Published:Updated:

`2 வருடங்கள்; ஆற்றில் லாரிலாரியாகக் குப்பைகள்!' - திட்டக்குடி பேரூராட்சி அதிர்ச்சி #ViralVideo

தேக்கி வைக்கப்பட்ட குப்பைகளை லாரிகளின் மூலம் ஏற்றிச்சென்று பேரூராட்சி நிர்வாகமே ஆற்றில் கொட்டும் வீடியோ காட்சி தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

திட்டக்குடி பேரூராட்சி
திட்டக்குடி பேரூராட்சி

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பெய்துவரும் தொடர்ச்சியான கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி நிரம்பிவிட்ட நிலையில், தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, கெடிலம் ஆறு, பறவனாறு, வெள்ளாறு போன்றவற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

குறிப்பாக கடந்த 2 வருடங்களாக நீரை பார்த்திராத கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இருக்கும் வெள்ளாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியோடு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகம் வேறுவிதமாக யோசித்தது.

திட்டக்குடி வெள்ளாறு
திட்டக்குடி வெள்ளாறு

பல நாள்களாக தேக்கிவைக்கப்பட்ட குப்பைகளை லாரி லாரியாக எடுத்துச்சென்று அந்த ஆற்று நீரில் கொட்டியது. சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அந்த வீடியோ காட்சியில் `திட்டக்குடி பேரூராட்சி’ என்று எழுதப்பட்ட லாரிகளில் கொண்டுவரும் குப்பைகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. அப்போது சில பணியாளர்கள் கடப்பாறை கொண்டு ஆற்றில் இருக்கும் மேடுகளை இடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆற்றில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள்
ஆற்றில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள்

அதுகுறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் மேலும் பேரதிர்ச்சியாக இருந்தது. சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கடந்த 2 வருடங்களாகவே பேரூராட்சி நிர்வாகம் இங்குதான் தொடர்ச்சியாக கொட்டி வந்திருக்கிறது. அதனால் அந்தக் குப்பைகள் கெட்டித்தன்மை பெற்றுவிட்டது.

அதனால், இந்த மழையை சாதகமாக வைத்து அந்தக் குப்பை மேட்டை கரைத்து ஆற்று நீரோடு அனுப்பும் பணியையும் பேரூராட்சி நிர்வாகம் செய்திருக்கிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இயற்கைக்கும், மனிதகுலத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன்

தமிழகத்தில் பல மாவட்டங்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், இயற்கையின் ரத்த நாளங்களாக விளங்கும் ஆறுகளை அரசின் நிர்வாகமே குப்பை மேடாக்கியிருப்பது மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

`என் ஸ்டேஷன் இது; கலெக்டரக்கூடப் பாரு... வெளியே போ!'- கடலூர் பெண் எஸ்.ஐயைச் சுற்றும் சர்ச்சை

இதுகுறித்து விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனை தொடர்புகொண்டோம். ``வீடியோவில் நீங்கள் பார்த்த காட்சிகள் உண்மையானதுதான். அது தொடர்பாக எனக்கு புகார் வந்ததும் மறுநாளே நேரில் சென்று உறுதிப்படுத்தியதோடு, பேரூராட்சி பணியாளர்களிடம் இனி அப்படி செய்யக் கூடாது என்று எச்சரித்தேன். மேலும், அந்த பேரூராட்சியின் செயல் அலுவலர் குணசேகரனையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறேன். அப்படியான சம்பவம் இனி நடைபெறாது” என்றார்.