Published:Updated:

`குரூப் - 4 தேர்வில் முறைகேடு?!’- ராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விசாரணை

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்.
டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார். ( உ.பாண்டி )

இந்த மையங்களில் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்று, மாநில அளவில் தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், இந்த மையங்களைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியதற்கான நோக்கம் என்ன?

சர்ச்சையைக் கிளப்பியுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், இன்று ராமநாதபுரத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தேர்வுப் பட்டியல்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தேர்வுப் பட்டியல்
உ.பாண்டி

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர், குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

அந்தத் தகவலில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வுசெய்துள்ளனர். இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் 35-க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளான தவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், தங்களது இன வாரியாகவும் முதல் 50 இடங்களைப் பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் கருவூலத்தில் நந்தகுமார்
ராமநாதபுரம் கருவூலத்தில் நந்தகுமார்
உ.பாண்டி

வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள், ஏன் இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். எவ்வாறு இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர். மேலும், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தங்கள் மாவட்டத்தில் உள்ள மையத்தில் தேர்வு எழுதாமல், 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய ராமேஸ்வரத்தில் உள்ள மையத்தைத் தேர்வுசெய்து, தேர்வு எழுதியுள்ளார்.

மேலும், இந்த மையங்களில் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்று மாநில அளவில் தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலான நபர்கள், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், இந்த மையங்களைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியதற்கான நோக்கம் என்ன? எனவே, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இந்தத் தேர்வில், முறைகேடு நடந்திருக்கக் கூடும்' எனக் குறிப்பிட்டு தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் குறித்த ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் நந்தகுமார், இன்று தேர்வுத் தாள்கள் வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் தலைமைக் கருவூலத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள தேர்வு மையமான கெளசானல் கல்லூரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தேர்வு மையம்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தேர்வு மையம்.
உ.பாண்டி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தகுமார், ''தற்போதைய நிலையில் விசாரணை குறித்து எதுவும் கூற முடியாது. உரிய விசாரணைக்குப் பின் உண்மைநிலை குறித்து தெரிவிக்கப்படும்'' என்றார். இதனால் குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்த விசாரணை வேகம் எடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு