Published:Updated:

`அனல்மின் நிலையப் பணிகளுக்காகத் தடுப்பணை உடைப்பா?' - கொந்தளிக்கும் உடன்குடி விவசாயிகள்

மழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்
மழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் நடந்துவரும் வளாகத்தில் சூழ்ந்து நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக ஒப்பந்தக்காரர்கள் தடுப்பணையை இரவோடு இரவாக உடைத்ததால் வீணாகக் கடலில் கலக்கிறது எனப் புலம்புகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 2007-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.8,700 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி இலக்குடன் அனல்மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2011-ல் ரூ.9,865 கோடி மதிப்பீட்டில் 1,320 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு, முதல்கட்டப் பணிகளும் நடந்து வருகின்றன.

மழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்
மழைநீர் சூழ்ந்துள்ள அனல்மின் நிலையம்

இந்நிலையில், கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால், அனல்மின் நிலையப் பணிகள் நடந்து வரும் பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இரவோடு இரவாக அப்பகுதியிலுள்ள தடுப்பணை உடைக்கப்பட்டு மழைநீர் வீணாக வெளியேறி வருகிறது. `ஒப்பந்தக்காரர்கள்தாம் தடுப்பணையை உடைத்துள்ளனர்’ எனக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

`உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?’  - அமைச்சர் தங்கமணி பதில்

`தடுப்பணையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனக் கூறியுள்ளனர் அப்பகுதி விவசாயிகள். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரான குணசீலனிடம் பேசினோம், ``உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டபோதே விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடைக்கப்பட்டுள்ள தடுப்பணை
உடைக்கப்பட்டுள்ள தடுப்பணை

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து தென்கால் பாசனத்திலுள்ள 53 குளங்கள் நிரம்பும். இதில், இறுதியாக வந்து சேரும் எல்லப்பநாயக்கன் குளத்துக்கு அருகில்தான் தற்போது அனல்மின் நிலையப் பணிகள் நடந்து வருகின்றன. மிகுந்த நீர்ப்பிடிப்பு பகுதியான அந்த இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தைத் தேர்வு செய்யுங்கள் என ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

எல்லப்பநாயக்கன் குளத்திலிருந்து வரும் தண்ணீர் அனல்மின்நிலையப் பகுதிக்கு ஓடை மூலம் வந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஆழியாக்குறிச்சி குளத்துக்கு வந்து, அங்கிருந்து மணப்பாடு கடலில் கலக்கும். ஆனால், அனல்மின் திட்டப்பணிகளுக்காக ஆழியாக்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கனமழையால் அனல்மின் நிலைய வளாகப் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த நிலையில்தான் தடுப்பணை உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது.

உடைக்கப்பட்டுள்ள தடுப்பணை
உடைக்கப்பட்டுள்ள தடுப்பணை

இம்மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் பகுதி என்றால் அது உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியங்களிலுள்ள கிராமங்கள்தான். தற்போது கிடைத்துள்ள மழைநீரை சேமிக்க முடியாமல் தடுப்பணை உடைப்பால் வீணாகிச் செல்வதைப் பார்க்கும்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார் வேதனையுடன். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``தடுப்பணை இடிக்கப்பட்டதாக விவசாயிகள் சொல்லப்படுவது குறித்து விசாரணை செய்துவருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு