Published:Updated:

சுஜித் மீட்பு பணிக்கு எவ்வளவு செலவு?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருச்சி கலெக்டர்

தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.

Sujith
Sujith

திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி தம்பதியரின் இளைய மகன் சுஜித் வில்சன். இவர், கடந்த 25ம்தேதி மாலை 5.30 மணியளவில், அப்பகுதியிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். அவரை உயிரோடு மீட்பதற்கு, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர். மீட்புபணிகள், 80 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது. ஆனாலும் குழந்தை சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டார்.

``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி
மீட்புபணிகள்
மீட்புபணிகள்

அதனையடுத்து, சுஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மற்றும் அவனது வீடு உள்ளிட்டவற்றுக்கு ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், குழந்தையின் உடலை அவரின் பெற்றோர்களிடம்கூட காட்டவில்லை என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு, குழந்தை சுஜித் வில்சன் மரணம், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 11 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
`கதறிய வானம்.. கண்ணீர்விட்ட பெண் போலீஸார்..!’ - எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி?  #SujithWilson

இதனை மறுத்த ராதாகிருஷ்ணன், ``பேரிடர் மீட்பு முயற்சியில் பணம் ஒரு பிரச்னையே இல்லை. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. அரசு சார்பில் பணம் செலவானது குறித்த விபரங்கள், யாரிடமும் தெரிவிக்கவில்லை” என்றார். இப்படியான சூழலில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான் என்கிற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நான் நேரில் சென்று சிறுவனை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருகிலேயே இருந்து கண்காணிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் பூமிக்கடியில் உள்ள பாறை அதிக கடினத்தன்மையுடையதாக இருந்ததால் எல்.என்.டி நிறுவனத்திடம் உதவிக் கோரியவுடன் அவர்களும் உடனடியாக சம்மதித்து மீட்புப்பணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டு மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இதற்காக எல்.என்.டி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை எந்தவிதமான செலவுத்தொகையையும் கோரவில்லை. அதேபோல், தேசிய நெஞ்சாலை ஆணையம், கே.என்.ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் ஜே.சி.பி. இயந்திர ஒப்பந்ததாரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவிதமான செலவுத்தொகையையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
கடவுளே இரக்கம் இல்லையா? - சுர்ஜித் அஞ்சலியில் கதறி அழுத பொதுமக்கள் 

மீட்புப்பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களுக்கும் 5000 லிட்டர் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் ரூ.5 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் வரும் பொய்யான செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், அரசுக்கு எதிரான, பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்ட எல்.என்.டி, கே.என்.ஆர் உள்ளிட்ட நிறுவனம் ஆகியோருக்கும் மற்றும் உள்ளுரில் இயந்திரங்கள் வழங்கியவர்களுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும், மனிதாபிமான அடிப்பிடையில் உதவிய அனைவருக்கும், தமிழக அரசின் சார்பாகவும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.