Published:Updated:

`புர்காவுக்குத் தடை; பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்! - சர்ச்சையில் சிக்கிய உ.பி அமைச்சர்

உ.பி அமைச்சர் - ரகுராஜ் சிங்
உ.பி அமைச்சர் - ரகுராஜ் சிங்

``பொருளாதாரம் மந்த நிலையில் இருந்திருந்தால் நாங்கள் இங்கு வேட்டியும் குர்தாவும் அணிந்து வந்திருப்போம். கோட்டுகளையும் ஜாக்கெட்டுகளையும் அணிந்திருக்க மாட்டோம்"

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் அக்கட்சி சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையில் முடிவதுண்டு. உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ரகுராஜ் சிங் இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா குறித்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோடி - ரகுராஜ் சிங்
மோடி - ரகுராஜ் சிங்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் ரகுராஜ் சிங் பேசுகையில், ``புர்கா என்பது அரபு நாடுகளில் பின்பற்றப்படும் வழக்கம்; இந்தியக் கலாசாரம் அல்ல. இலங்கையில், கடந்த ஆண்டு நடந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அந்த நாடும் புர்காவை தடை செய்துள்ளது. ஷஹீன் பாக்கிலும் பெரும்பாலானவர்கள் புர்காவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய புர்காவைப் பயன்படுத்துகின்றனர். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவைத் தடைசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.

`நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன!' - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சித்த மோடி

ரகுராஜ் சிங்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பா.ஜ.க தலைமை அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறிப் பேசியதாகவும், அதற்கு விளக்கமளிக்கக் கூறியும் அவருக்கு பா.ஜ.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரகுராஜ் சிங் சர்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவிப்பது முதன்முறை அல்ல. முன்னதாக அவர், ``பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள், உயிருடன் புதைக்கப்படுவார்கள்" என்று கூறியதும் சர்ச்சையானது.

விரேந்திர சிங்
விரேந்திர சிங்

இதேபோல, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்லியா பகுதியில் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்பதை மறுத்துப் பேசிய பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான விரேந்திர சிங், ``உலகம் மந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் விவசாயம் போதுமானதாக இருப்பதால் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தியா என்பது கிராமங்கள் அதிகளவில் இருக்கும் நாடு; பெருநகரங்கள் மட்டும் இங்கு இல்லை. வங்கிகளில் கிராமத்தினர்தான் அதிகமாகப் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள் என வங்கி வெளியிடும் அறிக்கைகள் கூறுகின்றன" என்றார்.

மேலும், பொருளாதார நிலையை ஆடை கலாசாரத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது, ``பொருளாதாரம் மந்த நிலையில் இருந்திருந்தால் நாங்கள் இங்கு வேஷ்டியும் குர்தாவும் அணிந்து வந்திருப்போம். கோட்டுகளையும் ஜாக்கெட்டுகளையும் அணிந்து வந்திருக்க மாட்டோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

`உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்?’ - சமூக ஆர்வலருக்கு உ.பி காவல் நிலையத்தில் நேர்ந்த துயரம்!
பின் செல்ல