Published:Updated:

`தாதாக்கள் படங்களுடன் ஸ்டாம்ப்!’ - அஞ்சல்துறையின் அலட்சியம்; உ.பி சர்ச்சை

தாதாக்களின் தபால் தலை
தாதாக்களின் தபால் தலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாதாக்கள் படங்களுடன் தபால்தலை வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரிலுள்ள அஞ்சலத்தில் நிழலுலக தாதா சேட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தபால்தலைகள் `மை ஸ்டாம்ப்’ எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் நாம் நம்முடைய அல்லது நமது உறவினர் மற்றும் நண்பர்களின் புகைப்படத்தை அச்சிட்டு தபால் தலைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்குக் குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும்.

தாதாக்களின் தபால் தலை
தாதாக்களின் தபால் தலை

இந்தத் திட்டத்தில் தபால்தலை வெளியிடக் கொடுக்கப்படும் புகைப்படங்கள் பல்வேறு வரம்புகளுக்கு உட்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்தும் ஆராயப்பட்ட பின்னரே, தபால்தலை தயாரிக்கப்படும். இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் தபால்தலைகளாக அச்சிடப்பட்டது எப்படி என்பது குறித்து அஞ்சல்துறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியாமல் அச்சிடப்பட்டதா... இதற்குக் காரணமாவார்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Vikatan

முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இந்த இரண்டு தாதாக்களின் புகைப்படங்களைத் தபால்தலையாக அச்சிடக் கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்குக் கட்டணமாக 600 ரூபாய் செலுத்தியிருக்கிறார். கொடுக்கப்படும் புகைப்படங்களை நிராகரிக்கும் முழு உரிமையும் தபால்துறைக்கு இருக்கும் நிலையில், தாதாக்களின் படம் தபால் தலையாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தச் செயல் மூலம் அஞ்சல்துறையின் அலட்சியம் அம்பலமாகியிருக்கிறது.

`நிழலுலக தாதா’ என்றழைக்கப்படும் சோட்டா ராஜன் தற்போது மும்பை சிறையில் இருக்கிறார். மற்றொருவரான பஜ்ரங்கி, உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

``இருவரின் உறவினர் என்று ஒருவர் விண்ணப்பத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தில் இருவரின் பெயரும் `பிரேம் பிரகாஷ் சிங் (எ) முன்னா பஜ்ரங்கி’ மற்றும் `ராஜேந்திர நிகால்ஜே (எ) சோட்டா ராஜன்’ என்று நிரப்பப்பட்டிருக்கிறது. சரியான ஆவணங்களை வாங்காமல் ஊழியர் ஒருவர் 12 தபால்தலைகளை அச்சிட்டிருக்கிறார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று உ.பி அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு