Published:Updated:

நெல்லை: குடியரசு விழா மைதானத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்! - போலீஸ்மீது புகார்

மனு அளிக்க வந்த சுமன் குடும்பத்தினர்
மனு அளிக்க வந்த சுமன் குடும்பத்தினர்

நெல்லையில் குடியரசு விழாக் கொண்டாட்டம் நடைபெற்ற மைதானத்தின் முன்பாக வந்த குடும்பத்தினர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தார்கள்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. அவரின் மகன் சுமன். அவர் அதே பகுதியில், வீடுகள், மற்றும் கடைகளுக்கு குடிதண்ணீர் கேன் விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டுவருகிறார். அவரது வருமானத்தை நம்பித்தான் மேரியின் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

`குடியரசு ஜனனம்' : 1950 -ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்க கட்டுரை #VikatanOriginals

கடந்த 16-ம் தேதி இரவு இடிந்தகரை கிராமத்திலிருந்து பைக்கில் சென்ற சுமன், அருகிலுள்ள குடோனிலிருந்து குடிதண்ணீர் எடுக்கச் சென்றார். அப்போது எதிரே ஒரு கார் வந்திருக்கிறது. அந்த காரின் முகப்பு விளக்கு அதிக வெளிச்சத்துடன் இருந்ததால், பைக்கில் சென்ற சுமனுக்கு சாலையே தெரியவில்லை. அதனால் அவர் வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்.

சாலையில் அதிக ஒளியுடன்கூடிய விளக்குடன் வந்த கார், சுமன் வாகனத்தின் மீது மோதுவதுபோல வந்து நின்றிருக்கிறது. அந்த காரில் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவரான நவிசன் இருந்திருக்கிறார். காரை நிறுத்திவிட்டு இறங்கிய நவிசன், சுமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சுமனின் தாய் மேரி
சுமனின் தாய் மேரி

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. அதில் சுமன் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், காயமடைந்த அவர் குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தன் மீது தாக்குதல் நடத்திய நவிசன்மீது சுமன் புகார் அளித்திருக்கிறார். அதேபோல நவிசனும் சுமன்மீது கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுமன் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத கூடங்குளம் போலீஸார், நவிசன் அளித்த புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுமனைக் கைதுசெய்தனர்.

குடியரசு விழா மைதானத்தில் சுமன் குடும்பத்தினர்
குடியரசு விழா மைதானத்தில் சுமன் குடும்பத்தினர்

பாதிப்புக்கு உள்ளான தன் மகன் சுமன் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத கூடங்குளம் போலீஸார், தன் மகனை மட்டும் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதால் சுமனின் தாய் மேரி கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

அதனால் சுமனின் தாய் மேரி, மனைவி லெனிஸ் மற்றும் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவைச் சந்தித்து மனு அளிக்க வந்திருக்கிறார்கள். இன்று குடியரசு விழாவுக்காக ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், வ.உ.சி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட்டிருக்கிறது.

நெல்லையில் நடந்த குடியரசு விழா
நெல்லையில் நடந்த குடியரசு விழா

அதனால், குடியரசு விழா நடந்த வ.உ.சி மைதானத்துக்கு வந்த அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. அதனால் விழா நடந்த மைதானத்தின் முன்பாக சுமன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் தீக்குளிக்கப்வதாகத் தெரிவித்தனர்.

அதனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினார்கள்.சுமன் கைதுச் சம்பவம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு