Published:Updated:

விடைத்தாள் திருத்தும் பணி; பழுதுநீக்கும் வாகனத்தில் பயணம்! - வால்பாறை ஆசிரியர்கள் அதிர்ச்சி

ஆசிரியர்கள் பேருந்து
ஆசிரியர்கள் பேருந்து

வால்பாறையில், விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை, பேருந்துகளுக்கு பழுதுநீக்கும் வாகனத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதனால், விடைத்தாள் திருத்தும் மையங்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருந்தன.

விடைத்தாள் திருத்தும் பணி
விடைத்தாள் திருத்தும் பணி

இதனிடையே, மாநிலம் முழுவதும் ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்ட வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாவிடில், கார் ஏற்பாடு செய்யப்படுமென கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், வால்பாறையில் இன்று விடைத்தாள் திருத்தும் பணிக்கு காரோ... அரசுப் பேருந்தோகூட வரவில்லை.

வாகனம்
வாகனம்

அரசுப் பேருந்துகளைப் பழுதுநீக்க, பழைய பேருந்து மாடலில் இருக்கும் வாகனம்தான் அவர்களுக்கு வந்தது. 15 ஆசிரியர்களில் இன்று முதல்கட்டமாக 3 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குப் புறப்பட்டனர். அந்த வாகனத்தில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டே ஏறினர். இந்த விஷயம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்க கோவை முதன்மைக் கல்வி அதிகாரி உஷாவை தொடர்புகொண்டோம். ``அந்தச் சம்பவம் தொடர்பாகத்தான் விசாரித்து வருகிறேன். காலை 6.30 மணிக்கு வால்பாறையிலிருந்து ஓர் அரசுப் பேருந்து அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் தாமதமாக வந்துள்ளதால், அந்தப் பேருந்து கிளம்பிவிட்டது.

வாகனம்
வாகனம்

அதன்பிறகு உடனடியாக மாற்று ஏற்பாடாக ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. என்ன நடந்தது? என்பதைத் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். முழுத்தகவல் கிடைத்த பிறகுதான், அடுத்தகட்ட முடிவை யோசிக்க முடியும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு