Published:Updated:

`கேம்பிரிட்ஜ்' காங்கிரஸ்; `ஃபேஸ்புக்' பா.ஜ.க! - விவாதமாகும் சமூக ஊடக சர்ச்சை

மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg
மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg

``ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி தலைவராக இருந்த ராஷ்மி தாஸுக்கும் அன்கி தாஸுக்கும் உள்ள தொடர்பு பற்றி நாங்கள் பா.ஜ.க-விடம் கேட்க வேண்டும்."

`இந்திய அரசியலோடு மோதும் ஃபேஸ்புக்கின் வெறுப்புப் பேச்சு விதிகள்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதிகளோடு பா.ஜ.க-வினருக்கு உள்ள தொடர்புகள், சந்திப்புகள் ஆகியவற்றை விரிவாக விவரித்துள்ளது தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

மோடியுடன் ஃபேஸ்புக் நிர்வாகிகள்
மோடியுடன் ஃபேஸ்புக் நிர்வாகிகள்

அன்கி தாஸ் என்ட்ரி!

இந்தியாவில் 280 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப்பை 400 மில்லியன் இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் அதிகப்படியான பயனாளர்களை ஃபேஸ்புக் பெற்றிருப்பதும் இந்தியாவில்தான்.

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் இந்திய பப்ளிக் பாலிசி இயக்குநர் அன்கி தாஸுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் 2011-ம் ஆண்டு பதவிக்கு வந்தார் அன்கி தாஸ். `தொடக்கம் முதலே பா.ஜ.க நிர்வாகிகளின் ஃபேஸ்புக் வெறுப்பு பேச்சுகளின்மீது இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ எனச் சொல்லப்படுகிறது.

வெறுப்புப் பேச்சுக்கு வரவேற்பு!

உதாரணமாக, தெலங்கானாவின் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங், ரோஹிங்கியா முஸ்லிம்களாகக் குடியேறியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற வெறுப்புப் பேச்சை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்க முற்பட்டபோது, அன்கி தாஸ் தலையிட்டார் என ஃபேஸ்புக்கின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்கி தாஸ்
அன்கி தாஸ்

இந்த விவகாரத்தில், `ராஜா சிங்கின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க வேண்டும்’ என்று கடந்த மார்ச் மாதம் தெலங்கானா சைபர் கிரைம் அதிகாரிகள், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பரிந்துரை செய்தனர். ஆனால், ராஜா சிங்கின் ஃபேஸ்புக் பக்கத்தை பல்லாயிரக்கணக்கானோர் பின்தொடர்வதால் நடவடிக்கை எடுப்பதற்கு அன்கி தாஸ் மறுத்துவிட்டார் எனவும் சொல்கின்றனர்.

அடுத்தடுத்த அட்டாக்!

ராஜா சிங்கைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.பி அனந்த்குமார் ஹெக்டே, `கொரோனா ஜிஹாத்' என்ற திட்டத்தின்கீழ் நாட்டில் கொரோனா வைரஸை முஸ்லிம்கள் பரப்புவதாக ஃபேஸ்புக்கில் குற்றம்சாட்டியிருந்தார். கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்தில் தப்லீக் ஜமாஅத் என்ற முஸ்லீம் இயக்கம் கோவிட்-19ஐ பரப்பியதாகத் தகவல் பரப்பப்பட்டது. இதன் பின்னணியில் பா.ஜ.க மற்றும் அவர்கள் சார்ந்த ஐ.டி விங்குகள் இருந்தன எனவும் வால் ஸ்ட்ரீட் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னர், பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா, சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் வெடித்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரமும் ஃபேஸ்புக் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. `ஃபேஸ்புக்கில் பா.ஜ.க-வின் வன்முறைப் பேச்சுகளின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்தனர்' எனவும் அதன் முன்னாள் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக்கின் பிசினஸ்!

இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிடம் பேசிய அன்கி தாஸ், `பா.ஜ.க-வினரின் பதிவுகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வர்த்தகத்தை பாதிக்கும்' என்று கூறியதாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. கூடவே, மோடியுடனான சந்திப்பில் அன்கி தாஸ் உள்ளிட்ட ஃபேஸ்புக் நிர்வாகிகள் இருந்த படத்தையும் வெளியிட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தி குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பி, வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மைநிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’ என ட்விட்டரில் குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்புக்கு என்ன லாபம்?

`இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், ``ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி தலைவராக இருந்த ராஷ்மி தாஸுக்கும் அன்கி தாஸுக்கும் உள்ள தொடர்பு பற்றி நாங்கள் பா.ஜ.க-விடம் கேட்க வேண்டும். ஏனென்றால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான தடைகள் இருந்தன என்று நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தைப் பிரிப்பதுதான் பா.ஜ.க-வின் நிகழ்ச்சி நிரல். அவர்களோடு உங்களுக்கு ஏதேனும் ஒப்பந்தம் போடப்பட்டதா... இதற்குக் கைம்மாறாக உங்கள் நிறுவனம் இந்தியாவில் மேலும் வளர்ச்சியடைய ஏதேனும் உதவி கிடைக்கிறதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா!

காங்கிரஸின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ``தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களிடையே நற்பெயரைச் சம்பாதிக்காமல் தோல்வியுற்றவர்கள்தான், `மொத்த உலகமும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறுகின்றனர். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மற்றும் ஃபேஸ்புக்கிடம் தரவுகளைப் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டீர்கள். இப்போது எங்களைக் கேள்வி கேட்கிறீர்கள்’’ என்று ராகுலுக்கு எதிராக ட்வீட் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ``காங்கிரஸ் எம்.பி சசி தரூர், `நரேந்திர மோடி ஏன் தாடி வளர்க்கிறார்?' எனக் கேட்கிறார். மோடி எதைச் செய்தாலும் அதைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுகிறது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப்போல இருக்கிறது. சமூக ஊடங்களில் பா.ஜ.க வளர்ந்தால், அதற்கு ஒரு காரணத்தைச் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதே ஃபேஸ்புக்கை ஆட்டுவித்தது காங்கிரஸ்தான். தேர்தலுக்கு முன்னால் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவைவைத்து குற்றச்சாட்டு எழுந்தது.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்கிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நல்ல திட்டங்களையும் நல்லாட்சியையும் அவர் நாட்டுக்குக் கொடுக்கிறார். அதனால் மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பைப் பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. செல்வாக்கை இழந்துவிட்ட காரணத்தால் குற்றம் சாட்டுகிறார்கள்" என்றார்.

`சர்ச்சைகளின் நாயகன்' மார்க்?

`ஓர் அரசியல்வாதியிடமிருந்து வரும் வன்முறைப் பேச்சுகளை அனுமதிப்பதில்லை' என ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்தாலும், சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. காரணம், 2016 முதலே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது ஃபேஸ்புக். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்காக `கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் நிறுவனத்தால் ஐந்து கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், திருடப்பட்டதாகத் தகவல் வெளியானது.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தகவல் திருட்டு நடந்ததாகச் சொல்லப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பும் கேட்டார் மார்க். ஆனால், `5 கோடி அல்ல; 8.75 கோடிப் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக' மார்க் தெரிவித்தபோது, ஃபேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்

இந்த விவகாரம் பெரிதானபோது விளக்கமளித்த மார்க், ``தேர்தல்களில் ஃபேஸ்புக் தலையீட்டைத் தடுப்பது, வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைத் தடை செய்வது, போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது, பயனாளர்களின் பிரைவசி எனப் பல்வேறு நடவடிக்கைகளை எங்களின் பயனர்களின் நன்மைக்காக நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றில் நாங்கள் இதுவரைக்கும் செய்துள்ள மாற்றங்களைக் கண்டு நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். 30,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது இதற்காகவே பணிபுரிகின்றனர்’’ என்றவர்,

``தேர்தல்களில் ஃபேஸ்புக் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்போதும் முழுமையாகத் தடுக்க முடியாது. மாறாக, அந்தந்தச் சமயங்களில் இருக்கும் தொழில்நுட்பங்கள், பிரச்னையின் தன்மை ஆகியவற்றை உணர்ந்து தடுக்க முடியும். அடுத்து வரக்கூடிய வருடம் சிறப்பாக அமையட்டும்’’ என 2018-ம் ஆண்டு இறுதியில் பேசினார். ஆனால், அவர் சொன்னதுபோல செயல்படவில்லை என்பதையே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு