Published:Updated:

`மாஸ்க் போடலைன்னா சாதி என்னன்னு கேப்பீங்களா?’ - திருப்பூர் போலீஸ் சர்ச்சை

காவலர் காசிராஜா
காவலர் காசிராஜா

மாஸ்க் அணியாமல் பைக்கில் வந்தவரிடம், சாதி குறித்து போலீஸார் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் நடராஜன், வேலுச்சாமி, காசிராஜா ஆகியோர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவினாசியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மாஸ்க் அணியாமல் பைக்கில் வந்திருக்கிறார். (சிவக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அவினாசி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்). சிவக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் காசிராஜா, `ஏன் மாஸ்க் போடலை. பேர் அட்ரஸ் சொல்லுங்க...’ என விவரங்களை விசாரித்ததோடு, சாதி குறித்தும் கேட்டிருக்கிறார்.

காக்கிக்குள் சாதி! - அனைவருக்கும் கிடைக்குமா நீதி?

இதில் கொதித்துப்போன சிவக்குமார், `மாஸ்க் போடலைன்னா ஃபைன் கட்டச் சொல்லுங்க. சாதியை ஏன் கேக்குறீங்க... மாஸ்க் போடலைன்னா சாதி என்னன்னு கேக்கச் சொல்லியிருக்காங்களா?’ எனக் காவலர் காசிராஜாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார். அத்தோடு, நடந்த சம்பவம் அனைத்தையும் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

`சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பலரும் சமூக வலைதளங்களில் காட்டமாகக் கூறி வருகின்றனர். கலெக்டர் விஜயகார்த்திகேயன், `சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றிருக்கிறார். சம்பந்தப்பட்ட காவலர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எஸ்.பி திஷா மிட்டலும் உத்தவிட்டிருக்கிறார்.

காவலர் காசிராஜா
காவலர் காசிராஜா

இது சம்பந்தமாக அவினாசி டி.எஸ்.பி பாஸ்கரிடம் பேசினோம். ``காவலர்கள் நடராஜன், வேலுச்சாமி, காசிராஜா ஆகிய மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு