Published:Updated:

`அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுங்க!' - காவல்நிலையத்தில் புகாரளித்த சிறுவன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது காலணிகளை பழங்குடி சிறுவர்களை அழைத்து கழற்றிவிடச்செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமைத் தொடங்கிவைக்க தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலை வந்திருந்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

காப்புக் காட்டில் சைரன் முழங்க கான்வாயில் வந்து தெப்பக்காடு முகாமில் இறங்கினார். காரிலிருந்து இறங்கிய அமைச்சரை மாவட்ட ஆட்சியர், புலிகள் காப்பகக் கள இயக்குநர், வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்தனர். அரசியல் கட்சியினர், அதிகாரிகள் படை சூழ வந்த அமைச்சர், யானை அருகில் நின்றிருந்த இரண்டு பழங்குடிச் சிறுவர்களை அழைத்து தனது காலணிகளைக் கழற்றிவிடச் செய்தார். இந்தச் சம்பவம் அப்போதே அங்கிருப்பவர்களை முகம் சுளிக்கச்செய்தது.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகின. இதுகுறித்து உள்ளூர்‌ முதல் தேசிய அளவிலான ஊடகங்கள் வரை செய்தி வெளியாகி தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பழங்குடி அமைப்புக்கள் எனப் பலரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மக்கள் சட்டமைய நிறுவனர் விஜயன், ``பெரியார் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எல்லோருக்கும் அவமானமாக உள்ளது. அதுவும் அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இப்படி ஒரு செயல் நடந்திருப்பது மிக மோசமான செயல். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் பதவி விலகக்கோரி தி.மு.க சார்பில் நாளை கூடலூரில் போராட்டம் நடைபெறவுள்ளது. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மசினகுடி காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்துள்ளார். முறையான நியாயம் கிடைக்க வேண்டும்" என்றார்.

பின் செல்ல