Published:Updated:

ராகுல் காந்தி மீண்டும் பற்றவைத்த சாவர்க்கர் சர்ச்சை... வரலாற்று அரசியலில் யாருக்கு லாபம்?!

சாவர்க்கர்

``சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தது, சிறையிலிருந்து வெளியே வர மன்னிப்புக் கடிதம் எழுதியது உண்மை.” - மகாத்மா காந்தி பேரன் துஷார் காந்தி.

ராகுல் காந்தி மீண்டும் பற்றவைத்த சாவர்க்கர் சர்ச்சை... வரலாற்று அரசியலில் யாருக்கு லாபம்?!

``சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தது, சிறையிலிருந்து வெளியே வர மன்னிப்புக் கடிதம் எழுதியது உண்மை.” - மகாத்மா காந்தி பேரன் துஷார் காந்தி.

Published:Updated:
சாவர்க்கர்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டுவருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பயணத்தின்போது பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த போராளியான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 15-ம் தேதி கொண்டாடப்படும் 'ஜஞ் சத்ய கௌரவ்' மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி - காங்கிரஸ்

அப்போது, ``விடுதலைக்காகப் போராடி தன் 24 வயதில் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார் பிர்சா முண்டா. அந்தப் போராளியின் சமூகமான பழங்குடியினர் உரிமைகளைப் பாஜக பறித்துவருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சிந்தாத்தவாதியான சாவர்க்கர், ஆங்கிலேயர்களிடம் பென்ஷன் வாங்கிக்கொண்டு காங்கிரஸ் போராட்டக்காரர்களைக் காட்டிக் கொடுத்தார். மேலும் அந்தமான் சிறையில் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு கடிதம் எழுதி தன்னை மன்னிக்குமாறும், விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர்கள் முன்மொழிதலையே ஏற்று ஆங்கிலேயப் படையில் சேர்ந்தவர் சாவர்க்கர். ஆனால், அவர்களுக்கு எதிராகப் போராடியவர் முண்டா.  இதுவே அவர்கள் இருவருக்குமான வேறுபாடு" என்றார்.

சாவர்க்கரின் கடிதம்
சாவர்க்கரின் கடிதம்
ANI

இதற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் சாவர்க்கர்" என்றும், ``அவரைப் போன்று கொடுமைகளை அனுபவித்த விடுதலைப் போராளிகள் வேறு யாருமில்லை’’ என்றும் சொன்னார்.

ராகுல் காந்தி செய்தியாளர்களின் சந்திப்பின்போது இது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது சாவர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்தார். அதில் கடைசிவரியில், “ஐயா நான் உங்கள் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன்.  இப்படிக்கு சாவர்க்கர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு, சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தேசத் தலைவர்களாக மதிக்கப்படும் சாவர்க்கரை அவமதித்ததன் விளைவாக ராகுல் காந்தியைக் கைதுசெய்ய வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.

 ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, நேரு தொடர்பாக மற்றொரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அவரின் ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இரண்டு வாரங்கள்கூட நபா சிறையின் கஷ்டங்களைத் தாங்க முடியாமல் தன் தந்தையான மோதிலால் நேருவின் உதவியால் காப்பாற்றப்பட்டார். இவ்வாறு மகன் விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்டார் அவரின் தந்தை. நேரு ஒரு கோழை. ஆகவே, முதலில் உங்கள் தரப்பைப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு ராகுலின் கருத்துக்குப் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, ராகுலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ``சிறையிலிருந்து வெளியே வர மன்னிப்புக் கடிதம் எழுதியது மறுக்க முடியாத உண்மை. இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்திலிருந்து கற்ற பொய்யல்ல” எனக் காட்டமான பதிலைக் கூறினார்.

துஷார் காந்தி
துஷார் காந்தி

இது குறித்துப் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``மகாத்மா காந்தியின் பேரன் சொல்வதால் மட்டும் அதில் உண்மை இருப்பதாக ஏற்க முடியாது. அவ்வாறு பார்த்தால் ராகுல் காந்தியும், தன் தவறான கருத்துக்கு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். சுதந்திர காலத்தில் அனைவரையும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவரச் சொன்னதே காந்திதான். காரணம் இந்தியா அகிம்சை முறையில் போராட்டம் நடத்தியது. அப்படி இருக்கும் நிலையில் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். காசு வாங்கினார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். இந்தியாவைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ஒன்றுமே தெரியாத ராகுல் காந்தி இது போன்ற கருத்துகளைப் பேசக் கூடாது” என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தச் சர்ச்சைக் குறித்து தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் கேட்டபோது, “விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் மகாத்மா காந்தி அவர்கள் செயல்படுத்திய திட்டம்தான் போராட்டக்காரர்களை மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வரச் சொன்னது. அப்படி வெளியே வருபவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஆனால், சாவர்க்கர் விஷயத்தில் அந்த மாதிரியான நிகழ்வுகள் எதுவும் அரங்கேறவில்லை.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதற்கு முன்பு வரை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த சாவர்க்கர் அங்கிருந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையான பின்னர் ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார். அதற்கான சேவையை அவர் செய்தாரே தவிர நாட்டின் விடுதலைப் போராட்டங்களில்  அவர் ஈடுபடவில்லை. அதேபோல், நேரு இரண்டு வாரங்களில்  நாப சிறையிலிருந்து வெளியே வந்தார் என்று கூறுகிறார்கள். அது அவர் இயக்கத்தின் வேலைக்காகக் கட்டாயத்தின்பேரில் வெளியே வந்தார். அதில் வேறு எந்த உள்நோக்கமும்  இல்லை. காந்தியின் படுகொலையில் சாவர்க்கரைக் குற்றவாளியாக அறிவிக்க எந்த ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கூறியது .ஆனால் அதன் பின்பு இதை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் அவருக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

கோபண்ணா
கோபண்ணா

எனவே, நேரு, மோதிலால் நேரு என நேருவின் குடும்பம் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றவர்கள். குறிப்பாக, நேரு 3,259 நாள்கள் சிறையில் இருந்தார். இவருக்கு இணையான போராட்ட வீரர்கள் யாரும் பாஜக-விலோ ஆர்.எஸ்.எஸ்-ஸிலோ இருக்கிறார்களா... சுதந்திரப் போராட்டத்தில் ஒரு துரும்பைக்கூட அசைத்துப் பார்க்காதவர்கள் யாரும் காந்தியின் குடும்பத்தையோ, நேருவின் குடும்பத்தையோ பற்றிப் பேசுவதற்கு எந்த எந்த உரிமையும் கிடையாது. வரலாறு என்ன சொல்கிறதோ அதை அவர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்” என்றார்

``‘சாவர்க்கர்’ குறித்து இரு வேறான கருத்துகள் தொடர்ந்து இந்திய அரசியலில் பேசப்பட்டுவருகின்றன. இப்படி சாவர்க்கரின் வரலாறு பேசுவதில் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம் என்பதைத் தாண்டி, மக்கள் இந்த வரலாறுகளைத் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்வதன் வாயிலாகத் தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொள்வார்கள். அவ்வாறு சரியான கருத்தை எந்தக் கட்சி பேசுகிறதோ மக்களின் ஆதரவு அவர்களுக்காக இருக்கலாம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் இது போன்ற வரலாறு பற்றிய தெளிவு இருப்பது மிக அவசியம்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.