Published:Updated:

அதிக மின் கட்டணம்: உண்மை நிலைதான் என்ன? #TNEB #EBBill

மின்வாரியம்
மின்வாரியம்

'கொரோனா ஊரடங்கு காலகட்டமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என 4 மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால், கட்டணம் அதிகளவில் உயர்ந்துவிட்டது' என்கின்றனர். உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள இக்கட்டுரையைப் படியுங்கள்..!

கன்னித்தீவு கதையாக நீண்டுகொண்டேபோன 'மின் கட்டண உயர்வு பிரச்னை'க்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலான 4 மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மின்சார ஒழுங்குமுறை சட்ட விதிகளைப் பின்பற்றியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது' எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

கடந்த 2 மாதங்களாகவே வீடுதோறும் மின் கட்டண அட்டையை எடுத்துவைத்துக்கொண்டு கால்குலேட்டரில் தட்டி கணக்குப்பார்த்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்! 'கொரோனா காலகட்டத்தில், மின்சாரக் கட்டணம் கன்னாபின்னாவென்று எகிறியிருக்கிறது' என்று நடிகர் பிரசன்னா, சமூக ஊடகத்தில் ட்வீட் தட்டிவிட.... மின் கட்டணம் குறித்த செய்திகள் தடதடக்க ஆரம்பித்தன.

'ஷாக்' ஆன தமிழ்நாடு மின்சார வாரியம், நடிகர் பிரசன்னாவின் வீட்டு மின் கட்டண கணக்குகளை ஆய்ந்துபார்த்து, மின் உயர்வுக்கான காரணங்களை விளக்கமாக எடுத்துவைத்தது. இதையடுத்து, பிரசன்னாவும் அமைதியானார். ஆனாலும்கூட, பொதுமக்களிடையே கொரோனா தொற்றைவிடவும் வேகமாக மின் கட்டண உயர்வு குறித்த செய்திகள் தொற்றிகொண்டு அலைக்கழித்து வந்தன.

எதிர்க்கட்சிகளும் இப்பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான அறிக்கைப் போர் தொடுத்து வருகின்றன. 'கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நேரத்தில், மின் கட்டணம் என்ற பெயரில், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கலாமா... எனவே, இந்தக் குறிப்பிட்ட கால அளவிலான மின் கட்டணத்தை அரசே தள்ளுபடி செய்யவேண்டும். அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்று பல்வேறு வடிவங்களில் அழுத்தம் கொடுத்து வருகின்றன கட்சிகள்.

இதற்கிடையே, மின் கட்டண உயர்வுக்கான காரணம் தெரியாமல், அதுகுறித்த கணக்குகளைப் புரிந்துகொள்ளவும் இயலாமல், விழி பிதுங்கி நிற்கின்றனர் சாமான்ய மக்கள். முன் எப்போதும் இல்லாத அளவாக, இந்த முறை மின் கட்டணம் உயர்ந்துபோனது ஏன், மின் கட்டண விதிமுறைகளை புரிந்துகொள்வது எப்படி... என்ற கேள்விகளுக்கு விடைகேட்டு, ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியும் (சீனியர் கெமிஸ்ட்) சி.ஐ.டியு மாநில துணைத் தலைவருமான விஜயனிடம் கேட்டோம்....

விஜயன்
விஜயன்

''மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடைக்காலம் என்பதால், இயல்பாகவே வருடம்தோறும் இம்மாதங்களில் வீடுதோறும் மின் பயன்பாடு அதிகரித்தே காணப்படும். இந்த வருடம் குறிப்பிட்ட இந்த 4 மாதங்களும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். எனவே, மின் விசிறி, டி.வி, ஏசி என மின் உபயோகப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து, மின் உபயோக அளவும் வழக்கத்தைவிடவும் உயர்ந்துவிட்டது.

வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு பணி நடைபெறும். ஆனால், ஊரடங்கின் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் மின் கணக்கீட்டுப் பணிக்கு ஊழியர்கள் வீடு வீடாக சென்று வர முடியாத சூழல். எனவேதான், 'கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய தொகையையே இணையம் வழியாக இப்போதும் செலுத்திக்கொள்ளலாம்' என ஏப்ரல் மாதம் அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிலர் கட்டணமும் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில், ஜூன் மாதம் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகுதான் ஊழியர்கள் வீடுதோறும் சென்று மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரையிலாக மொத்தம் 4 மாத மின் பயன்பாட்டு கணக்கெடுக்கப்பும் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி கிடைத்துள்ள மொத்த மின்சார யூனிட்டுகளின் அளவை சரி பாதியாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றுக்குமான மின் கட்டணம் எவ்வளவு என்று விகிதாச்சார முறையில் கணக்கிடப்பட்டே மக்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதில்தான் மக்களிடையே பல்வேறு குழப்பங்கள் தலைவிரித்தாடுகின்றன. அதாவது, 'வழக்கமாக நாங்கள் செலுத்திவரும் தொகையைவிடவும் 2 மடங்கிலான தொகையைத்தானே, இந்த 4 மாத காலத்துக்கும் சேர்த்து நாங்கள் கட்ட வேண்டி வரும். ஆனால், 4 மடங்கு கட்டணத்தையும்விட அதிகமாக கட்டச்சொல்லி பில் வந்திருக்கிறதே எப்படி...' என்று கேள்வி எழுப்புகிறார்கள் பெரும்பான்மையோர்.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணை
மின்வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணை

அடுத்ததாக, பிப்ரவரி மாத கணக்கெடுப்பை அடிப்படையாகக்கொண்டு, ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தியவர்கள், 'நாங்கள்தான் ஏற்கெனவே மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்திவிட்டோமே... பிறகு ஏன் 4 மாதங்களுக்கும் சேர்த்து எங்களிடமும் கட்டணம் வசூலிக்கிறீர்கள்...' என்று கேட்கின்றனர். இவையிரண்டும்தான், பிரச்னைகள்.

தமிழ்நாடு மின்சார வாரியக் கணக்கீட்டின்படி, ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் என்பது அவரவர் பயன்படுத்துகிற மொத்த யூனிட்டுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, மின்சார வாரியம் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் எந்தெந்த விகிதாச்சார முறையில் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டாலே இந்தப் பிரச்னைகள் எழாது. சுருக்கமாகச் சொல்கிறேன்...

வீடுதோறும் பயன்படுத்தப்படும் மின்சாரப் பயன்பாட்டில் முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அது முழுமையாகவே இலவசம்தான். இந்த வகையில், 100 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே உங்களது மின் பயன்பாடு இருந்தால், நீங்கள் டெபாஸிட் தொகை எனப்படும் நிரந்தரக் கட்டணம் 20 ரூபாய் மட்டுமேதான் செலுத்த வேண்டியிருக்கும். மின்சாரக் கட்டணமே என்று எதுவும் செலுத்தத் தேவையிருக்காது. ஆனால், 100 யூனிட்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்துபவர்கள் அவரவர் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாறுபடும் கட்டணங்களை செலுத்தியாக வேண்டும்.

உதாரணமாக, ஒரு வீட்டில் சராசரியாக 200 யூனிட்டுகளுக்கு உள்ளாகவே மின் பயன்பாடு இருந்தால், அவர்களுக்கு 101-வது யூனிட்டிலிருந்து ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1.50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இரண்டு மாதங்களில், அந்த வீட்டில் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற வகையில் கழிக்கப்பட்டு விடுகிறது. அடுத்து 101-லிருந்து 150 வரையிலான 50 யூனிட்டுகளுக்கும் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 என்ற விகிதத்தில் மொத்தம் 75 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டி வருகிறது. இதில், நிரந்தரக் கட்டணம் என்றவகையில் 20 ரூபாயும் சேர்த்து செலுத்த வேண்டியிருப்பதால், மொத்தம் (75+20=95) 95 ரூபாய் செலுத்த வேண்டும்.

மின் கட்டணம் விளக்க அட்டவணை
மின் கட்டணம் விளக்க அட்டவணை

அடுத்ததாக, சராசரியாக ஒரு வீட்டில் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், அவர்களுக்கான கட்டண விகிதங்கள் மாறுபடுகின்றன. அதாவது, முதல் 100 யூனிட் இலவசம். 101-லிருந்து 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு தலா 2 ரூபாய். 201 யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரையிலாக யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் கட்டணம். இத்துடன் நிரந்தரக் கட்டணம் 30 ரூபாய்.

அடுத்து 500 யூனிட்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துபவர்களுக்கு முதல் 100 யூனிட் இலவசம். 101-லிருந்து 200 யூனிட் வரையிலாக தலா 3.50 ரூபாய். 201-லிருந்து 500 யூனிட் வரையிலாக தலா 4.60 ரூபாய். 501-வது யூனிட்டிலிருந்து ஒவ்வொரு யூனிட் மின்சாரப் பயன்பாட்டுக்கும் தலா 6.60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் நிரந்தரக் கட்டணம் 50 ரூபாய் என்ற அளவில் சேர்த்து வசூல் செய்யப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வீட்டு மின் உபயோகக் கட்டண முறை விகிதாசாரம் என்பது கடந்த 3 ஆண்டுகளாக இப்படித்தான் இருந்துவருகிறது. இப்போது இந்த 4 மாத கட்டணமும் இந்த விகிதாசார முறையின்படியே வசூலிக்கப்பட்டு வருகிறது'' என்று தெளிவாக விளக்கியவரிடம், 620 யூனிட் மின்சார செலவுகொண்ட ஒரு 'மின் பயனீட்டு கட்டண அட்டை'யைக் கொடுத்து விவரம் கேட்டோம்...

மின் கட்டண அட்டை
மின் கட்டண அட்டை

''இந்த அட்டையின்படி இந்த ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என கடந்த 4 மாதங்களிலும் மொத்தமாகச் சேர்த்து 620 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மின் கட்டண விதிமுறைகளின்படி, இந்த 620 யூனிட்டுகளுக்கு மொத்தம் 1,652 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இது முறையானது அல்ல. ஏனெனில், இது மொத்தமாக 4 மாதங்களுக்கான மின் பயன்பாடு. இதை அப்படியே கணக்கிட்டால், கூடுதல் கட்டணம்தான் வரும். மாறாக மார்ச்-ஏப்ரல் என 2 மாதங்களுக்கும், மே-ஜூன் என அடுத்த 2 மாதங்களுக்குமான மின் பயன்பாடாக மாற்றியமைத்தே கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த வகையில், 4 மாதங்களுக்குமான மொத்த மின் பயன்பாடான 620 யூனிட்டை இரண்டால் வகுக்கும்போது, மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு 310 யூனிட், மே-ஜூன் மாதங்களுக்கு 310 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருப்பது தெரியவருகிறது.

மார்ச்-ஏப்ரல் மாத 310 யூனிட் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகிவிடுகிறது. அடுத்ததாக 101-லிருந்து 200 வரையிலான யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 200 ரூபாய். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 310-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 330 ரூபாய். ஆக மொத்தம் 530 ரூபாய். இதனோடு நிரந்தரக் கட்டணம் ரூபாய் 30-ஐ சேர்த்தால் மொத்தம் 560 ரூபாய்.

இதேபோல், மே-ஜூன் மாத மின்சார அளவான 310 யூனிட்டுக்கும் 560 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆக மேற்கண்ட 4 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டிய தொகை என்பது 560+560=1,120 ரூபாய். இதில், மார்ச்-ஏப்ரல் மாத மின் கட்டணமாக 170 ரூபாயை இணையம் வழியே இந்தப் பயன்பாட்டாளர் செலுத்தியுள்ளதால், அந்தத் தொகை கழிக்கப்பட வேண்டும். அதாவது 1,120-170=950. எனவே, இவர் செலுத்த வேண்டிய தொகை என்பது 950 ரூபாய் மட்டுமே'' என்றார் தெளிவாக.

இந்நிலையில், 'மாதம்தோறும் 100-லிருந்து 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இப்போதைய கணக்கீட்டு முறை அதிக மின் கட்டணமாகத்தான் முடியும்' என்கிறார் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியும் 'ஊழல் ஒழிப்புக் கூட்டமைப்பு' இயக்கத்தின் பொதுச் செயலாளருமான செல்வராஜ். இதுகுறித்து விளக்கமாகப் பேச ஆரம்பிப்பவர்,

''கோடைக்காலம் என்பது ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணமாக என்ன தொகை வந்ததோ அதே தொகைதான் ஏப்ரல் மாதமும் வரும். மே, ஜூன் மாதம் கோடைகாலம் என்பதால், உண்மையிலேயே அதிக மின் கட்டணம் வரும். ஆனால், தற்போது மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என மொத்தமாக 4 மாத மின் உபயோகத்தையும் சேர்த்துக் கூட்டி, பின்னர் அதை இரண்டாகப் பிரித்து கணக்கிடுகிறார்கள். வழக்கமாக 500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இது கூடுதல் மின் கட்டணமாகத்தான் அமையும்.

செல்வராஜ்
செல்வராஜ்

உதாரணமாக, ஒரு குடும்பம் வழக்கமாக 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறது என்றால், அதில் முதல் 100 யூனிட் இலவசம். 101-லிருந்து 200 வரையிலாக யூனிட் ஒன்றுக்கு 1.50 ரூபாய் வீதம், மொத்தம் 150 ரூபாய். டெபாஸிட் தொகை 20 ரூபாய். ஆக மொத்தம் 170 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதே குடும்பம், இப்போது 4 மாதத்துக்கும் சேர்த்து 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை இரண்டாகப் பிரித்தால், முறையே 225 யூனிட்டுகள் என்று கணக்கு வரும். ஆக, முதல் 100 யூனிட் இலவசம். அடுத்து 101-லிருந்து 200 வரையிலான ஒவ்வொரு யூனிட்டுக்கும் தலா 2 ரூபாய் கட்டணம். 201-லிருந்து 225 வரையிலான 25 யூனிட்டுகளுக்கு தலா 3 ரூபாய் கட்டணம். இவற்றோடு டெபாஸிட் தொகை 30 ரூபாய். எனவே மார்ச்-ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே மொத்தம் 305 ரூபாய் கட்டணமாக வரும்.

உண்மையில் கோடைக்காலம் என்பது ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதான் வருகிறது. எனவே, வழக்கமான முறையில் ஏப்ரல் மாதம் வீடுதோறும் மின் ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், ஏற்கெனவே பிப்ரவரி மாதம் செலவானது போன்று வெறும் 200 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகியிருக்கும். இதன் தொடர்ச்சியாக கட்டணமும் 170 ரூபாய் என்ற அளவோடு முடிந்திருக்கும். மாறாக 4 மாதங்களுக்கும் சேர்த்து ஒரே தடவையாக கணக்கெடுத்ததால், மே - ஜூன் மாதத்தில் செலவான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு மொத்தக் கணக்கோடு சேர்த்து, கட்டணமும் அதிகமாக உயர்ந்துவிட்டது.

தங்கமணி
தங்கமணி
வீடுகளில் மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? விளக்கம் இதோ!

இந்தக் குழப்பத்துக்கெல்லாம் அடிப்படைக் காரணம், மின் கட்டணத்தில் இருக்கும் ஸ்லாப் நடைமுறைதான். அதாவது 200 யூனிட் வரை ஒரு விலை, 300 யூனிட் வரை ஒரு விலை, 500 யூனிட் வரை ஒரு விலை என விதம் விதமாக கட்டண விகிதாசாரங்கள் மாறுபடுகின்றன. அதேசமயம், வழக்கமாகவே 500 யூனிட்டுகளுக்கும் மேலாக மின் பயன்பாடு உள்ளவர்களுக்கு, இப்போதைய கட்டண நடைமுறை எந்தவித நட்டத்தையும் உண்டாக்காது. ஏனெனில், 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்குமே 6.60 ரூபாய்தான் மின் கட்டணம். எனவே, இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை!'' என்றார் விளக்கமாக.

வாசகர்கள் சிலர் அவர்களது மின் கட்டண அட்டையை நமக்கு அனுப்பி வைத்து, விளக்கம் கேட்டிருந்தனர். அந்த அட்டைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுத்து, கணக்கு விவரங்களை வாங்கி அட்டவணையாகத் தயார் செய்துள்ளோம்.

முதல் அட்டையில், 590 யூனிட் அளவிலான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 920 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எப்படி என்ற விவரத்தை கீழேயுள்ள அட்டவணை வழியே தெரிந்துகொள்ளலாம்...

மின் கட்டண அட்டை
மின் கட்டண அட்டை
மின் கட்டண விளக்க அட்டவணை
மின் கட்டண விளக்க அட்டவணை
EB card
EB card

இரண்டாவது அட்டையில், 2,550 யூனிட் அளவிலான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 11,680 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எப்படி என்ற விவரத்தை கீழேயுள்ள அட்டவணை வழியே தெரிந்துகொள்ளலாம்.

மின் கட்டண விளக்க அட்டவணை
மின் கட்டண விளக்க அட்டவணை
அடுத்த கட்டுரைக்கு