Published:Updated:

`ஒருநாளுக்காக 20 நாள்கள் கெடுபிடி!'- ஜனாதிபதி வருகையால் அல்லல்பட்ட திருநள்ளாறு

ஜனாதிபதி
ஜனாதிபதி

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன் மனைவியுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவர் வருகைக்காக வரலாறு காணாத வகையில் நடத்தப்பட்ட கெடுபிடிகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள சனிபகவானை தரிசனம் செய்ய நேற்று காலை ஜனாதிபதியும் அவரது மனைவி சவிதாவும் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் காலை 10.40 மணிக்கு வந்து இறங்கினார்கள். கவர்னர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பொன்னாடை வழங்கி வரவேற்றனர். அதன்பின் கோயிலிலுள்ள சண்டிகேஸ்வரர், அம்பாள், தர்ப்பாரண்யேசுவரர், சனிபகவான் சந்நிதிகளில் ஜனாதிபதியும் அவரது மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி
ஜனாதிபதி

சனிபகவான் சந்நிதியில் 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிப்பட்டனர். அதன்பின் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நம் நீர் திட்டத்தின் கீழ் 266 குளங்கள் தூர் வாரப்பட்ட நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்த ஜனாதிபதி, மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜாவைப் பாராட்டினார். "திருநள்ளாறு கோயில் சுவாமி தரிசனம் மிகவும் திருப்தியாக இருந்தது. அன்பான வரவேற்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆனால், ஜனாதிபதியின் வருகைக்காகக் கடந்த 20 நாள்களாக அரசுத் துறையினர் செய்த ஏகப்பட்ட கெடுபிடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் திருநள்ளாறு கோயில் தரிசன வருகைக்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஹெலிகாப்டர் தளம் முதல் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

கோயிலின் உள்ளேயும், வெளியேயும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய வண்ணம் இருந்தனர். நேற்று காலை முதலே கோயிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ஜனாதிபதி
ஜனாதிபதி

``குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குக் கையெழுத்திட்ட ஜனாதிபதிக்கு இப்பகுதியில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு செய்யப்பட்டதாக" அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிரவி - திருபட்டினம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் விடுதலைகனலிடம் பேசினோம்.

``குடியரசுத்தலைவர் பாண்டிச்சேரி - காரைக்காலில் எந்தக் கோயிலுக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் சென்று வழிபடட்டும். வட மாநிலங்கள் போல் இங்கு யாரும் அவரை சாதியைக் காரணம் காட்டி கோயிலுக்கு வெளியே நிற்க வைக்க மாட்டார்கள். ஆனால், குடியரசுத்தலைவரின் சில நிமிட தரிசனத்திற்காகத் திருநள்ளாறு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பல நாள்கள் கெடுத்துவிட்டார்கள். மரங்களை வெட்டியும், சில குடிசை வீடுகளை அகற்றியும், போக்குவரத்தைத் தடைசெய்தும் பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.

சுதந்திர இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகன் என்று பெருமிதத்தோடு அழைக்கப்படும் ஜனாதிபதி இங்கு வருகை தரும் போது 144 தடை, மக்கள் வீடுகளின் வாசலில் நிற்கத் தடை, வீட்டு மாடியில் நிற்கத் தடை, வியாபாரிகள் கடை திறக்கத் தடை, பாதசாரிகள் சாலையில் நடக்கத் தடை காரைக்கால் மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கத் தடை - இவ்வளவு தடைகள் இதற்கு முன் எவர் வருகைக்கும் போட்டதில்லை. இதே கோயிலுக்கு ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்கூட மிக எளிமையாக மக்களோடு மக்களாய் வந்து சென்றிருக்கிறார்.

ஜனாதிபதி
ஜனாதிபதி

தனிப்பட்ட தெய்வ வழிப்பாட்டிற்காக வந்த ஜனாதிபதியின் வருகைக்கு இத்தனை அலப்பறைகளும் கெடுபிடிகளும் தேவைதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜனாதிபதியின் வருகை மகிழ்ச்சியைவிட வேதனையே அதிகம் தந்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு