Published:Updated:

`ஷீரடி கர்மபூமி; பத்ரி ஜென்மபூமி!' - சாய்பாபா பிறப்பிட சர்ச்சையின் முழுப் பின்னணி

சாய்பாபா
சாய்பாபா

சாய்பாபா பிறப்பிடம் பற்றி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமமாகப் போற்றப்படும் ஆன்மிக கடவுளான சாய்பாபா பிறப்பிடம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஷீரடியில் பந்த் நடைபெற்றது. இருப்பினும் சாய்பாபா கோயில் நாள் முழுவதும் திறந்து வைத்து பக்தர்கள் தரிசித்தனர். சாய்பாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் தினமும் பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்.

ஆனால், கடந்த 19-ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் சாய்பாபா பிறந்த இடம் 'பத்ரி' என்றும் பத்ரியில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடியை ஒதுக்குவதாகவும் கூறினார். இதைக் கண்டித்து ஷீரடியைச் சுற்றியுள்ள மக்கள், 'பத்ரி' பிறப்பிடம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை பந்த் அனுசரித்தனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஸ்ரீசாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.எஸ்.டி) முன்னாள் உறுப்பினர் ஒருவர், "பந்த் மொத்தமாக நடந்தது. வெளியில் இருந்து வரும் பக்தர்கள் யாரும் எந்தவொரு பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் உணவு, உண்ணக்கூடிய பொருள்கள், நீர் விநியோகம் ஆகியவை ஷீரடியில் வசிப்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது" எனக் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பத்ரியில் உள்ளவர்கள் சாய்பாபாவின் வாழ்க்கையையும் அற்புதங்களையும் புகழ்ந்து பஜனைகளைப் பாடி வீதிகளில் இறங்கினர். பத்ரி கோயில் அறக்கட்டளை, சாய்பாபா பிறந்த இடம் பத்ரி என்றும் அதற்கு ஆதாரமாக 29 ஆவணங்களை அளித்தது.

பத்ரி கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர் சஞ்சய் பூசாரி, `சென்னையைச் சேர்ந்த சாய் பக்தரான பி.வி.நரசிம்ம சுவாமி ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தில் பத்ரியை துறவியின் பிறப்பிடம் என்று குறிப்பிடுகிறது' என்றார்.

கோயில் அரசியல் பற்றி அறிந்தவர்களின் கூற்றுப்படி, பத்ரி பிறந்த இடம் என்று ஒப்புக்கொண்டால், அங்கே பக்தர்களின் கூட்டம் பெரும் அளவில் இருக்கும். இரு இடங்களையும் உருவாக்கி பக்தர்களுக்காக இணைக்க முடியும். பத்ரிக்கு பெரிய அளவிலான நன்கொடைகளை இழக்க ஷீரடி கோயில் அறக்கட்டளை விரும்பவில்லை.

பி.வி.நரசிம்ம சுவாமி
பி.வி.நரசிம்ம சுவாமி

இதற்கிடையில் இந்த சர்ச்சை உள்ளூர் அரசியல் தலைவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. ஷீரடியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. சதாஷிவ் லோகண்டே, " முதலில் நான் ஒரு சாய் பக்தன். அதன் பின்தான் சிவசேனையன்" என்று அவர் ஷீரடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ஜாதவ், `சப் க மாலிக் ஏக் (sab ka malik eek)', என்று கூறி பத்ரி மக்களுடன் சேர்ந்து பஜனையில் ஈடுபட்டுள்ளார்.

தாக்கரேயின் ரூ.100 கோடி அறிவிப்பு; கொந்தளித்த பக்தர்கள்!- ஷீரடி சாய்பாபா விவகாரத்தில் என்ன நடந்தது?

சிவில் சப்ளை துறை அமைச்சர் சாகன் புஜ்பால், " ஷீரடி மற்றும் பத்ரி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இரு இடங்களையும் வளர்ப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். சாய்பாபா ஒரு இடத்தில் மட்டும் இல்லை. அவர் எங்கும் நிறைந்துள்ளார். ஆகவே, அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்" என்றார்.

ஷீரடிக்கு நெருக்கமான யியோலாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் புஜ்பால், ``சாய்பாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் கோயில்கள் உள்ளன. இது அவரது கொள்கைகளின் விரிவாக்கத்தையும் அதை ஏற்றுக்கொள்வதையும் காட்டுகிறது. இந்த சர்ச்சை தேவையில்லை. அதை அரசியல்மயப்படுத்தக்கூடாது” என்று கூறினார்.

சாகன் புஜ்பால்
சாகன் புஜ்பால்

இந்தச் சர்ச்சை 2017-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாய்பாபா சந்நிதி நூற்றாண்டு விழாவின்போது, ஷீரடி பாபாவின் கர்மபூமி என்றும் பத்ரி ஜென்மபூமி என்றும் கூறியிருந்தார். இப்போது மஹாராஷ்டிரா முதல்வர் 100 கோடி ஒதுக்கப்படும் என்று கூறியதால் மிகப் பெரிய சர்ச்சையாக மீண்டும் உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து இரு தரப்பினரிடமும் கலந்துரையாட மத்ராலயாவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வருமாறு மஹாராஷ்டிரா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஷீரடி கோயில் நிர்வாக பிரதிநிதிகள், துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனாவை சேர்ந்த எம்.பி சதாசிவ் லோகண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைத் திருப்தியளிப்பதாகக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளை உறுப்பினர் கோத்தே, ``சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்று கூறியதை தாக்கரே திரும்பப் பெற்றுக்கொண்டார். பத்ரியில் அரசு வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பாபாவின் பிறந்த இடம் பத்ரி எனக் கூறுவதில்தான் எங்களுக்கு பிரச்னை. பிரச்னையை முடித்துக்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்” என்றார்.

சிவசேனாவின் நாளேடான சாம்னாவில், `உத்தவ் தாக்கரே பத்ரி குறித்து தன்னுடைய சொந்தக் கருத்தை கூறவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் பதிப்புகளின் அடிப்படையில் அவர் கூறினார்” என விளக்கமளித்துள்ளது.

- கௌசிகா

பின் செல்ல