Published:Updated:

`ரஜினி பாட்டோடு, என்கவுன்ட்டருக்கு ஆதரவு!’- தெலங்கானா விவகாரத்தில் திருப்பூர் ஆட்சியர்

ஹைதராபாத் போலீஸாரின் இத்தகைய செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடும் முழுவதிலும் இருந்து கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன.

திருப்பூர் ஆட்சியர்
திருப்பூர் ஆட்சியர்

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் ஆவேசக் குரல்களை எழுப்பி வந்தனர். இதற்கிடையே, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் தப்பிக்க முயன்றபோது ஹைதராபாத் போலீஸார் என்கவுன்டர் செய்தனர். ஹைதராபாத் போலீஸாரின் இத்தகைய செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடும் முழுவதிலும் இருந்து கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன.

கலெக்டர் விஜயகார்த்திகேயனின் ட்விட்
கலெக்டர் விஜயகார்த்திகேயனின் ட்விட்

இதற்கிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதான நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வரவேற்பளிக்கும் வகையில் டிசம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு ஒரு ட்விட் செய்திருக்கிறார். அதில் ஹைதராபாத் போலீஸாரின் செயலுக்கு பெருமிதம் தெரிவித்தும், ரஜினியுடைய தர்பார் படத்தின் பாடலான ‘சும்மா கிழி’ என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

‘ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பவர் என்கவுன்டரை ஆதரிக்கும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவதா!’, ‘என்கவுன்ட்டரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’, ‘உங்களுடைய கருத்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கிறது’ என சிலர் அந்த ட்விட்டிற்கு கமென்ட் செய்திருக்கின்றனர். இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் விஜயகார்த்திகேயனோ, ‘தனிப்பட்ட முறையில் இந்த சம்பவத்தில் அது எனக்கு சரியாகப்பட்டது. மேலும் குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததால் தான் போலீஸார் சுட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்’ என பதிலளித்திருக்கிறார்.

கலெக்டரின் ட்விட்டிற்கு கிளம்பிய விமர்சனங்கள்
கலெக்டரின் ட்விட்டிற்கு கிளம்பிய விமர்சனங்கள்

அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் 10.45 மணியளவில் அவர் போட்டிருக்கும் மற்றொரு ட்விட்டில், ‘பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்க இங்க நிறைய பேர் இருக்காங்க, பண்பு சொல்லி கொடுக்க தான் அதிக ஆள் இல்ல! பசங்களுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்ப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.

`ரஜினி பாட்டோடு, என்கவுன்ட்டருக்கு ஆதரவு!’- தெலங்கானா விவகாரத்தில் திருப்பூர் ஆட்சியர்