Published:Updated:

செல்லூர் ராஜூ: சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்ட அமைச்சர்! - தொடர் போராட்டங்களால் பரபரப்பு

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ-வுக்கு எதிராகப் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், பல்வேறு மாவட்ட யாதவ சமூக அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பின்பு அதற்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில், யாதவ சமூக அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

சமீபத்தில் மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க தலைவரை விமர்சித்துப் பேசும்போது குறிப்பிட்ட சாதியினரைப் பற்றி இழிவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இது ஊடகங்களில் பரவியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதற்கு உடனே விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ, ``செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக பழமொழியைக் குறிப்பிட்டேன். நான் சாதி, மதம் பார்ப்பதில்லை. தேர்தல் நேரத்தில் எனக்குச் சாதி சாயம் பூச வேண்டாம். அப்படிப் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து நான் பேசியதாக நினைத்தால் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி, செல்லூர் பகுதியில் யாதவர் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. அதோடு அருகிலிருக்கும் செல்லூர் ராஜூவின் வீட்டை முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ``இதற்கு முன் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி-யை இழிவாகப் பேசினார். அடுத்து, செல்லூரில் எங்கள் சமூகத்தின் அடையாளமான அழகு முத்துக்கோன் சிலை வைக்க அனுமதி கேட்டதற்கு மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அதே இடத்தில் கபடி வீரர் சிலையை வைக்க அமைச்சருக்கு அனுமதி அளித்துள்ளனர். இப்படி இவர் தொடர்ந்து யாதவ சமூகத்துக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறார். இவரை முதலமைச்சர் எடப்பாடி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று பேசினார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இதேபோல் சங்கரன்கோவிலில் யாதவ சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டு செல்லூர் ராஜூவின் படத்தை எரித்து, கைதானார்கள். திருச்செந்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், பல்வேறு மாவட்ட யாதவ சமூக அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் இந்தப் பிரச்னை பூதாகரமாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு