Published:Updated:

`ரூ.7.70 லட்சம் தண்ணீர் தொட்டி சர்ச்சை...!’ - திருப்பூர் விவகாரத்தின் பின்னணி

சர்ச்சையில் சிக்கிய 7.70 லட்ச ரூபாய் தண்ணீர் தொட்டி
சர்ச்சையில் சிக்கிய 7.70 லட்ச ரூபாய் தண்ணீர் தொட்டி

``ஒரு சின்டெக்ஸ் டேங்க் வைக்க 7 லட்ச ரூபாய் செலவாகுமா?’’ என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 4-வது மண்டலத்திற்கு உட்பட்டது 50-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் பகுதி. இங்கு மாநகராட்சி சார்பில் தண்ணீர் தொட்டி ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 7.70 லட்ச மதிப்பீட்டிலான அந்த தண்ணீர் தொட்டியினை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் அக்டோபர் 7-ம் தேதியன்று திறந்து வைத்திருக்கிறார். எம்.எல்.ஏ திறந்து வைத்த சின்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டியில், `திட்ட மதிப்பீடு 7.70 லட்சம்’ என்று அதிகாரிகள் எழுதி வைத்துள்ளனர். இதனை ஃபோட்டோ எடுத்தவர்கள், ‘ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைப்பதற்கு 7 லட்ச ரூபாய் செலவாகுமா?... என்ன ஒரு பகல் கொள்ளை!’ என சமூக வலைதளங்களில் பதிவிட, விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தண்ணீர் தொட்டிக்கான மாநகராட்சியின் திட்ட விளக்கம்
தண்ணீர் தொட்டிக்கான மாநகராட்சியின் திட்ட விளக்கம்

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளைக் கடுமையாகச் சாடி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டன. அதனையடுத்து இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ குணசேகரன் தன்னிலை விளக்கம் கொடுத்து, வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில், ``’ஒரு சின்டெக்ஸ் டேங்க் கட்டுவதற்கு 7 லட்ச ரூபாயா?’ என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி என்னுடைய கவனத்திற்கு வந்தது. என்ன நடந்ததென அதிகாரிகளிடம் விசாரித்தேன். அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் ரூ.7.70 லட்சம் எனக் கூறினர். மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்தேன். மற்றபடி திறப்பு விழா அன்னைக்கு அந்த டேங்குகிட்ட நான் போகலை. அந்த டேங்க் எந்த இடத்துல இருந்ததுன்னு கூட நான் பார்க்கலை’’ எனக் கூறியிருந்தார்.

இதுசம்பந்தமாக எம்.எல்.ஏ குணசேகரனிடம் பேசினோம். ``பழைய கை பம்ப் இருந்ததை எடுத்துட்டு, நீர்மூழ்கி மோட்டார் பொருத்தியது, குழாய் பொறுத்தியதுன்னு அங்க பல வேலைகள் நடந்திருக்குங்க. வெறும் அந்த டேங்கிற்காக மட்டும் 7 லட்சம் செலவு பண்ணலை. பல கோடி ரூபாய் செலவு பண்ணி கட்டுன பாலத்துக்கு, அந்த பாலத்தோட ஓரமா ஒரு இடத்துல திட்ட மதிப்பீட்டை எழுதி வெச்சிருப்பாங்க. அதுக்காக எழுதப்பட்டிருக்க அந்த ஒரு இடத்துக்கு மட்டுமே அத்தனை கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்காங்கன்னு அர்த்தமா?

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன்

அந்த தண்ணீர் தொட்டிக்கான முழு செலவு விபரத்தையும், அந்த தொட்டி பக்கத்துல பேனராக வைக்கச் சொல்லியிருக்கேன். நான் இப்போ சென்னையில இருக்கேன். திருப்பூர் போனதும் அந்த எஸ்டிமேட்டையும் மீண்டும் ஆய்வு செய்யவிருக்கேன். வெள்ளை மனதோட வெள்ளை அறிக்கை கொடுக்கத் தயாரா இருக்கேன். இந்தப் பிரச்னையை சமூக வலைதளங்கள்ல போட்டவங்களுக்கு, நடத்த வேலைகளையும் திட்ட மதிப்பீடுகளை விளக்கமா கொடுத்துருக்கோம். தி.மு.க-வினர் தேவையில்லாம இதை பரப்பிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

இந்த விவகாரம் சம்பந்தமாக திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் பேசினோம். ``ஏற்கனவே போட்ட போர் அளவை அதிகமாக்கி சில வேலைகள் செஞ்சிருக்காங்க. டீடெயிலா என்னென்ன வேலைகள் நடந்துருக்குன்னு, அந்த டேங்க் பக்கத்துல ஒரு போர்டு வைக்கச் சொல்லியிருக்கோம். இந்த திட்டத்துக்கான செலவு பில்கள் என்கிட்ட வர்றப்ப, நான் அதை விசாரிக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு