Published:Updated:

இனோவா என்னாச்சு... ரேஞ்ச் ரோவர் வந்தாச்சு! பன்னீர்செல்வத்தின் கார் கதை!

பன்னீர் பயணிக்கும் ரேஞ்ச் ரோவர்
பன்னீர் பயணிக்கும் ரேஞ்ச் ரோவர்

பன்னீர்செல்வம், பவனிவரும் கோடி ரூபாய் ரேஞ்ச் ரோவர் கார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவருக்கு அரசு வழங்கிய புதிய இன்னோவா காரை பற்றிய தகவலை விகடன்தான் வெளியிட்டது. அந்த கார் என்ன ஆனது? ரேஞ்ச் ரோவரின் நதிமூலம் அலசுகிறது இந்தக் கட்டுரை.

* ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்கினார்.

* பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் கார் மீது கல்வீச்சு.

* எடப்பாடி பழனிசாமி காரில் தெரியாமல் ஏற முயன்றார்.

* பன்னீர்செல்வம் காரில் சைரன் அகற்றம்.

* துணை முதல்வர் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.

ஜெயலலிதாவுக்கு பன்னீர் வணக்கம்
ஜெயலலிதாவுக்கு பன்னீர் வணக்கம்

- பன்னீர்செல்வத்தையும் அவருடைய காரைச் சுற்றியும் தொடர்ந்து வட்டமடித்த செய்திகள் இவை. இந்த வரிசையில், 'ரேஞ்ச் ரோவர் காரில் வலம் வருகிறார் பன்னீர்' என்ற செய்தி தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அந்தத் தகவல், 'பன்னீர்செல்வம் துறை, அவருடைய மகன்களின் தொழில் நிறுவனத்துக்கு அனுமதி தந்திருக்கிறது' என்கிற விவகாரத்தில் வந்து நின்றிருக்கிறது.

எடப்பாடி முதல்வர் ஆன பிறகு, சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர், துணைச் சபாநாயகர், அரசுக் கொறடா, ஐஏஎஸ் அதிகாரிகள் என ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்காக 1.90 கோடி செலவில் 11 புதிய கார்களை 2017 ஜூன் முதல் டிசம்பர் வரை வாங்கினார்கள். இந்த விஷயத்தை முதன்முதலில் எக்ஸ்க்ளூசிவ்வாக விகடன்தான் வெளியிட்டது. இதுபற்றி 'மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்' என்ற தலைப்பில் 14/02/2018 தேதியிட்ட ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்
Vikatan

எடப்பாடி முதல்வர் ஆனபிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அது சபாநாயகர் தனபால் முன்னிலையில்தான் நடைபெற்றது. சில மாதங்களில் தினகரனுடன் எடப்பாடி அணிக்கு உரசல் ஏற்பட, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தார்கள். அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

18 எம்.எல்.ஏ-கள்
18 எம்.எல்.ஏ-கள்

அதன்பிறகு, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அந்தச் சூழலில், தடை செய்யப்பட்ட குட்கா பான் பொருள்களை சட்டசபைக்குள் கொண்டுவந்ததற்காக, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்மீது உரிமைமீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. அதை விசாரித்த உரிமை மீறல் குழுவுக்குத் தலைவர், துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்த பிறகுதான், சபாநாயகர் தனபால், துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆகியோருக்கு ஏற்கெனவே அரசு சார்பில் கார்கள் தரப்பட்டிருந்த நிலையில், இந்த மூன்று பேருக்கும் புதிய இன்னோவா கார்கள் 58 லட்சத்து 48 ஆயிரத்து 350 ரூபாய்க்கு அரசு பணத்தில் வாங்கி கொடுத்தது எடப்பாடி ஆட்சி.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

அவர்களுக்கு கார்கள் வாங்கியபோது பன்னீர்செல்வத்துக்கும் புதிய காரை ஆர்டர் செய்தார்கள். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், ‘‘எடப்பாடி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது’’ என கர்ஜித்தார். திடீரென ரிவர்ஸ் கியர் போட்டு எடப்பாடியுடன் கைகுலுக்கினார். இதனால் பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். ஜெயலலிதா சமாதியில் ஞானோதயம் பெற்று, தர்மயுத்தம் தொடங்கி பல்டியடித்த பன்னீருக்குப் பரிசு தர வேண்டாமா? அவருக்கும் புத்தம் புது இன்னோவாவை பார்சல் செய்தது எடப்பாடி அரசு. அவருடன் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்ற அவரின் ஆதரவாளர் ‘மாஃபா’ கே.பாண்டியராஜனுக்கும் புதிய இன்னோவா வாங்கி கொடுத்தார்கள். இந்த இரண்டு கார்களின் விலை, 38.93 லட்சம் ரூபாய். மொத்தமும் அரசு பணம்.

இந்த கார்கள் தொடர்பாக விகடன் மேற்கொண்டு புலனாய்வு செய்தது. `முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய பழைய காரைப் பயன்படுத்த மாட்டேன்' என பன்னீர் சொன்னதால்தான் புதிய காரை அளித்தார்களாம். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அரசின் சார்பில் பயன்படுத்திய TN 05 BG 2345 என்ற இன்னோவா காரை தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பன்னீருக்கு அரசு வாங்கிய காரின்  ஆர்.டி.ஐ ஆவணம்.
பன்னீருக்கு அரசு வாங்கிய காரின் ஆர்.டி.ஐ ஆவணம்.

