Published:Updated:

தூத்துக்குடி: திருநங்கைகளிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட ஊர்க் காவல்படை பணி ஆணை! - என்ன நடந்தது?

பணி நியமன ஆணை பெற்ற திருநங்கை ஸ்ரீஜா
பணி நியமன ஆணை பெற்ற திருநங்கை ஸ்ரீஜா

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஊர்க்காவல் படையினர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கிய நிகழ்ச்சியின் இறுதியில், திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட ஆணைகள் மட்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது திருநங்கைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு, மாவட்டக் காவல்துறையால் கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. 100 பெண்கள் உட்பட 695 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 24-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில், 31 ஆண்கள், ஏழு பெண்கள் மற்றும் இரண்டு திருநங்கைகள் உட்பட 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

எஸ்.பி., - ஜெயக்குமார்
எஸ்.பி., - ஜெயக்குமார்

இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, ``தூத்துக்குடி மாவட்டத்தில் 40 பேர் ஊர்க்காவல் படைக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேர் திருநங்கைகள், நமது மாவட்டத்திலேயே முதன்முறையாக இரண்டு திருநங்கைகளுக்கு ஊர்க் காவல் படையில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், முக்கிய நிகழ்வுகளில் பாதுகாப்பில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என மீடியாக்களுக்குப் பேட்டியளித்தார்.

இந்தநிலையில், நிகழ்ச்சியின் நிறைவில் இரண்டு திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் மட்டும் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. ``ஒரு வாரம் கழிச்சு வாங்க” என்று மட்டும் அவர்களுக்கு பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து எஸ்.பி அலுவலகத்தில் விசாரித்தோம். ``கொரோனா ஊரடங்கின்போது கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் எஸ்.பி சாரை சந்திச்சு, `எங்கள்ல பலர் டிகிரி முடிச்சிருக்கோம். வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தா எங்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியா இருக்கும்’னு மனு கொடுத்தாங்க.

நியமன ஆணை பெறும் திருநங்கை லக்‌ஷயா
நியமன ஆணை பெறும் திருநங்கை லக்‌ஷயா

`உங்கள்ல படித்த, படிக்காதவர்கள் அவரவர்களின் பயோடேட்டாவை எஸ்.பி ஆபீஸ்ல கொடுங்க. தகுந்த வேலைவாய்புக்கு முடிந்த ஏற்பாடுகளைச் செய்யறேன்’னு சாரும் சொன்னார். ஊர்க் காவல் படை அறிவிப்பின்போதும் திருநங்கைகள் விண்ணப்பிச்சிருந்தாங்க. அதில், இரண்டு பேருக்கு பணி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் ஸ்ரீஜா, லக்‌ஷயா இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டாங்க. ஆனா, நிகழ்ச்சியின்போது `திருநங்கைகளின் பணி நியமனத்தை மட்டும் இப்போதைக்கு நிறுத்திவைங்க’ன்னு ஓர் அறிவிப்பு வந்துச்சு. இதுதான் காரணம். வேறெதுவுமில்லை” என்றனர்

இது குறித்து ஊர்காவல் படைக்குத் தேர்வான ஸ்ரீஜா, லக்‌ஷயா இரு திருநங்கைகளிடமும் பேசினோம். ``ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோதே, எங்கள்ல ஆறு திருநங்கைகள் விண்ணப்பிச்சோம். அதுல எங்க இரண்டு பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்திலேயே முதன்முறையா திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டிருப்பது

நியமனை ஆணை வழங்கிய எஸ்.பி
நியமனை ஆணை வழங்கிய எஸ்.பி

எங்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. எஸ்.பி சார் கையால அந்த ஆர்டரை வாங்கினப்போ ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, அந்த சந்தோஷம் அரை மணி நேரம்கூட நீடிக்கலை. எதுவுமே சொல்லாம,`ஒரு வாரம் கழிச்சு வாங்க’ன்னு மட்டும் சொன்னாங்க. உயரதிகாரிகளிடமிருந்து ஏதோ போன் வந்துச்சு. அதனாலதான் எங்க ஆர்டரை திரும்ப வாங்கிட்டாங்கன்னு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் பேசிக்கிட்டாங்க. இப்படிச் சொன்னதும் உடனே அங்கேருந்து கிளம்பி வந்துட்டோம்.

சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி உதவி ஆய்வாளராகவும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நஸ்ரியா காவலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில இருக்காங்க. அந்த இரண்டு பேரும் அரசுப் பணியில் சேர்ந்திருக்காங்க. எங்களுக்குக் கொடுக்கப்பட்டது சாதாரண பாதுகாப்புப் பணிதான். அதிகபட்சமாக மாசத்துல அஞ்சு நாள்கள்தான் இந்தப் பணிக்கு கூப்பிடுவாங்க. ஒரு நாளுக்கு 500 ரூபாய்தான் மதிப்பூதியம். அப்படியிருக்கும்போது எங்களை ஒதுக்குவதிலோ, எங்களுக்கு அந்தப் பணியைக் கொடுப்பதிலோ ஏன் அதிகாரிகள் யோசிக்கிறாங்கன்னு தெரியலை” என்றனர் வேதனையுடன்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி., ஜெயக்குமார்
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி., ஜெயக்குமார்

இது குறித்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரிடம் பேசினோம், ``திருநங்கைகள் இரண்டு பேருக்கு பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டது உண்மைதான். அவங்களோட அப்பாயின்ட்மென்ட்டில் உயரதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டியிருக்கிறது. அந்த நடைமுறைகள் முடிந்ததும் அவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு