Published:Updated:

`சாதியைச் சொல்லி மிரட்டல் விடுக்கிறார்!’- கவுன்சிலருக்கு எதிராகக் கொதிக்கும் பஞ்சாயத்துத் தலைவர்

பஞ்சாயத்து தலைவர் செல்வி
பஞ்சாயத்து தலைவர் செல்வி

`ஊழியர்கள் முன்னிலையில் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி, அடிக்க முயற்சி செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தார். அவமானம் தாங்க முடியாமல் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன்’ எனக் கலங்கி நிற்கிறார் பஞ்சாயத்துத் தலைவர் செல்வி.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கொண்டராசம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வி (33). இவர், நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் செல்விக்கும், வார்டு கவுன்சிலரான குப்புசாமி என்பவருக்கும் ஆரம்பத்திலிருந்தே முட்டல் மோதல்கள் இருந்திருக்கின்றன. இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி பஞ்சாயத்துத் தலைவர் செல்வியை, கவுன்சிலர் குப்புசாமி சாதியைச் சொல்லி அசிங்கமாகப் பேசியதோடு, அடிக்க பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கலங்கிப்போன செல்வி, கவுன்சிலர் குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் கலெக்டர், எஸ்பி போன்றோருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.

`கீழ் சாதியைச் சேர்ந்தவளுக்குக் கீழ நாம வேலைபார்க்க வேண்டியது இருக்கே’ன்னு ஆரம்பத்துல இருந்து குப்புசாமிக்கு என்மேல கோபம். `எனக்கு முன்னாடி சீட்ல உட்காரக் கூடாது, என்னைக் கேட்டுத்தான் எந்த முடிவும் எடுக்கணும்’னு எப்பவும் வம்பிழுத்துக்கிட்டே இருப்பார்.
பஞ்சாயத்துத் தலைவர் செல்வி

என்ன நடந்ததென கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துத் தலைவரான செல்வியிடம் பேசினோம். ``கடந்த 4-ம் தேதி மாலை, பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைக் காவலர்களுக்குச் சீருடை மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் குப்புசாமி,`எனக்கு எந்தத் தகவலையும் சொல்லாம நீங்க எப்படிச் செய்யலாம்? தலைவர்னா என்ன பெரிய இவளா!’ என சாதியைச் சொல்லி அசிங்கமாகப் பேசியதோடு, அடிக்கப் பாய்ந்து கொலை மிரட்டல் விடுத்தார். ஊழியர்களுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வால் அவமானம் தாங்க முடியாமல், அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இது தொடர்பாக, மே 4-ம் தேதி இரவு தாராபுரம் காவல் நிலையத்திலும், அதற்கடுத்த நாள் கலெக்டரைச் சந்தித்தும் புகார் கொடுத்தோம். ஆனால், மே 7-ம் தேதிதான் குப்புசாமி மீது வழக்கைப் பதிவுசெய்தனர். ஆனால், இன்றுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

உணவில் பினாயில் ஊற்றினாரா கமிஷனர்?

``கீழ்ச் சாதியைச் சேர்ந்தவளுக்குக் கீழ நாம வேலைபார்க்க வேண்டியது இருக்கேன்னு ஆரம்பத்துல இருந்து குப்புசாமிக்கு என்மேல கோபம். எனக்கு முன்னாடி சீட்ல உட்காரக் கூடாது, என்னைக் கேட்டுத்தான் எந்த முடிவும் எடுக்கணும்னு எப்பவும் வம்பிழுத்துக்கிட்டே இருப்பார். `என்னை எதிர்த்துட்டு பஞ்சாயத்துத் தலைவரா இருந்துடுவியா’ன்னு மிரட்டுவார். நானும் என் கணவரும் மின் மயானத்துல பிணத்தை எரிச்சு குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தோம். இந்தத் தேர்தல்ல கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கென ஒதுக்கியதால் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவரானேன்.

எனக்காக ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா, முன்னாடி வந்து நின்னுகிட்டு பிரச்னை பண்ணிக்கிட்டே இருக்காரு. அவர் மேல ஏற்கெனவே பல அடிதடி வழக்குகள் இருப்பதாகச் சொல்றாங்க. அவரால எங்க குடும்பத்துக்கு ஏதாவது நடந்திடுமோன்னு பயமா இருக்கு. போலீஸார் தாமதிக்காமல் குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

கவுன்சிலர் குப்புசாமி
கவுன்சிலர் குப்புசாமி

இந்தப் பிரச்னை குறித்து குப்புசாமியோ, ``பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள செல்வியின் சீட்டில் உட்கார்ந்து அவருடைய கணவர் ரமேஷ், கடந்த பிப்ரவரி மாதம் டிக்டாக் எடுத்துப் பதிவிட்டார். இது சம்பந்தமாக திருப்பூர் கலெக்டரிடம் நான் புகார் கொடுத்திருந்தேன். அதன் காரணமாகத்தான் என்மீது தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளுடன் புகார் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம் கேட்டோம். ``புகார் குறித்து விசாரித்துவருகிறோம். விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு