Published:Updated:

`இரண்டு தேர்வு மையங்கள்; முதல் 100 இடங்களுக்குள் 40 பேர்!' - ராமநாதபுரம் குரூப்-4 தேர்வு சர்ச்சை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசைப் பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசைப் பட்டியல் ( விகடன் )

கடந்த செப்டம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் - 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களில் தேர்வு எழுதிய 40 பேர் தர வரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர். இதனால் இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடும் என்ற குற்றச்சாட்டை தேர்வர்கள் எழுப்பியுள்ளனர்

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 5575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 40 பேர் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்

அந்தத் தகவலில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளான தவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், தங்களது இன வாரியாகவும் முதல் 50 இடங்களைப் பெற்றுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி தர நிலை.
டி.என்.பி.எஸ்.சி தர நிலை.

`வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் ஏன் இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். எவ்வாறு இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர். மேலும், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தங்கள் மாவட்டத்தில் உள்ள மையத்தில் தேர்வு எழுதாமல் 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய ராமேஸ்வரத்தில் உள்ள மையத்தைத் தேர்வு செய்து தேர்வு எழுதியுள்ளார். மேலும், இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலான நபர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த மையங்களைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியதற்கான நோக்கம் என்ன? எனவே, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடும்' எனக் குறிப்பிட்டு தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அதேநேரம், தரவரிசைப் பட்டியல் குறித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 4 தேர்வு நடைபெற்றபோதே கமுதி வட்டாட்சியர் மீனலோசனா சர்ச்சையில் சிக்கினார். குரூப் - 4 தேர்வுக்காகக் கூடுதலாக வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை அவர் 10 நாள்கள் வைத்திருந்து பின்னர், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தாமதமாக ஒப்படைத்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.