Published:Updated:

திருச்சி:`அம்மாவை ஒருமையில் பேசியதால் அடித்தேன்!’ - சர்ச்சையில் காவலர்

காவலர் அடிக்கும் காட்சி
காவலர் அடிக்கும் காட்சி

அவர் `நீங்கெல்லாம் கொலகாரப் பாவிகள் தானே. ரெண்டு பேர கொன்னுட்டீங்க இன்னும் எத்தன பேர கொல்லப் போறீங்கன்னு தெரியல்லையே’ என்றார். `ஏன் சம்பந்தமில்லாமல் பேசுற. ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என அவரிடம் கூறினேன்.

சாத்தான்குளம் சம்பவம் காவல்துறையின் மீது அழியாத கறையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருச்சியில் சைக்கிளில் சென்ற முதியவரை போலீஸார் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. இதனையடுத்து, அவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கும் சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆணையர் வரதராஜன்
காவல் ஆணையர் வரதராஜன்

திருச்சி எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா அருகே நேற்று போலீஸாரின் டூவீலரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தின் போது சைக்கிளில் வந்த முதியவரைச் சீருடையில் இருந்த தலைமைக் காவலர் தாக்கிவிட்டுச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து முதியவரைத் தாக்கிய காவலர் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் வரதராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா, ஐயப்பன் கோயில் சாலை ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு போலீஸார் ஆய்வு செய்தனர்.

வீடியோவில் இருப்பது, உறையூர் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இளங்கோ என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் குடித்துவிட்டுத் தகாத வார்த்தையில் பேசியதாகவும் அதன் காரணமாகவே அடித்ததாகவும் சொல்லியிருக்கிறார். எனினும் சீருடை அணிந்து கொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி இளங்கோவனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் வரதராஜ் உத்தரவிட்டார்.

சாத்தான் குளம் சம்பவம்: `5  நிமிடம், 80 கி.மீட்டர், 20 லட்சம்!'- மிரட்டும் நம்பர்ஸ், மிரளும் போலீஸ்!

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தலைமைக் காவலர் இளங்கோவிடம் பேசினோம். ``நேற்று மதியம் நான் சாலையில் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரியவர் நான் வருவதைக் கவனிக்காமல் வலது புறமாகத் திரும்பினார். சுதாரித்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டேன். அப்படி இருந்தும் அவர்மீது மோதிவிட்டேன். அப்போது, `ஏன் பெரியவரே ஒழுங்கா போகமாட்டியா’ன்னு கேட்டேன். அதற்கு அவர் `நீங்கெல்லாம் கொலகாரப் பாவிகள்தானே. ரெண்டு பேர கொன்னுட்டீங்க. இன்னும் எத்தன பேர கொல்லப் போறீங்கன்னு தெரியல்லையே’ என்றார். `ஏன் சம்பந்தமில்லாமல் பேசுற. ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என அவரிடம் கூறினேன்.

காவலர் மற்றும் முதியவர்
காவலர் மற்றும் முதியவர்

அப்போது அவர் ஆபாசமான வார்த்தையில எனது அம்மாவை ஒருமையில் திட்டினார். அந்த ஆத்திரத்தில்தான் அடித்தேன். அம்மாவைப் பற்றிப் பேசினால் உங்களுக்குக் கோபம் வருமா.. வாராதா? நான் அடித்துவிட்டேன் என்ற ஒரு காரியத்திற்காக என்னை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். நான் எவ்வளவு நல்ல காரியம் செய்திருக்கிறேன் என்று தெரியுமா? பொத்தாம் பொதுவாகத் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்யாதீர்கள்” என்று தெரிவித்தார்.

சாத்தான்குளம்: `நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்' -நம்பிக்கையில் ஜெயராஜ் குடும்பம்
அடுத்த கட்டுரைக்கு