Published:Updated:

அம்பேத்கர் பிறந்தநாளும் வணக்கமும்! - சர்ச்சைக்கு பதில் சொல்கிறார், வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

'காலணிகளை வைக்கின்ற இடத்தில் அம்பேத்கர் படத்தை வைத்து வணக்கம் செலுத்தியுள்ளார் வானதி சீனிவாசன்' என்றொரு தகவல் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. இதுகுறித்த நமது கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் வானதி சீனிவாசன்.

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மரியாதைசெலுத்தும் அரசியல் தலைவர்களின் படங்களில், வானதி சீனிவாசன் வணக்கம் செலுத்துகிற புகைப்படம்தான் இணைய உலகில் வைரல்.

வானதி சீனிவாசன் மீம்ஸ்
வானதி சீனிவாசன் மீம்ஸ்

'தன் வீட்டு வாசலில், செருப்புகளை வைக்கும் அலமாரிப் பகுதியில் அம்பேத்கர் படத்தை வைத்து வணக்கம் செலுத்தியிருக்கிறார், வானதி சீனிவாசன். இதுதான் இந்துத்துவவாதிகளின் உண்மை முகம்!' என்ற குறிப்போடு வெளியாகியிருக்கிறது மீம்ஸ் ஒன்று. கூடவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டின் வாசலில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் கோலமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படங்களை இணையத்தில் பகிர்வோர், கூடவே ஆதரவும் எதிர்ப்புமாகத் தங்களது கருத்துகளையும் சேர்த்துப் பதிவிட்டு, காரசாரமாக மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் உண்மைத்தன்மையை அறியும் நோக்கில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்...

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''அம்பேத்கர் பிறந்தநாளில், நீங்கள் அவரை அவமானப்படுத்திவிட்டதாக புகைப்படம் வெளியாகியிருக்கிறதே?''

''நானும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். அது ஒரிஜினல் புகைப்படம்தான். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திதான் பொய்யானது. கொரோனா நிவாரணமாக ஏழை எளிய மக்களுக்கு எங்கள் கட்சியின் சார்பில் தினந்தோறும் உதவிகள் செய்துவருகிறோம். அம்பேத்கர் பிறந்ததினமான நேற்றைய தினமும், எளிய மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினோம். வழங்கிமுடித்துவிட்டு, அந்த மக்களின் முன்னிலையிலேயே அண்ணல் அம்பேத்கர் படத்தை வைத்து மரியாதை செலுத்தினோம். அந்தப் புகைப்படம்தான் அது!''

ஏப்ரல் 20 -க்குப் பிறகு.. விவசாயம் முதல் ஐ.டி வரை! - கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் துறைகள் எவை?

''வீட்டு வாசலில், காலணிகளை வைக்கும் அலமாரிப் பகுதியில், அம்பேத்கர் படத்தை வைத்து வணக்கம் செலுத்துவது எப்படி 'மரியாதை' ஆகும்?''

வானதி சீனிவாசன் வீடு
வானதி சீனிவாசன் வீடு

''என் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்... அது காலணிகள் வைக்கிற அலமாரி அல்ல என்று. காலணிகளை வரிசையாக அடுக்கிவைப்பதற்கென்றே தனியாக ஒரு அலமாரியை என் வீட்டு சுற்றுச்சுவரையொட்டியே அமைத்திருக்கிறோம். இதுதவிர, வீட்டின் மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுப் பகுதியிலும் காலணிகளை வைப்பதற்கென்றே தனியாக ஒரு அலமாரி வைத்திருக்கிறோம். இந்தப் புகைப்படங்களை எல்லாம் உங்களுக்கு அனுப்புகிறேன்.''

''வீட்டு வாசலிலேயே செல்போனிலுள்ள படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறீர்களே... மற்ற தலைவர்களுக்கும் இப்படித்தான் மரியாதைசெலுத்துவீர்களா?''

`உணவின்றித் தவித்த பூனைகள்; உதவிய மீன் தீவனம்!' - தி.மு.க எம்.எல்.ஏ செயலால் களமிறங்கிய அதிகாரிகள்
வானதி சீனிவாசன் வீடு
வானதி சீனிவாசன் வீடு

''என் வீட்டில் பாரதியார், விவேகானந்தர் தவிர வேறு எந்தத் தலைவர்களது படங்களும் இல்லை. தலைவர்களது படங்கள் எல்லாம் என் அலுவலகத்தில்தான் உள்ளன. கட்சி உத்தரவின்படி அனைத்துத் தலைவர்களுமே நேற்றைய தினம், அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம்.

இது கொரோனா காலகட்டம். வெளியே சென்று புதிதாக ஒரு புகைப்படம் வாங்கிவரவோ அல்லது அலுவலகம் சென்று புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தவோ வழியில்லை. எனவே, என் ஐபேடில் அம்பேத்கர் புகைப்படத்தை வைத்து வணங்கியிருக்கிறோம்.

அடுத்ததாக, கொரோனா தொற்று பரவுகிற இந்தக் காலகட்டத்தில், உற்றார் உறவினரையே வீட்டுக்குள் அழைத்துச்செல்ல முடியாத சூழல்தான் நிலவிவருகிறது. ஆனால், இந்த நிலையில்தான், நிவாரணப் பணிகளையும் வழங்கவேண்டியதிருக்கிறது. எனவே, நிவாரணம் பெற்றுச் செல்வோரையும்கூட வீட்டு வாசலிலேயே வரிசையாக நிற்கவைத்து, உதவிகளை வழங்கிவருகிறோம்.

அந்த வகையில், நிவாரணம் பெறவந்த எளிய மக்களின் முன்னிலையிலேயே அண்ணலின் புகைப்படத்தையும் வைத்து மரியாதைசெலுத்தினோம். இந்தப் புகைப்படத்தைத்தான் எங்கள் கட்சி அலுவலகத்துக்கும் அனுப்பியிருக்கிறேன். இதுகுறித்த வீடியோ பதிவை என் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறேன்.

இந்த விவரங்களையெல்லாம் மறைத்துவிட்டு, அவதூறு கிளப்பும் உள்நோக்கத்தோடு, இந்தப் புகைப்படத்தை விஷமிகள் பரப்பிவருகிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு