Published:Updated:

`தீ தடுப்புக் கோடு அமைப்பதில் முறைகேடா?' - தேனி வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

forest fire
forest fire

தேனி மாவட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ அபாயம் உள்ள பகுதியில் தீ தடுப்புக் கோடு அமைத்து வனத்துறையால் தீ வைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் அனைவரும் அறிந்ததே. அச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் டிரெக்கிங் செல்வது முறைப்படுத்தப்பட்டது.

forest fire
forest fire

இது ஒருபுறம் என்றால், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, தீ தடுப்புக் கோடு அமைத்து, காய்ந்த புற்களுக்கு தீவைப்பதை வனத்துறை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, தேனி மாவட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ அபாயம் உள்ள பகுதியில் தீ தடுப்புக் கோடு அமைத்து வனத்துறையால் தீ வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை செய்தபோது, ``காட்டுத்தீ ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, காட்டுத்தீ அபாயம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறை தீ வைப்பது வழக்கம். கோடை காலத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். கிலோமீட்டருக்கு ஒரு தொகை என்ற வீதம் தமிழக அரசால் ஒரு பெரும் தொகை ஒதுக்கப்படும். அந்தத் தொகையை வைத்து, வனப்பகுதியில் தீ தடுப்புக் கோடு அமைத்து, ஒரு குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தீ வைக்க வேண்டும்.

காட்டுத்தீ
காட்டுத்தீ

ஆனால், தற்போது, எந்தத் தீ தடுப்புக் கோடும் அமைக்காமல், மொத்தமாகத் தீ வைத்துவிட்டு, தடுப்புக்கோடு அமைத்தோம். அதற்கு இவ்வளவு செலவானது எனக் கணக்குக் காட்ட முயல்கின்றனர். இது முறைகேடு மட்டுமல்லாமல், பேராபத்தையும் ஏற்படுத்தும். காய்ந்த புற்களை வெட்டி தீ தடுப்புக் கோடு அமைக்காமல், மொத்தமாகத் தீ வைக்கும்போது, வன உயிரினங்களுக்கு மட்டுமல்ல, காட்டுத்தீ அபாயம் இல்லாத பகுதியையும் சேர்த்து அழிக்கின்றனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள்.

தடையை மீறி ட்ரெக்கிங்... மீண்டும் சர்ச்சையில் குரங்கணி... கண்டுகொள்ளாத கேரளா!

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``டிசம்பரில் ஆரம்பித்த பணிகளைச் சரியாகச் செய்து கிட்டத்தட்ட பணிகளை முடித்திருக்கிறோம். பணிகளில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. சிலர் திட்டமிட்டே பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு