Published:Updated:

``’லஞ்சம் வாங்கினீங்களா’னு கேட்டேன்; அடிச்சிட்டாங்க!’ - கதறும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்

ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக நடந்த போராட்டம்
ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக நடந்த போராட்டம்

`ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு. தனி நபரின் ஆதாயத்துக்காக போர்வெல் போட அனுமதி கொடுப்பது நியாயமா... பொதுமக்கள் நலனில் அக்கறையில்லையா?’ என்று பி.டி.ஓ-விடம் கேள்வி கேட்டேன். அதற்கு அவர், `காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிங்க’ என்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நிம்மியம்பட்டு கிராமத்தில், வெங்கடேசன் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில், வணிக வளாகம் கட்டி போர்வெல் அமைக்க பணி மேற்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து என்பவர் போர்வெல் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, நிம்மியம்பட்டு ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கு பணியிலிருந்த ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியையும் சந்தித்து,``பொது ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் தனி நபரின் ஆதாயத்துக்காக மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. அனுமதி கொடுத்தால், பொதுக் கிணற்றில் நீர்மட்டம் குறைந்துவிடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்று முறையிட்டிருக்கிறார்.

ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி
ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி

ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி, அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால், நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து அரசு விதிமுறைகளை எடுத்துச்சொல்லி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஊராட்சி செயலாளர் முறையான பதில் அளிக்காமல் மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சை நாம் தமிழர் கட்சி பிரமுகர், தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி, வைரமுத்துவிடமிருந்து செல்போனைப் பறிக்க முயன்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால், ஊராட்சி செயலாளருக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

`இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி

தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, ஆலங்காயம் காவல் நிலையத்திலும் அவர் புகாரளித்தார். பதிலுக்கு, ஊராட்சி செயலாளர் தரப்பிலும் பணி செய்யவிடாமல் தடுத்தாகக் கூறி நாம் தமிழர் கட்சி பிரமுகர்மீது பரஸ்பர புகார் கொடுத்திருக்கிறார்கள். இருவரது புகார் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சஸ்பெண்ட் உத்தரவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் ஆலங்காயம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி அலுவலர்கள் பலர் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, நாம் தமிழர் கட்சி சார்பிலும் ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக நடந்த போராட்டம்
ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக நடந்த போராட்டம்

இந்தச் சம்பவம் குறித்து தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்துவிடம் கேட்டபோது, ``ஊராட்சி செயலாளர் ஜீவஜோதிமீது ஏற்கெனவே பல்வேறு முறைகேடுப் புகார்கள் உள்ளன. எங்கள் பகுதியில், முறைகேடாக தனிநபர் போர்வெல் அமைக்கிறார். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும் என்று கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி, ஊராட்சி செயலாளர், பி.டி.ஓ வரை சென்று ஏற்கெனவே முறையிட்டேன். அப்போது, போர்வெல் போடுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி 10,000 ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு போர்வெல் போடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார். இவர் கொடுத்த தைரியத்தில், அந்த தனிநபரும் போர்வெல் போட்டுவிட்டார். `ஏற்கெனவே தண்ணீர் இல்லை. பொதுமக்களின் நலனில் அக்கறையில்லையா?’ என்று பி.டி.ஓ-விடம் கேள்வி கேட்டேன். அதற்கு அவர், ‘காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிங்க’ என்கிறார்.

லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரிடம் சென்று,`லஞ்சம் வாங்கினீங்களா... வெட்கமாகயில்லையா?’ என்று தட்டிக் கேட்டேன். அவரும், அங்கிருந்த அவரது மகனும், ஆபரேட்டர் ஒருவரும் சேர்ந்து என்னைத் தாக்கினார்கள். என் கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு