவிட்டேன். ஏற்கெனவே இருந்த தாசில்தார்கள் இதைக் கண்டு கொள்ளாத நிலையில் நான் எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொண்டு இந்த நீர்நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினேன்.

வேறு பஞ்சாயத்துக்கான இடத்தில்தான் சுடுகாடு அமைகிறது. ஏரியின் இடத்தில் இல்லை. தூர்வாருவதற்கு என அரசு நிதி ஒதுக்காத நிலையில் ஜே.சி.பி உள்ளிட்ட செலவுக்காக மண் விற்பனை செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் கோபம் கொண்ட சிலர் என் மீது வீண் புகார் கூறி வருகின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு