Published:Updated:

`ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 3 ஆண்டுகள்!' - விசாரணை ஆணையம் என்ன செய்தது?

Jayalalithaa
Jayalalithaa

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து, வரும் டிசம்பர் 5 -ம் தேதியோடு மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. தொடர்ச்சியாக  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு இதே தினத்தில்தான்  காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Jayalalithaa
Jayalalithaa

முன்னதாக செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா. ஆர்.கே.நகரில்,  3 மகளிர் பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார். ஜெயலலிதா கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும்,  தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச் சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதலாக, உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

Jayalalithaa
Jayalalithaa

ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று, திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. 

தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

Jayalalithaa
Jayalalithaa

அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. (அவர் குளிர்பானம் அருந்துவது போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.) அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர். கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Arumugasamy
Arumugasamy

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம், இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை இந்த விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளுக்குள்ளாவது, அவரின் மரணம் குறித்த விசாரணை நிறைவுபெறுமா இல்லை, மேலும் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு