Published:Updated:

கொரோனா: டெஸ்ட் எடுங்க; 100 பேருடன் தொடர்பில் இருக்கேன்!- திருப்பூர் நபரின் வைரல் வீடியோ

வீடியோவில் பேசும் நபர்
வீடியோவில் பேசும் நபர்

`இங்க பலரும் கொரோனாவால சாகலை. உங்களோட சிகிச்சையினாலும், அலைக்கழிப்பாலும்தான் சாகுறாங்க'

'கொரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறோம்' எனத் தமிழக அரசு சொல்லி வருகிறது. மற்றொரு புறம் கொரோனோ சோதனை செய்வதில் அதிகாரிகள் மிகவும் அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்தவகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

வீடியோவில் பேசும் அந்த நபர், `தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா சோதனைகள் அதிகமாகச் செய்யப்படுவதாகச் சொல்லி வருகிறீர்கள். நான் நாலு நாளா எங்க ஊரு ஆஸ்பத்திரிக்குக் கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். நாலு நாளா அலைய விட்டுட்டு, `முனிசிபாலிட்டில போய் எழுதி வாங்கிட்டு வாங்க’ன்னு சொல்லுறாங்க. அங்க போய் கேட்டா, `எங்க ஆட்களுக்கு டெஸ்ட் எடுக்கச் சொல்லி எழுதி அனுப்பியதையே இன்னும் எடுக்கலை'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

கொரோனா: `அப்பா, என்னால் சுவாசிக்க முடியவில்லை!’ -கலங்க வைத்த வீடியோ

கொரோனா அறிகுறி இருக்குன்னு சொன்னா அவங்க ஒரு ஐ.டி போட்டுக் கொடுப்பாங்களாம். அவங்க என்னைக்கு என்ன கூப்பிடுறாங்களோ அப்பதான் சோதனை செய்வாங்களாம். அதுவரைக்கும் சளி, காய்ச்சலோடு நான் உட்கார்ந்து இருக்கணுமா? நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் போயிட்டு இருக்கேன். தினமும் 100 பேர் கூட தொடர்புல இருக்கேன். நான் மாஸ்க் எதுவும் போட மாட்டேன். எனக்குக் கொரோனா பாசிட்டிவ்னு வரட்டும். என்கூட தொடர்புல இருக்க எல்லாத்தையும் லாக் பண்ணிடுங்க. இப்படி அதிகாரிங்க அலட்சியமா இருந்தா, கொரோனா பரவாம என்னங்க செய்யும்? இங்க பலரும் கொரோனாவால சாகலை. உங்களோட சிகிச்சையினாலும், அலைக்கழிப்பாலும்தான் சாகுறாங்க’’ எனக் குமுறியிருக்கிறார்.

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைத் தொடர்புகொண்டு கேட்டோம். ``சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு இன்று காலை கொரோனா சோதனை செய்யப்பட்டிருக்கிறது. ரிசல்ட் இன்றிரவு அல்லது நாளைதான் கிடைக்கும். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என தாசில்தாரை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு