Published:Updated:

கொரோனா ஆய்வுக்குழுவிலிருந்து விலகிய மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல்! - அரசின் அழுத்தம் காரணமா?!

மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வுக் கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக்குழுவின் தலைவராக கொரோனா தொற்று குறித்த ஆய்வில் திறம்பட செயலாற்றிவந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், கொரோனா ஆய்வுக் கூட்டமைப்பின் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான ஷாஹித் ஜமீல் தற்போது அதிரடியாக விலகியிருக்கிறார். இவர் விலகியது குறித்த தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை, இருப்பினும் மத்திய அரசு கொடுத்த அழுத்தமே இதற்குக் காரணமாக இருக்குமென்று விவாதிக்கப்பட்டுவருகிறது.

மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக்குழுவின் தலைவராக, கொரோனா தொற்று குறித்த ஆய்வில் திறம்பட செயலாற்றிவந்தார். இந்தநிலையில், கடந்த மே13-ம், தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா அலைகள் குறித்தும், இந்திய அரசாங்கம் அதை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்தார்.

ஷாஹித் ஜமீல்
ஷாஹித் ஜமீல்

அதில் பேசியவர், ``இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், தொடக்கத்திலேயே பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை தினமும் நான்கு லட்சத்திலிருந்தே தொடங்குகிறது. இந்த பாதிப்பு வரும் ஜூலை மாதம் வரை தொடரலாம். அப்போது பாதிப்பு தற்போதைய நிலையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

கடந்த மார்ச் மாதத்தில், பல்வேறு நாடுகளிடமிருந்து பெற்ற வைரஸ் மாதிரிகளுடன் இந்தியாவில் பரவிவரும் வைரஸை ஒப்பிட்டுப் பார்க்கையில் அது உருமாறிய பி.1.617 வைரஸ் என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அப்போதே எங்கள் குழுவினர் மத்திய அரசிடம் எச்சரித்தபோதும் அரசு இதில் அலட்சியமாக இருந்துவிட்டது.

முதல் அலையின்போது கட்டுப்பாடுகளைக் கடுமையாக கடைப்பிடித்த மக்களும், அரசாங்கமும் அதன் பின்னர் அலட்சியத்தோடு நடந்துகொண்டதுதான் இரண்டாவது அலை உருவாக முக்கியக் காரணம். அதேநேரத்தில், தேர்தல் பிரசாரங்களிலும், மதக் கூட்டங்களிலும் அதிக அளவிலான மக்களை ஒன்றுகூட அனுமதித்ததே இதில் முக்கியக் காரணம்” என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆய்வுக்குழுவிலிருந்து விலகிய மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல்! - அரசின் அழுத்தம் காரணமா?!
Rafiq Maqbool

அதேபோல், “கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த 800 விஞ்ஞானிகள் வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இதுவரை பாதிக்கப்பட்டோரின் புள்ளிவிவரங்களை அளிக்குமாறு கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் அளித்த தெளிவற்ற புள்ளிவிவரங்களால் ஆய்வுகளை மேற்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. அதேபோல், பல்வேறு அழுத்தங்கள் அரசு தரப்பிலிருந்து வந்தன. கொரோனாவால் உயிரிழக்கும் இந்த நிலை நிரந்தரமாகத் தொடரும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்துப் பேசியவர், “நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைச் செலுத்துவது முதன்மையான ஒன்று. ஆனால், இந்திய அரசு அதிலும் தொய்வுடனேயே செயல்பட்டுவருகிறது. சுமார் 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 14.16 கோடி பேருக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10% மட்டுமே ஆகும்” என்று கூறினார்.

அரசின் தெளிவற்ற செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்த ஷாஹித் ஜமீல் தற்போது ஆய்வுக்குழுவிலிருந்து விலகியது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு