Published:Updated:

``பாரதிதாசன் சொல்லி, வள்ளுவரின் கழுத்திலிருந்த நூலை அப்பா நீக்கினார்!” ஓவியரின் மகன்

விநாயக் வே. ஸ்ரீராம்
விநாயக் வே. ஸ்ரீராம் ( புகைப்படம்: அசோக்குமார் )

``பல ஆண்டுகள் ஆராய்ந்து, வள்ளுவரின் ஓவியத்தை என் அப்பா வரைந்தார். அது, அதுவாக இருத்தல் நலம். திருவள்ளுவரின் உருவப்படத்தை மாற்றுவதும் சிலையை அவமதிப்பது போன்ற விஷயங்களும் ஒரு தமிழராக என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. "

பாரதிய ஜனதா கட்சி, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரின் அதிகாரபூர்வ ஓவியத்தை வரைந்தவர், ஓவியர் கே.ஆர்.வேணு கோபால் சர்மா. திருவள்ளுவர் புகைப்படம் பற்றிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகனும் எழுத்தாளரும் இயக்குநருமான விநாயக் வே. ஸ்ரீராமை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``உங்கள் தந்தையைப் பற்றி சொல்லுங்களேன்?''

``எங்களுக்கு சொந்த ஊர், திருப்பத்தூர் அருகேயுள்ள காமாட்சிபட்டி. மைசூர் சமஸ்தானத்துக்குச் சென்ற அப்பா, நிறைய சம்பாதித்தார். பிறகு, பம்பாயில் இந்தி டைரக்டர் பகவான்தாஸிடம் வேலைபார்த்தார்.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு சேலம் திரும்பி, சித்ரகலா என்ற சினிமா பட ஸ்டூடியோவைத் தொடங்கினார். `நாத விஜயம்', `தெய்வீகம்', `மை சன்' போன்ற படங்கள் அப்பா டைரக்‌ஷனில் உருவானவை. அப்பா எடுத்த படங்கள் சரியா போகல. சினிமாவில் அப்பாவால் ஜெயிக்க முடியல. சம்பாதித்த பொருள்கள் கரைஞ்சுக்கிட்டே போக, அந்தச் சமயத்துல பாரதிதாசனும் எஸ்.எஸ். வாசனும்தான் அப்பாவை ஓவியப்பணிக்குத் திருப்பிவிட்டாங்க. எங்க அப்பாவுக்கு ஏழு குழந்தைகள். நான் இளையமகன். ''

அதிகாரபூர்வ வள்ளுவர் Vs `காவி' வள்ளுவர்
அதிகாரபூர்வ வள்ளுவர் Vs `காவி' வள்ளுவர்

``திருவள்ளுவருக்கு அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்து விபூதி பூசியது சரியா?”

``பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் திருக்குறள் பற்றிப் பேசுகிறார். இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியிலும் பெருமை வாய்ந்த படைப்புகள் உள்ளன. ஆனால், பிரதமர் திருக்குறளை மட்டுமே மேற்கோள் காட்டிப் பேசுகிறார். பாரதத்தோட அறிவுத்திருக்கோயில் தமிழகம். அந்த அறிவுத்திருக்கோயிலின் உச்சிக்கலசம் திருவள்ளுவன். திருவள்ளுவருக்கு விபூதி பூசி காவி உடை அணிந்துதான் தெய்வமாக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வள்ளுவன் ஏற்கெனவே தெய்வம்தான். வாலறிவன் என்ற உயர்ந்த நிலையை எட்டிய வள்ளுவனுக்கு விபூதி தேவையில்லை.

எப்படி திருக்குறள் பொதுமறையோ அதேபோல, வள்ளுவனும் பொதுவானவன். இதை, நான் சொல்லவில்லை. என் அப்பாவின் கணிப்பு. பல ஆண்டுகள் ஆராய்ந்து, வள்ளுவரின் ஓவியத்தை என் அப்பா வரைந்தார். அது, அதுவாக இருத்தல் நலம். திருவள்ளுவரின் உருவப்படத்தை மாற்றுவதும் சிலையை அவமதிப்பது போன்ற விஷயங்களும் ஒரு தமிழராக என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

வள்ளுவர் சிலை
வள்ளுவர் சிலை
படம்: ரா.ராம்குமார் / விகடன்

``இந்த சர்ச்சை எழுந்த நிலையில், உங்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அரசியல்வாதிகள் பேசவில்லையே என எண்ணினீர்களா?''

``என் அப்பாவைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வைகோ என் அப்பாவின் பெயரை குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அரசியல்வாதிகள் என் தந்தையின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. ஆனால், வள்ளுவனின் ஓவியம் பற்றிய சர்ச்சை வரும்போது, என் தந்தையின் பெயரையும் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்பது என் கருத்து. ''

ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா
ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா

``வள்ளுவரின் ஓவியத்தை வரைய உங்கள் தந்தை எடுத்த சிரத்தைகள் பற்றி...''

``எங்க அப்பா 12 வயதிலிருந்து வள்ளுவரின் உருவத்தை மனதுக்குள் செதுக்கிக்கொண்டே இருந்திருக்கார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, மனதுக்குள் உருவான உருவத்தை ஓவியமாக்கினார். அப்பாவுக்கு அப்போது ஏராளமானோர் உதவினார்கள். மதினா லாட்ஜில் தங்கியிருந்துதான் 2 வருட காலமாக வள்ளுவரின் ஓவியத்தை அப்பா வரைந்தார். அப்போது, அந்த லாட்ஜை மாயவரம் பதி ஐயா லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். அங்கே தங்கிருந்த என் அப்பாவிடம் அவர் அறைக்கட்டணம்கூட வாங்கவில்லை. ஹோட்டலில் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால், பதி ஐயா வீட்டிலிருந்து அப்பாவுக்கு சாப்பாடு வரும். வள்ளுவரின் ஓவியம் இவ்வளவு அற்புதமாக அமைந்ததற்கு அப்பாவின் நண்பர்களும் அவர்கள் செய்த உதவிகளும் முக்கியக் காரணம்.''

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? -  ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்

``வள்ளுவர் பிராமணராகத்தான் இருந்திருக்க முடியும். அதனால் அவருக்கு பூணூல் அணிய வேண்டுமென்று கருணாநிதியிடம் சிலர் சொன்னதாகவும், அதனால் வள்ளுவர் ஓவியம் பூணூலுடன்தான் வரையப்பட்டதாகவும், அதை மறைக்கவே வெள்ளை உடை அணிவிக்கப்பட்டதாகவும் ஒரு வதந்தி பரவுகிறதே?"

``கை கால் இல்லாத புரளி இது. அப்படியெல்லாம் ஓவியம் வரையப்படவில்லை. ஓவிய சாஸ்திரப்படி, ஓவியங்கள் வெற்றுக் கழுத்தாக இருக்கக்கூடாது. அறிவுப் பேராசான் வள்ளுவனுக்கு தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ மாலை அணிவிக்க முடியாது. ஆகவே, பருத்தி நூலில் சரடு செய்து தொங்குவது போன்று அப்பா வள்ளுவரின் ஓவியத்தை வரைந்தார்.

விநாயக் வே. ஸ்ரீராம்
விநாயக் வே. ஸ்ரீராம்

ஓவியத்தைப் பார்த்த பாரதிதாசன், `இதற்கும் ஏதாவது சாதி முத்திரை குத்திவிடுவார்கள்; அதனால், அந்த நூலை நீக்கவும்' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். பாரதிதாசனின் வேண்டுகோளின்படி, வள்ளுவனின் கழுத்தில் இருந்த பருத்தி நூலை அப்பா நீக்கினார். இந்த விஷயத்துக்கு கை கால் முளைத்து, `வள்ளுவன் உடலில் இருந்த பூணூலை நீக்கிவிட்டார் சர்மா' என்று வதந்தி கிளப்பிவிட்டார்கள். 'திருவள்ளுவரை வரைவதற்கும் பிராமணர்தான் தேவைப்படுகிறார்' என இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதை நான் பார்த்தேன். வள்ளுவர் போன்றே என் தந்தையும் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது என் கருத்து.''

``உங்கள் தந்தை எத்தனை ஓவியங்கள் வரைந்திருக்கிறார்?"

``தன் வாழ்நாளில் வெறும் 12 ஓவியங்கள்தான் அப்பா வரைந்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு படைப்புமே முத்திரை பதித்தவை. ஒவ்வொரு ஓவியத்தையும் வரைய அப்பா பெரும் சிரத்தை எடுத்திருக்கிறார். அதனால், சொற்ப ஓவியங்களே வரைந்தார். வள்ளுவர் தவிர தமிழ்த்தாய், காயிதே மில்லத், அண்ணாதுரை, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்களின் உருவப்படங்களையும் அப்பா வரைந்திருக்கிறார்."

அடுத்த கட்டுரைக்கு