Published:Updated:

வனத்துறை துணையுடன் மரம் கடத்தல்?! - லாரியைச் சிறைப்பிடித்த தனுஷ்கோடி கிராம மக்கள்

ஜடாயு தீர்த்தம் அருகே உள்ள வனத்துறை காடுகளிலிருந்து வனத்துறையினர் உதவியுடன் மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் நேற்று இரவும் கடத்தப்படுவதற்காக மரங்கள் லாரியில் ஏற்றப்பட்டுள்ளன.

மரம் கடத்திய  லாரி
மரம் கடத்திய லாரி ( உ.பாண்டி )

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான சவுக்கு மரக் காடுகள் உள்ளன. 1964-ல் ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து இப்பகுதியில் வீசும் மணல் புயலைத் தடுக்கும் வகையில் இந்தக் காடுகள் உருவாக்கப்பட்டன.

வனத்துறை காட்டில் மரம் கடத்திய லாரிகள்
வனத்துறை காட்டில் மரம் கடத்திய லாரிகள்

இந்த காடுக்களில் பல ஆண்டு வயதுடைய சவுக்கு, வேம்பு மற்றும் கருவேல மரங்கள் உள்ளன. இந்தக் காடுகளில் பட்டுப்போன மரங்களுக்குப் பதிலாகவும் காலியான இடங்களிலும் சவுக்கு மரங்கள் நடும் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

`அயன்’ தங்கக் கடத்தல்…  அள்ளிய ரவுடிகள்... பரபரக்கும் போலீஸ்!

இதனால் இந்தக் காடுகளின் அருகில் வசிக்கும் நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், தெற்கு கரையூர் மற்றும் மீனவர் காலனி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க செல்லக்கூட வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. மேலும், அவர்களின் கால்நடைகள் மேய்ச்சலுக்கும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் இயற்கை எய்திய மூதாட்டி ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தேவையான காய்ந்த மரத்துண்டுகளைக்கூட எடுக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்கிறார்கள் மக்கள்.

வனத்துறை காட்டில் மரம் கடத்திய லாரி சிறை பிடிப்பு.
வனத்துறை காட்டில் மரம் கடத்திய லாரி சிறை பிடிப்பு.
உ.பாண்டி

கடந்த சில நாள்களாக ஜடாயு தீர்த்தம் அருகே உள்ள வனத்துறை காடுகளிலிருந்து வனத்துறையினர் உதவியுடன் மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று இரவும் கடத்தப்படுவதற்காக மரங்கள் லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. இதை அறிந்த நடராஜபுரம் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டு அந்த வழியாக மரம் கடத்தி வந்த லாரியை சிறை பிடித்தனர். இதை அறிந்த வனத்துறையினர், உரிய அனுமதி பெற்று மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், இதை ஏற்க பொதுமக்கள் மறுத்ததுடன் லாரியை விடுவிக்கவும் மறுத்துவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல்ஜபார், தனுஷ்கோடி காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி ஆகியோர் நடராஜபுரம் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வனத்துறையினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளனர். இதனால் மரம் ஏற்றி வந்த லாரியை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி வனத்துறை மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அலுவலர் ஞானப்பழத்திடம் அறிவுறுத்தினர்.

வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி.
வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி.
உ.பாண்டி

இந்நிலையில் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் இருந்து மரக்கடத்தல் லாரியை தங்கள் அலுவலகத்துக்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். ஆனால், இன்று காலையிலும் ஜடாயு தீர்த்தப் பகுதியில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட தடையங்களை மறைக்க வனத்துறையினர் வெட்டப்பட்ட மரங்களின் தூர் பகுதிகளை ஜே.சி.பி வாகனத்தின் மூலம் அகற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் வட்டார வன அலுவலர் ஞானப்பழத்திடம் கேட்டபோது, ''மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் யாரும் மரக் கடத்தலுக்குத் துணை போகவில்லை. மேலும், மரங்களை பாதுக்காக்க வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காகவே ஜே.சி.பி வாகனங்கள் சென்றன'' என்றார்.

வனத்துறை காட்டில் வெட்டப்பட்டு கிடக்கும் மரங்கள்.
வனத்துறை காட்டில் வெட்டப்பட்டு கிடக்கும் மரங்கள்.
உ.பாண்டி

`வனத்துறை அதிகாரி கூறுவது உண்மை எனில் பல நாள்களாக மரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் கடத்திச் செல்லப்படும்வரை வனத்துறையினர் கண்களில்படாமல் இருந்தது எப்படி?' எனக் கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.