Published:Updated:

ஊத்தங்கரை: `விஜய் ரசிகர்களை அனுப்பி பழிவாங்கிவிட்டார்கள்!’-கொதிக்கும் பேரூராட்சி அதிகாரி

கேக் வெட்டும் செயல் அலுவலர் ராஜா
கேக் வெட்டும் செயல் அலுவலர் ராஜா

ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், அரசியல் பின்னணி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலர் ராஜா திடீரென இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 22-ம் தேதி, நடிகர் விஜய் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவைக் காரணமாகக் காட்டி ராஜா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் உயரதிகாரிகள்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக, ராஜாவை ஊத்தங்கரையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் திட்டமிட்டுச் சிக்க வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அதே நேரம், ஊத்தங்கரையில் பணியமர்த்தப்பட்டு 100 நாள்களே ஆகும் நிலையில் மக்கள் மத்தியிலும் நற்பெயரைப் பெற்றிருக்கிறார் செயல் அலுவலர் ராஜா.

ஊத்தங்கரை
ஊத்தங்கரை

நம்மிடம் பேசிய ஊத்தங்கரையைச் சேர்ந்த சிலர், ``ஊத்தங்கரை பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் தேசியக் கட்சி ஒன்றில் பொறுப்பு வகிக்கிறார். அவர் தலைவராக இருந்த காலத்தில் ஊத்தங்கரை பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார். பதவியில் இல்லாதபோதும் அந்தப் பிரமுகர் பேரூராட்சிப் பணிகளில் தலையிடுகிறார். 2007-ம் ஆண்டின்போது குடிநீர் இணைப்புக்காக டெபாசிட் பணம் செலுத்திய 400 பேருக்கு, இதுநாள் வரை குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை.

அந்த அரசியல் பிரமுகர் தலைவராக இருந்தபோது, குடிநீர் இணைப்புத் தருவதாகப் பணத்தைக் கறந்துவிட்டார். இப்போதுவந்த செயல் அலுவலர் ராஜா முறைகேடுகளைக் களைந்து குடிநீர் இணைப்பு கொடுத்துவருகிறார்.

அதேபோல், பெங்களூருவில் இறந்தவருக்கு ஊத்தங்கரையில் இறப்புச் சான்றிதழ் வாங்க முயன்றதையும் ராஜா கண்டுபிடித்து தடுத்தார். இதிலும், அந்த அரசியல் பிரமுகரின் தலையீடு இருந்தது. இதுபோன்று பல்வேறுப் பணிகளில் செயல் அலுவலர் ராஜா நேர்மையாகச் செயல்பட்டதால், அந்தப் பிரமுகர் விஜய் ரசிகர்கள் மூலம் திட்டமிட்டு காய் நகர்த்தியிருக்கிறார்’’ என்றனர் கொதிப்புடன்.

சஸ்பெண்ட் தொடர்பாகச் செயல் அலுவலர் ராஜாவிடமே பேசினோம். ``விஜய் பிறந்தநாளின் போது ரசிகர்கள் சிலர் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். என்னிடம் அவர்கள், `திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கத் தீவிர முயற்சி எடுத்ததிற்குப் பாராட்டுகள். விஜய் பிறந்த நாளையொட்டி, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம். உங்கள் கைகளால் அவர்களுக்கு உதவிகளைக் கொடுத்தால் எங்களுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

கேக் கொடுக்கும் ராஜா
கேக் கொடுக்கும் ராஜா

அதற்கு முன்பு, தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக கேக்கை வெட்டிக் கொடுங்கள்’ என்று வற்புறுத்தி கேக் வெட்ட வைத்தனர். நான் கேக் வெட்டும் நேரத்தில், எனக்கே தெரியாமல் எனக்குப் பின்னால் பேனரைக் காட்டி போட்டோ எடுத்துவிட்டனர். அந்தப் புகைப்படத்தை விஜய் ரசிகர்களே சமூக வலைதளங்களில் பரப்ப விட்டு என் மீது விமர்சனங்களைக் கூறினர். இப்போதுதான் தெரிகிறது, விஜய் ரசிகர்களை இப்படி அனுப்பி என்னைப் பழிவாங்கியிருப்பதே முன்னாள் பேரூராட்சி தலைவர்தான்.

என் மீதான நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டுள்ளேன். முன்னதாக, என்னிடம் எந்த விதமான விளக்கத்தையும் கேட்காமல் சஸ்பெண்ட் செய்திருப்பது, மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் ரசிகர்களை நம்பி அலுவலகத்தில் அனுமதித்தது தவறு’’ என்று வருத்தப்பட்டார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் அச்சுதனிடம் பேசினோம். ``செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. ஆண்டுதோறும் விஜய் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அப்போது, பேரூராட்சியின் தலைமை அதிகாரி என்ற முறையில் அவரை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை நடத்தினோமே தவிர அவர் கூறும் குற்றச்சாட்டில் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. எங்களுக்கு அரசியலும் தெரியாது’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு