Published:Updated:

`அயோத்தி, அத்வானி, அழைப்பிதழ்' - ராமர் கோயிலை ரவுண்டு கட்டும் சர்ச்சைகள்!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு

அயோத்தியில் நாளை நடைபெறுகிற ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில், தலித் துறவிகள் மற்றும் ஜனாதிபதி கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`அயோத்தி, அத்வானி, அழைப்பிதழ்' - ராமர் கோயிலை ரவுண்டு கட்டும் சர்ச்சைகள்!

அயோத்தியில் நாளை நடைபெறுகிற ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில், தலித் துறவிகள் மற்றும் ஜனாதிபதி கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published:Updated:
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு
அயோத்தி, ராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பெயர் பட்டியலில், 'குடியரசுத் தலைவர்' மற்றும் 'தலித்' சாமியார்களுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என்ற செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

'உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி பகுதியில்தான் ராமர் பிறந்தார். எனவே, பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில், ராமர் கோயில்தான் கட்டப்பட வேண்டும்' என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த பிரச்னை. அயோத்தியில், 'ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்' என்பதற்காகவே, 'கரசேவை' எனும் அமைப்பைத் தொடங்கி நாடு முழுக்க தொண்டர்களைத் திரட்டி வந்தன இந்து அமைப்புகள்.

அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க-வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும் 'ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்' என்ற பிரசாரத்துக்காக நாடு முழுக்க ரத யாத்திரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு கரசேவகர்களால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு கலவரங்கள் வெடித்தன.

உலகையே அதிர வைத்த இந்த நிகழ்வுக்குப் பிறகு, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம்... இந்துக்களுக்கா அல்லது இஸ்லாமியர்களுக்கா... என்ற கேள்விக்கு விடை காணும் வகையில், கடந்த ஆண்டு 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அறக்கட்டளை அமைத்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அயோத்தியில் நாளை (5.8.2020) ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது.

இதற்கிடையே, 'நாட்டில் கொரோனா கொடூரத்துக்கு மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் சூழலில், அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டாத மத்திய பா.ஜ.க அரசு, கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதில் ஆர்வம் காட்டிவருவது கண்டிக்கத்தக்கது' என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

ஆனாலும்கூட, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலிருந்து புனித மண் எடுக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிற நிகழ்வுகள் படு ஜரூராக நடந்துவருகிறது. மேலும், சரித்திர சிறப்புமிக்க இந்த நிகழ்வில், கலந்துகொள்வதற்காக நாட்டிலுள்ள முக்கியத் தலைவர்கள், துறவிகள் மற்றும் சாமியார்களுக்கு 'ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகக்குழு'வும் உற்சாகமாக அழைப்பு விடுத்துவருகிறது.

இதன்படி பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர். மேலும், 'பாபர் மசூதி இடிப்பு வழக்கு' தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்திவந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வந்தவர்களுமான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வெளியாகியிருக்கும் செய்தி பா.ஜ.க-வின் தொண்டர்களுக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத் கோவிந்த் மற்றும் தலித் சாமியார்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வெளியாகியிருக்கும் செய்தி பேரிடியாக இறங்கியிருக்கிறது.

முரளி மனோகர் ஜோஷி - அத்வானி
முரளி மனோகர் ஜோஷி - அத்வானி

மண்டலேஸ்வர் கண்ணையா பிரபுநந்தன் கிரி என்ற தலித் வகுப்பைச் சார்ந்த துறவி, ''சாதிய ரீதியாக துறவிகளையும் பிரித்துப் பார்த்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் என் போன்றவர்களுக்கு இதுவரையிலும் அழைப்பே வரவில்லை'' என்று தன் வேதனையை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இவரது கருத்தை ஆமோதித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள 'பகுஜன் சமாஜ் கட்சி'த் தலைவர் மாயாவதி, 'பூமி பூஜை விழாவில், சாதிய ரீதியாகத் தலித்துகளை ஓரம்கட்டாமல், மண்டலேஸ்வர் கண்ணையா துறவியையும் அழைத்து கௌரவப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

இதற்கிடையே, பா.ஜ.க-வோடு ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அரியணையில் அமர்ந்துகொண்ட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்கின்றனர்.

இதுகுறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ''சொந்தக் கட்சியிலேயே தனிப்பட்ட விருப்பு - வெறுப்பின் அடிப்படையில், மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விழாவுக்கு அழைக்காமல் ஓரம்கட்டுவது, சிறுபிள்ளைத்தனமானது'' என்கின்றனர். மேலும், ''இந்துக்களாக ஒன்றுகூடுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துக்கொண்டே, சாதி ரீதியாக ஒவ்வொருவரையும் விலக்கி வைத்து தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுவும், அரசியல் ரீதியாக காழ்ப்புணர்வோடு சிவசேனா போன்ற இந்துத்துவ கட்சிகளைத் தள்ளிவைப்பதுவும்கூட பா.ஜ.க மீதான அதிருப்தியை இன்னும் அதிகமாக்கும்'' என்கின்றனர்.

அமித்ஷா - நரேந்திர மோடி
அமித்ஷா - நரேந்திர மோடி

விவாதங்களின்போது எதிர்த்தரப்பிலிருந்து எழுப்பப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பா.ஜ.க தரப்பினர், ''இது கொரோனா தொற்றுக்காலம். எனவே, வயது வித்தியாசம் இன்றி, எல்லோரையும் அழைத்து கூட்டம் சேர்வதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதிலும்கூட அத்வானி, ஜோஷி இருவருக்குமே தொலைபேசி வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியே விழாவில் கலந்துகொள்வார்கள்.

நாட்டின் முதல் குடிமகன் என்பவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். எனவே, குறிப்பிட்ட ஒரு மத விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி ஜனாதிபதிக்கு அழைப்பு அனுப்பப்படுவது மரபு அல்ல'' என்கின்றனர். ஆனாலும், இந்த சர்ச்சை விவகாரத்தில் பா.ஜ.க தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், எதிர் தரப்பினர் எழுப்பும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நரேந்திரனிடம் பேசினோம்...

''அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜை விழா என்பது அரசு விழா அல்ல. நீதிமன்ற உத்தரவின்படி, ராம ஜென்ம பூமி அறக்கட்டளையினர்தான் இதற்கான பணிகளைச் செய்துவருகின்றனர். ஒரு மாநில அரசாக, உத்தரப்பிரதேச அரசு அறக்கட்டளையினரின் பணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மற்றபடி, ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான முழு பொறுப்பையும் அறக்கட்டளையினர்தான் எடுத்துச் செய்துவருகிறார்கள்.

நரேந்திரன்
நரேந்திரன்

அதன்படியே அனைத்து தலைவர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழையும் அறக்கட்டளையினர் அனுப்பி வைத்துள்ளனர். மற்றபடி இந்த விஷயத்தில், மாயாவதிக்கு என்ன ஆர்வம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கூடாது' என்று சொல்லி எதிர்த்து வந்தவர் அவர். எனவே, இதில் கருத்து சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

இது கொரோனா தொற்று எனும் அசாதரணமான காலகட்டம் என்பதால், போக்குவரத்து வசதிகளும் இல்லை... எனவே, விழாவில் எல்லோரும் கலந்துகொள்ள இயலாத சூழல் ஏற்பட்டிருகிறது. சில தலைவர்கள் வயது மூப்பின் காரணமாகவும் தங்களது உடல்நிலையைக் கருத்திற்கொண்டும் நேரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீடியோ கான்ஃபரன்ஸ் வழியே விழாவில் கலந்துகொள்கிறார்கள். விழா மேடையிலேயேகூட உ.பி முதல்வர், பிரதமர், அறக்கட்டளையின் தலைவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் உள்ளிட்ட 5 பேர்தான் உட்கார வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்' என்ற பல ஆண்டு போராட்டத்தில், முற்று முழுதாக எதிர்த்து நின்றவர்கள்தாம் இன்றைக்கு விழா அழைப்பிதழ் குறித்த பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி, விஷமத்தனமான அரசியல் செய்துவருகிறார்கள். சாதி என்ற பேச்சுக்கே இங்கே இடம் இல்லை. நல்ல நோக்கத்தோடு நடைபெறும் விழாவை, சாதிய ரீதியிலான பிரச்னையாக்கி பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற திசை திருப்புகிற நோக்கத்தோடே எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி செய்துவருகின்றனர்.

Narendra modi - Advani
Narendra modi - Advani

பா.ஜ.க தரப்பிலிருந்து இதுகுறித்து, மறுப்பு அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார்கள். நடைபெறுவது ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி இல்லையே..! அறக்கட்டளையினர்தானே நடத்துகிறார்கள். அதற்கு உ.பி அரசு உறுதுணை புரிகிறது... ஆக, விழாவுக்கு யாரைக் கூப்பிட வேண்டும், வேண்டாம் என்பதை அறக்கட்டளையினர்தானே முடிவு செய்ய முடியும். எனவே, தேவையில்லாமல், இதில் சாதிய உணர்வைத் தூண்டி அரசியல் செய்வது அநாகரிகமானது!'' என்றார் உறுதியான வார்த்தைகளில்.