பன்னீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் புதிய காரின் பதிவு எண் TN 06 BG 2345. அதாவது, அவர் ஏற்கெனவே பயன்படுத்திய காரின் பதிவு எண்ணில் (TN 05 BG 2345) பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை. 06 மட்டுமே மாற்றப்பட்டது. அதாவது, ராசியான நம்பரைக் கேட்டு வாங்கியிருக்கிறார் பன்னீர்.

காருடன் பன்னீர்
காருடன் பன்னீர்

பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்ட புதிய கார் INNOVA CRYSTA 2.4Z PACKAGE 7 SEATER மாடல் கொண்டது. இந்தப் புதிய இன்னோவா கார் ஒன்றின் விலை 19 லட்சத்து 46 ஆயிரத்து 70 ரூபாய். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விகடன் வாங்கிய தகவலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படி அரசு வழங்கிய தகவலிலும் குழப்பங்கள். பன்னீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் புதிய காரின் பதிவு எண் TN 06 BG 2345. ஆனால், அவர் பயன்படுத்திய காரை அன்றைக்கு நாம் படம் எடுத்தபோது, அதிலிருந்த பதிவு எண் TN 06 DG 2345. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தரப்பட்ட தகவல் தவறா அல்லது காரில் எழுதப்பட்டிருக்கும் எண் தவறா எனத் தெரியவில்லை. INNOVA CRYSTA 2.4Z PACKAGE 7 SEATER மாடல் கொண்ட இந்தப் புதிய இன்னோவா கார் ஒன்றின் விலை 19 லட்சத்து 46 ஆயிரத்து 70 ரூபாய். வரி எல்லாம் சேர்க்காமல் இந்தத் தொகையை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரி கட்டினார்களா என்கிற விவரம் எல்லாம் இல்லை.

அரசு வழங்கிய இன்னோவா காரை சில காலம் பயன்படுத்திவிட்டு, இப்போது ரேஞ்ச் ரோவர் காரில் பவனி வருகிறார் பன்னீர்செல்வம். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட மார்ச் 30-ம் தேதி பன்னீர்செல்வம் வந்தபோது, புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில்தான் வந்து இறங்கினார். அதன்பிறகுதான் ரேஞ்ச் ரோவர் காரைப் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

ரேஞ்ச் ரோவர் கார் பற்றிய தகவல்
ரேஞ்ச் ரோவர் கார் பற்றிய தகவல்

தேசியக் கொடியுடன் வந்த அந்த ரேஞ்ச் ரோவர் காரின் பதிவு எண் TN 05 CE 2345. அந்த கார், விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. 2019 பிப்ரவரி 1-ம் தேதி, அந்த காரை சென்னை வியாசர்பாடியில் உள்ள வட சென்னை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் பதிவு எண்ணும் 2345-தான்.

1.50 கோடி மதிப்புள்ள இந்த ரேஞ்ச் ரோவர் காரின் நதிமூலம் தேடிய போதுதான் அந்த கார் ரியல் எஸ்டேட் துறையில் அனுமதி பெற்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது என்கிற விவரம் தெரியவந்தது. விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் காரை ஏன் பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார்? `பழசு வேண்டாம் என 19 லட்சத்துக்கு புது இன்னோவா காரை வாங்கிய ஓ.பன்னீர்செல்வம், இன்னோவாவை ஏன் பயன்படுத்தவில்லை, அந்த கார் என்ன ஆனது என்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடை இல்லை. விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம் யாருடையது என்கிற கேள்விக்கு மட்டும் விடை கிடைத்தது.

இரண்டு மகன்களுடன் ஓ.பி.எஸ்.
இரண்டு மகன்களுடன் ஓ.பி.எஸ்.
`இந்தியாவில் 2020 ஏப்ரல் மாத கார் விற்பனை!' - அதிர்ச்சி கொடுத்த கொரோனா

தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரும் ஜெய பிரதீப்பும் பன்னீர்செல்வத்தின் மகன்கள். அவர்கள் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்தின் பெயர்தான் விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட். திருப்பூரில் மேற்கொள்ளப்போகும் ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டை அரசிடம் பதிவுசெய்திருக்கிறது விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம்.

பன்னீர்செல்வம் வசமிருக்கும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் கடந்த ஜனவரி 20-ம் விண்ணப்பித்திருக்கிறது விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனம். அதாவது, அப்பா வசம் இருக்கும் துறையிடம் மகன்கள் நடத்தும் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அந்த விண்ணப்பத்தில் தங்களது முகவரியாக அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தின் முகவரியை அளித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

''தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்” (TNRERA) பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் குழுமத்திடம், மகன்கள் இருவரும் தாங்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்தின் கட்டுமான தொழிலைப் பதிவுசெய்துகொள்ள விண்ணப்பித்துள்ளது, ஆட்சியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சியாகும். தான் ஒரு எம்.பி என்பதை மறந்துவிட்டு, தமது சகோதரரை இணைத்துக் கொண்டு, இன்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராகத் தொடரும் ரவீந்திரநாத் குமார், தந்தையின் துறையிலேயே, தமக்கு சாதகமான உத்தரவு பெற முயல்வதும், அதற்குத் தந்தையின் துறை அனுமதி கொடுப்பதும், இன்னொரு லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை'' என அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

காரில் ஆரம்பித்து கட்டுமானத் தொழிலில் வந்து நிற்கும் இந்த விவகாரத்தில், பன்னீர்செல்வம் வாய் திறந்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.
அடுத்த கட்டுரைக்கு