`அது எங்களிடம் இல்லை' -கொரோனா செலவினம்; தமிழக சுகாதாரத்துறையின் அதிர்ச்சி பதில்

கொரோனா செலவினங்கள் குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு, தமிழக சுகாதாரத்துறை மழுப்பலான பதிலை அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தக் காலகட்டத்திலும் ஊழல்கள் தாராளமாக நடப்பதாக புகார்கள் வருகிறது. முக்கியமாக, கொரோனா களப்பணி முதல் கவச உடை வரை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பினாயில், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, கொரோனா செலவினங்கள் குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு, ‘அது எங்களிடம் இல்லை’ என்று சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.
இதுகுறித்து ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “கொரோனா காலகட்டத்தில், சுகாதாரத்துறை எவற்றுக்கெல்லாம் செலவு செய்திருக்கிறது... மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எவ்வளவு நிதி வந்தது? போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு என்-95 மாஸ்க்குகள், பி.பி.இ கிட்டுகள், வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன... அதற்கான செலவினங்கள் எவ்வளவு?

கொரோனா ஆய்வகங்கள் அமைக்க ஆன தொகை எவ்வளவு... ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன... அதற்கான செலவினங்கள் எவ்வளவு... மருத்துவமனைகள் மாற்றியமைத்த மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க எவ்வளவு செலவானது?
சுகாதாரத்துறைக்கு கிடைக்கப் பெற்ற நிதியில், எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? பிப்ரவரி மாதம் முதல் பிறப்பித்துள்ள கொள்முதல் ஆணைகளின் விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு பிரிவுகள், இயக்குநகரங்களைச் சார்ந்தது. அதற்கு, 20-க்கும் மேற்பட்ட பொது தகவல் அலுவலர்களால் தகவல் தரவேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6(3) படி, மனுவை ஒரு அதிகார அமைப்புக்குதான் மாற்றம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பல்வேறு அதிகார அமைப்புக்கு மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. 2009-ம் ஆண்டு, மத்திய அரசின் அலுவல் குறிப்பும் இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அரசாணை எண், நாள் குறிப்பிடும் பட்சத்தில் உரிய தகவல் வழங்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்துள்ளனர். அதாவது, தகவல்களை வழங்க முடியாது என்பதைத்தான் இப்படி சொல்கின்றனர். இதில்தான், சந்தேகம் அதிகரிக்கிறது.

கொரோனா செலவினங்கள் குறித்து எந்தத் தகவலும் அவர்களிடம் இல்லை என்றால், இவர்கள் துறையில் உள்ள மற்ற பிரிவுகளில், கொடுக்கப்பட்ட நிதியை எப்படிப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை எப்படித் தெரிந்துகொள்வார்கள்? உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்” என்றார் அதிர்ச்சி விலகாமல்.